Shadow

தி ஜங்கிள் புக் விமர்சனம்

The Jungle Book Tamil Review

தொன்னூறுகளில், சரியாகச் சொல்லணும் எனில் 1993 ஆம் ஆண்டு ஞாயிற்றுக்கிழமைகள் மதியம் 12:30 மணிக்கு தூர்தர்ஷன் பார்த்த பாக்கியவான்கள் மனதில் இருந்து அகலாப் பாத்திரங்கள் மோக்லி, பகீரா, அகெலா, பாலு, ஷேர் கான் போன்றோர்கள். அப்பாத்திரங்களை பெரிய திரையில் உலாவ விட்டு, பாக்கியவான்களை 20 வருடங்களுக்கு முன் அழைத்துச் சென்று அதி பாக்கியவான்கள் ஆக்கியுள்ளது டிஸ்னி.

ஓநாய்களால் வளர்க்கப்படும் மனிதக் குட்டி மோக்லியைக் கொல்லத் துடிக்கிறது ஒற்றைக் கண் புலியான ஷேர் கான். மோக்லி எவ்வாறு ஷேர் கானிடமிருந்து தப்புகிறான் என்பதே படத்தின் கதை.

படம் தரும் விஷூவல் அனுபவத்தை, ‘ஜங்கிள் சஃபாரி’ என்றே சொல்ல வேண்டும். காட்டுக்குள் பிரவேசித்து விட்ட பரவச உணர்வைத் துல்லியமாகத் தருகிறது படம். முதலையின் பற்களை குருவிகள் அமர்ந்து சுத்தம் செய்வது, உறுமும் ஷேர் கானின் திடுக் க்ளோஸ்-அப், நம்மை உரசுவது போல் மிதந்து வரும் கட்டை, மரத்தின் விழுதுகள், கண் முன்னே விரியும் பரந்துபட்ட பள்ளத்தாக்கு என படத்தின் முதற்பாதி 3டி எஃப்க்ட்ஸ் அற்புதமாக உள்ளது. அதை ஒப்பிடும் பொழுது, இரண்டாம் பாதியில் இத்தகைய எஃபெக்ட்ஸ் கம்மி எனினும், அதற்குள் நாம் படத்தில் மூழ்கி விடுவோம். மலை முகட்டில் இருக்கும் தேனாடையை மோக்லி தன் யுக்திகள் மூலம் எடுக்கும் பொழுது, அவன் கையிலிருந்து நழுவும் கோல் நம் தலை மீது விழுகிறதே என பார்வையாளர்கள் ‘ஹே’ எனச் சத்தத்துடன் பின்னால் நகர எத்தனித்து பின் சிரிக்கிறார்கள் (இந்தச் சிலிர்ப்பு, தி வாக் படத்தில் பயிற்சியின் பொழுது பிலிப் நழுவவிடும் கழியால் ஏற்படும்).

மோக்லியாக நீல் சேதி நடித்துள்ளார். சொன்னதைக் கேட்கும் மிக மிக நல்ல சிறுவன் என்ற பிம்பத்தை உருவாக்குகிறார். ‘மீன் குஞ்சுக்கு நீந்தச் சொல்லித் தரணுமா?’ எனக் கேட்கப்படுவது போல், ‘இந்த’ மோக்லி தன்னை ஓநாயாகப் பாவித்துக் கொள்ளாமல், மனிதக் குட்டியாகவே தன்னை உணர்கிறான். நம்மையும் உணரச் செய்கிறான். நீர்நிலையில் தண்ணீர் குடிப்பதிலிருந்து, அனைத்திற்குமே பிரத்தியேகமான யுக்திகள் அவனுக்கு இயல்பாக வருகிறது. ஓநாய்கள் போல் மோக்லி சில காட்சிகளில் ஊளையிட்டாலும், அவன் காட்டைச் சேர்ந்த மற்றொரு உயிர் என்ற உணர்வை நம்மிடம் படம் எங்குமே உருவாக்கவில்லை. அத்தனை மென்மையாக இருக்கிறது நீல் சேதியின் உடல்மொழியும், முக பாவனைகளும். நினைவில் நிற்கும் மோக்லி, தன்னைத் தற்காத்துக் கொள்ளவும், காட்டில் வாழத் தனக்குத் தகுதியுள்ளதென நிரூபிக்கும் வகையிலும், கையில் “பூமராங்” வைத்திருப்பான். ஜஸ்டின் மார்க்ஸின் திரைக்கதையில் அது மிஸ்ஸிங். பூமராங் இல்லாமல் மோக்லி பாத்திரம் குறைவுடைவதாகவே தோன்றுகிறது. நம்மை நோக்கி வரும் பூமராங், 3டி-இல் அற்புதமானதொரு சிலிர்ப்பைத் தந்திருக்குமே என்ற ஏக்கத்தைக் கொடுத்துவிடுகிறார் இயக்குநர் ஜோன் ஃபவ்ரே.

