சினிமாவை விட பல பயனுள்ள பொழுதுபோக்குகள் வந்து விட்டன என்று தமிழக மக்கள் நினைக்க ஆரம்பித்து இருக்கும் இந்தச் சூழலில், தமிழ் சினிமாக்கள் , தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிக நடிகையர், தயாரிப்பாளர்கள் பற்றிய செய்திகளை, திரைப்பட பூஜை, ஆடியோ வெளியீடு, விளம்பர நிகழ்ச்சிகள், முன்னோட்ட விழா ஆகிய திரைப்பட நிகழ்வுகளை மக்களுக்கு தொடர்ந்து கொடுத்து, மக்களின் சினிமா ஆர்வத்தை இன்னும் மங்காமல் காத்துக் கொண்டிருக்கும் மகத்தான பணியைச் செய்பவர்கள் திரைப்பட ஊடகவியலாளர்கள் என்ற உண்மை அறிவார்ந்த அனைவருக்கும் தெரிந்ததே!
நாளிதழ்கள், வார/மாத இதழ்கள், தொலைக்காட்ச , இணையத்தளம், பண்பலை உள்ளிட்ட ஊடகங்களில் பணியாற்றும் இந்த சினிமா ஊடகவியலாளர்கள் வெயிலென்றும் மழையென்றும் பாராமல் ஓய்வொழிச்சல் இல்லாமல் திரையுலக பிரமுகர்கள் கூப்பிடும் இடங்களுக்கெல்லாம் ஓடி ஓடி செய்திகளைக் கொடுத்து சினிமா உலகுக்கும் மக்களுக்கும் பாலமாக இருப்பது அனைவருக்கும் தெரியும்.
ஆனால் இப்போது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர் சங்கம் , இயக்குநர்கள் சங்கம், தொழிலாளர் சம்மேளனம் ஆகியவற்றைச் சேர்ந்த சிலர் தமிழ்த் திரைப்படப் பாதுகாப்புப் படை என்ற அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு ஒரு முட்டாள்தனமான முடிவை எடுத்துள்ளனர்.
அதன்படி இனி பூஜை முதல் பொய்யான ‘சக்சஸ் மீட்’டுகள் வரை, தமிழ்த் திரைப்படம் தொடர்பான அனைத்து நிகழ்சிகளுக்கும் ஒரு சில நாளிதழ்கள், ஒரு சில வார இதழ்கள், ஒரு சில தொலைக்காட்சிகளுக்கு மட்டும்தான் அனுமதி என்றும் மற்றவர்கள் வரக் கூடாது என்றும் முடிவை மேற்கண்ட அமைப்புகள் எடுத்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
இதில் கொடுமை என்னவென்றால் தமிழக அரசின் கேபிளில் கூடத் தெரியாத, சென்னையைத் தாண்டி யாரும் அறிந்திராத புதிய தலைமுறை சேனல், யாருமே பார்க்காத புதுயுகம் சேனல், இன்னும் உருப்படியாக ஒளிபரப்பையே துவங்காத வேந்தர் டி.வி. ஆகியவை அவர்களின் அனுமதிப் பட்டியலில் இருப்பதுதான் நகைச்சுவை.
இதில் உச்சகட்டமான பைத்தியக்காரத்தனம் ஒன்றும் இருக்கிறது.
தமிழ் சினிமா செய்திகளை தமிழ் நாட்டுக்கு, ஏன் இந்தியாவுக்கும் அப்பால் உலகம் எங்கும் உள்ள தமிழ் மக்களுக்கு அனுப்பி, தயாரிப்பாளர்களுக்கு எஃப்.எம்.எஸ் எனப்படும் அயல்நாட்டு வியாபாரம் நடக்கக் காரணமாக இருக்கிற.. வெள்ளிக் கிழமை ஏழு படம் வந்தால் ஏழு படத்துக்கும் ஒரே நாளில் விமர்சனம் எழுதி ரசிகர்களுக்கு அந்தப் படங்களை எல்லாம் அறிமுகப்படுத்துகிற.. ஒரு படம் பற்றிய பலப் பல செய்திகளை ஓரிரு நாட்களுக்குள் மீண்டும் மீண்டும் எழுதி அதை மற்ற சமூகத்தளங்களில் இணைத்து ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை அந்தச் செய்திகளுக்கு உயிர்கொடுக்கும் அற்புதமான சேவையைச் செய்கிற.. ராட்சஷ விஞ்ஞான பலம் கொண்ட இணையத்தளப் பத்திரிக்கைகளை..