இந்தப் படத்தை, ருட்யார்ட் கிப்ளிங்கின் கதாபாத்திரங்களை மட்டும் எடுத்துக் கொண்டு மேற்கத்திய நோக்கில் எடுக்கப்பட்டுள்ள ‘தி ஜங்கிள் புக்’ என்றே சொல்லவேண்டும். ஒன்று, ஆசியர்களைக் கவர்ந்தது போல ஓநாய்கள் மேற்கத்தியர்களைக் கவர்ந்ததில்லை. அகேலா எனும் ஓநாய்க் கூட்டத்தின் தலைவனை ஷேர் கான் சட்டெனக் கவ்வித் தூக்கியெறிந்து கொன்று விடுகிறது. அதற்கு மற்ற ஓநாய்களும் எதிர்ப்பைக் காட்டுவதில்லை. பணிந்தே போவது போல் காட்சியளிக்கின்றனர். ஓநாய்களுக்குப் பொருந்தாத குணமது. இரண்டு, மேற்கத்தியர்களுக்கு பாம்பு என்றுமே சாத்தானின் உருவகம்தான். ‘கா’ எனும் அரிய வகை மஞ்சள் நிற மலைப்பாம்பு மோக்லியின் நண்பர்களில் ஒருவராகவே சித்தரித்திருப்பார் ருட்யார்ட் கிப்ளிங். ஆனால், 1967 முதலே டிஸ்னி, கா-வை வில்லனாகவே சித்தரித்து வருவது குறிப்பிடத்தக்கது. கா சொல்லும் சிவப்பு மலர் கதையும், அப்பொழுது வரும் அனிமேஷன் மூலம் கதை சொல்லும் யுக்தியும் அட்டகாசம். மூன்று, மாவீரர் அலெக்ஸாண்டர் தொடங்கி மேற்கத்தியர்கள் அனைவருக்குமே யானை என்றால் இன்று வரை வியப்பும் பிரமிப்புமுமே! யானைக் கூட்டம் எப்படி காட்டின் சமநிலையைப் பாதுகாக்க உதவுகிறது என்ற ஜஸ்டின் மார்க்ஸின் திரைக்கதை உண்மையிலேயே அபாரம்.

‘தி ஜங்கிள் புக்’-கை நெருக்கமாக உணரக் காரணம், கதையின் களம் ‘இந்தியக்காடு’ என்பதே! கிங் லூயினுடைய இருப்பிடமான கோயிலைப் பார்த்ததும், ‘பிரகாரமும் தூண்களுமுடைய இந்தக் கோயிலைக் கட்டினது நம்மாளா தான் இருக்கும்’ என்ற உணர்வு எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. ருட்யார்ட் கிப்ளிங்கின் கதைப்படி, கதை நிகழும் களம் மத்திய பிரதேசத்திலுள்ள ஒரு காடாகும் (அங்கோர்வாட்டில் கோயில் கட்டினவங்க மத்திய பிரதேசத்தில் கட்டியிருக்க மாட்டாங்களா என்ன?) கிங் லூயி கோபுரச் சிதிலங்களுக்கு அடியில் சிக்கியதும் குரங்குகள் அவரைக் காப்பாற்றக் காட்டும் வேகமும், உழைப்பதென்றால் என்னவென்று அறியாத கரடி பாலுவின் சோம்பலும் ரசிக்க வைக்கின்றன.

படத்தில் இன்னொரு அற்புதமான பாத்திரம் ரக்ஷா எனும் மோக்லியின் அம்மாவான பெண் ஓநாய். அதன் உடல்மொழியும், பார்வையும், அது பேசும் வசனங்களும் மிக அற்புதமாக உள்ளது. எனினும், அகேலாவின் மரணத்துக்குப் பிறகு ஷேர்கானின் பிடியில் அதன் குடும்பம் சிக்கியிருப்பதைப் பயத்துடன் பார்க்கிறது ரக்ஷா. முன்பே சொன்னது போல், அது ஓநாய்களின் குணமன்று. தன் குட்டிகளைக் காக்கும் முயற்சியில், பெண் ஓநாய்கள் வழக்கத்துக்கு மீறிய ஆக்ரோஷத்துடன் போராடும் குணம் கொண்டவை. அதைச் சுட்டும் வகையில்தான், ‘காப்பவர் (இரட்சிப்பவர்)’ எனப் பொருள் வரும்படி ருட்யார்ட் கிப்ளிங் அந்த ஓநாய்க்கு ரக்ஷா எனும் பெயரையே குறியீடாக வைத்திருப்பார்.

ஜஸ்டின் மார்க்ஸ் இந்தியர்களைக் கிண்டல் செய்துள்ளாரா அல்லது நம்மைப் போன்று நிறைய தமிழ்ப் படங்கள் பார்ப்பவரா எனத் தெரியவில்லை. ‘என்னது அகேலாவை ஷேர் கான் கொன்னுடுச்சா?’ என்று தனது வளர்ப்புத் தந்தையின் மரணத்துக்குப் பழி வாங்கச் சிட்டாய்ப் பறக்கிறான் “மனிதக்குட்டி”யான மோக்லி. அதர்மத்துக்கு எதிராக ஓநாய்களும் ஒரு வழியாக கடைசியில் ஒன்று சேர்கின்றன. பழி வாங்குவது மனிதக்குட்டிக்கே உரித்தான இயல்பென மற்ற மிருகங்களும் உணர்ந்து உதவி செய்கின்றன.

அடுத்து யார் வருவார்கள், என்ன நடக்கும் என அசை போட்டவாறு பெரியவர்களும், படத்தை ஆச்சரியம் பொங்கக் குதூகலத்துடன் சிறுவர்களும் ரசிக்கின்றனர். அனைவரையும் ரசிக்க வைக்கும் தரமான விஷூவல் படம் என்பதாலே, இந்தியாவில் வசூல் சாதனை புரிந்து வருகிறது ‘தி ஜங்கிள் புக்’. மறக்க முடியாததொரு அனுபவத்தைப் பெறவும், அவ்வனுபவத்தை உங்கள் வீட்டுச் சிறுவர்களுக்குத் தரவும், பொன்னான வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது டிஸ்னி நிறுவனம்.