‘அவை ஒன்று கூட தேவை இல்லை. அவர்கள் யாரும் திரைப்பட நிகழ்ச்சிகளுக்கு வரக் கூடாது’ என்று ஒரு மக்குத்தனமான தீர்மானம் போட்டு இருப்பதன் மூலம் இவர்கள் எல்லோருமே பரமார்த்தகுருவின் சீடர்கள் என்பது தெளிவாகப் புரிகிறது.
மக்கள் தரும் வரிப் பணத்தில் திரளும் அரசுப் பணத்தில் மானியம், நிகழ்ச்சிகள் நடத்த நன்கொடை, விருதுகள் எல்லாம் வாங்கிக் கொண்டு, பொது மக்களின் நுகர்வுக்காக எடுக்கும் படம் சம்மந்தப்பட்ட விழாவுக்கு வரக் கூடாது என்று எந்த ஊடகத்தையும் தடுக்கும் உரிமை தங்களுக்கு இல்லை என்ற அடிப்படை அறிவு கூட இவர்களுக்கு இல்லை என்பது ஒரு புறம் இருக்க,
இவர்கள் ஒதுக்கும் ஊடகங்களில் இன்று பணியாற்றுபவர் நாளை மற்ற ஊடகங்களுக்கு போவார்கள். இன்று இணையத்தளங்களில் பணியாற்றுபவர் நாளை பெரிய ஊடகங்களுக்கு போவார்கள். இன்று புறக்கணிக்கப்பட்டவர்களின் கோபத்துக்கு நாளை பதில் சொல்ல வேண்டி வரும் என்ற தொலைநோக்குப் பார்வையும் இல்லாதவர்கள் என்பதும் புரிகிறது.
இப்படி ஊடகங்களைத் தடுப்பதன் விளைவாக, இவர்களது படங்கள் இருட்டு சந்தில் விற்கப்படும் கருப்பு மை போல யாருக்கும் தெரியாமல் போகும் என்பதுதான் உண்மை என்றாலும்,
தமிழ் சினிமாவின் நலனுக்காக உழைக்கும் சினிமா ஊடகவியலாளர்களை அவமானப்படுத்திய இந்தத் தமிழ்த் திரையுலகக் கிருமிகளின் செயலுக்கு தமிழ்த் திரைப்பட ஊடகங்கள் சம்மேளனம் பதில் புறக்கணிப்பை மேற்கொள்வதோடு கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்கிறது .
அதன் முக்கிய அங்கமாக, தமிழ்த் திரைப்பட ஊடகவியாலாளர்கள் சம்மேளனம் பின் வரும் வலிமையான தீர்மானங்களை 21- 09- 2014 முதல் முழுமையாக அமல்படுத்துகிறது.
*பெரும்பான்மை ஊடகங்களை தடுத்தும் இணையப் பத்திரிகைகளை முழுமையாகப் புறக்கணித்து அவமானப்படுத்தியும், ஊடகக் குடும்பத்தில் வஞ்சகமான பிரிவினையை ஏற்படுத்துவதற்காக நரித்தந்திர வேலைகள் செய்கிற, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உருவாக்கி இருக்கிற தமிழ்த் திரைப்படப் பாதுகாப்புப் படைக்கு தமிழ்த் திரைப்பட ஊடகவியாலாளர்கள் சம்மேளனம் சார்பில் வலுவான கண்டனம் தெரிவிக்கிறோம்.
*இதற்குக் காரணமாக இருந்த தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்த டி.சிவா, டி.ஜி.தியாகராஜன் , எல்.எல்.எம். முரளிதரன், ஏ.எல் அழகப்பன், இயக்குநர் சங்கத்தைச் சேர்ந்த விக்ரமன், ஆர்.கே. செல்வமணி, வி.சேகர், நடிகர் சங்கத்தைச் சேர்ந்த ஆர்.சரத்குமார், ராதா ரவி, தொழிலாளர் சம்மேளனத்தைs சேர்ந்த சிவா ஆகியோர் சம்மந்தப்பட்ட ஆதரவு செய்திகளையும் இனி வரும் காலங்களில் பரப்புவது இல்லை என்று ஏக மனதாக முடிவெடுக்கிறோம்.
*தமிழ் இன உணர்வோடு புலிப் பார்வை படத்தை எதிர்த்த ஒரே காரணத்துக்காக மனதில் வஞ்சம் கொண்டு, ஒட்டுமொத்த இணையத்தளங்களையும் முடக்க நினைத்ததோடு மற்ற ஊடகங்களையும் சிறுமைப்படுத்தும் இந்தப் பிரிவினை சூழ்ச்சிக்கு முழு முதற்காரணமாக இருந்த ராஜபக்சேவின் நண்பர் மற்றும் ஏஜன்ட்டான அம்மா கிரியேசன்ஸ் டி.சிவா, மற்றும் அவர் இப்போது பணி புரியும் வேந்தர் மூவீஸ் சம்மந்தப்பட்ட படங்கள் பற்றிய எந்த நேர்மறைச் செய்திகளையும் ஆதரவான செய்திகளையும் இனி எக்காலத்திலும் பிரசுரிப்பது இல்லை என்று ஏக மனதாக முடிவெடுக்கிறோம்.
*நிரந்தர நிலைய வித்வான்கள் போல இருந்து கொண்டு, ஒரு நாளைக்கு நான்கு முறை போட்டோவுக்கு எக்கி எக்கி போஸ் கொடுக்கும் பழக்கமுள்ள மேற்படி டி,.சிவா, டி.ஜி.தியாகராஜன், ஏ.எல் அழகப்பன், விக்ரமன், ஆர்.கே. செல்வமணி, வி.சேகர் , தொழிலாளர் சம்மேளனத்தை சேர்ந்த சிவா ஆகியோரின் புகைப்படங்களுக்கு இனி வரும் காலங்களில் படத்தின் பூஜை, ஆடியோ வெளியீடு , விளம்பர நிகழ்ச்சி உள்ளிட்ட எந்த நிகழ்ச்சி பற்றிய செய்தியிலும் இடம் தர மாட்டோம் என்று முடிவு செய்கிறோம்.
மேற்படி நிலைய வித்வான்கள் பங்கு பெறுகிற திரைப்பட விழாக்களின் புகைப்படங்களைப் பிரசுரிப்பதில்லை என்றும் முடிவுக்கு வருகிறோம்.
*காசாசை பிடித்து தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தையும் தயாரிப்பாளர் சங்கத்தையும் கல்வி வியாபாரி பச்சைமுத்துவிடம் சிலர் அடகு வைக்க முயல்வதைத் தடுத்து, இந்தச் சங்கங்களை சுயமரியாதையோடு செயல்பட வைக்க வேண்டும் என்று தமிழக முதல்வரைத் தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறோம்
*தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தைச் சேர்ந்த சிவா, அகில இந்தியத் திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது மகிழ்ச்சியடைந்ததற்கு இப்போது வருத்தப்படுகிறோம். ஊடகவியலாளர்களை அவமானப்படுத்தும் கேவலமான செயலுக்கு துணை போன இந்த சிவாவுக்கு, அகில இந்தியத் திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் பதவி வகிக்க அருகதை இல்லை என்பதால், உடனே அவரது பதவியைப் பறிக்க வேண்டும் என்று, அகில இந்தியத் திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்துக்கு, தனிப்பட்ட விதத்தில் அழுத்தம் கொடுக்கும் பணிகளைச் செய்ய இருக்கிறோம்.
* பத்திரிகையாளர்களுக்கு நடந்திருக்கும் அவமானம் குறித்து இந்திய பிரஸ் கவுன்சிலுக்கு முறைப்படி தெரிவிக்க இருக்கிறோம்.
*இன்றைய தினத்தில் இருந்து ஒரு மாத காலத்துக்கு திரைப்படம் சம்மந்தமான அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒட்டு மொத்தமாகப் புறக்கணிக்கிறோம் .
*மேற்படி அரைவேக்காட்டுத்தனமான தமிழ்த் திரைப்படப் பாதுகாப்புப் படையின் அனுமதிப் பட்டியலில் இருக்கும் ஊடகவியாள நண்பர்கள், இதை ஒட்டுமொத்த ஊடகவியலாள சமூகத்துக்கும் ஏற்பட்ட அவமானமாகக் கருதி, இந்தத் தீர்மானங்களுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் தருமாறு நட்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
*புறக்கணிக்கப்பட்ட ஊடகங்களில் பணியாற்றும் ஊடகவியலாள நண்பர்கள், தாங்கள் பணியாற்றும் நிறுவனங்களுக்கு நிலைமையை உணர்த்தி, நமது நியாயமான புறக்கணிப்புக்குத் துணையிருக்கும்படி கேட்டுக் கொள்ள வேண்டுகிறோம்.
*இது குறித்த செயல்பாடுகளுக்கும், எதிர்கால திட்டமிடல் குறித்து ஊடகவியலாளர்களை ஒருங்கிணைக்கவும் திரு. பிஸ்மி, திரு. சங்கர் , திரு. தேனி கண்ணன், திரு. வின்சென்ட், திரு. ரமேஷ்குமார் ஆகியோரைக் கொண்ட ஒருங்கிணைப்பாளர்களின் குழு அமைக்கப்பட்டுள்ளது.
*மேற்படி தீர்மானங்களுக்கு எல்லோரும் ஒருமித்த ஒட்டுமொத்த ஆதரவை வழங்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்
மேற்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டு உடனடியாக அமலுக்கு வந்தன.