Shadow

நமது விமர்சனம்

Namadhu thirai vimarsanam

‘நாம் அனைவரும்’ எனப் பொருள்படும் “மனமன்த்தா” என்ற தெலுங்கு படத்தை ‘நமது’ என தமிழில் மொழிமாற்றம் செய்துள்ளனர்.

அபிராம்க்கு ஐரா மீது காதல்; சிறுமி மஹிதாவிற்கு சாலையில் வாழும் குட்டி பையன் வீர் மீது பாசம்; காயத்திரிக்கு தன் குடும்பத்தின் மீது அலாதி அன்பு; சாய்ராம்க்கு குடும்பச் சூழலைச் சமாளிக்க மேனேஜராக பிரமோஷன் வேண்டும். இந்த நான்கு கதைகளின் திரட்டுதான் ‘நமது’ படமாக நீள்கிறது. வெவ்வேறு சூழலை எதிர்கொள்ளும் நான்கு நபர்கள்; நான்கு கதைகள்; அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே ஏற்படும் நான்கு சங்கடங்கள் என நல்லதொரு ஃபீல் குட் மூவிக்கு உத்திரவாதம் அளித்துள்ளார் இயக்குநர் சந்திரசேகர் ஏலட்டி.

அபிராமாக விஸ்வாந்த் நடித்துள்ளார். காதலில் விழும் நன்றாகப் படிக்கும் மாணவன் பாத்திரத்துக்குப் பொருந்துகிறார். ஆனாலும், அவரது முகத்தில் தெரியும் அந்நியத்தன்மை காரணமாக மனதில் பதிய மறுக்கிறார். ஐராவாக அனிஷா நடித்திருக்கிறார். அவர்களுக்கு இடையேயான நட்பும், விஸ்வாந்தின் ஒருதலைக் காதலும் எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தாமல் தேமோவென காட்சிகளாக நகர்கின்றன.

மஹிதாவாக ரைனா ராவ் நடித்துள்ளார். தொடக்கத்தில் அவரைப் பார்த்ததும் ஏற்படும் குதூகலம் போகப் போகக் குறைகிறது. ஒரு மாணவனை, ‘நியூ அட்மிஷன்’ என மிகச் சுலபமாக பள்ளியில் சேர்த்து விடுவதெல்லாம் ரொம்ப ஓவர். வீராக நடித்திருக்கு அந்தச் சிறுவன் அற்புதமாக நடித்திருக்கிறான். ‘நெருப்புடா’ என அவன் காட்டும் கெத்தும், வெறும் தாளைக் காட்டி காசு என மகிழும் அவனது குழந்தைத்தனமும் கண்ணிலேயே நிற்கின்றன.

மிடில் கிளாஸ் மனைவிகளின் மனநிலையைப் பிரதிபலிக்கும் காயத்திரியாக கெளதமியும், மகாலட்சுமியாக ஊர்வசியும் கலக்கியுள்ளனர். புடவைகளை விற்கப் போகும் இடத்தில் ஊர்வசிக்கு ஏற்படும் ‘ஷாக்’ நல்ல நகைச்சுவை. ‘கல்யாணத்திற்குப் பின் நான் படித்தவள் என்பதே எனக்கு மறந்துடுச்சு’ என கெளதமி சொல்வதுதான் வீட்டுப் பெண்களின் யதார்த்த நிலை. அதே போல், “பணமில்லாம இருக்கலாம். ஆனா குணமில்லாம இல்லை” என அழுமிடமும் மிடில் கிளாஸ் மனநிலையைக் கச்சிதமாக வெளிபடுத்தியுள்ளார். குடும்பத்தினருக்கு அனைத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்யும் தன்னைக் குடும்பத்தினர் அப்படி நினைக்கவில்லையோ என ஏங்கும் பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்துகிறார் கெளதமி.

மலையாளப் படங்கள் போல் நிதானமாகச் சென்றாலும், அவைகள் தரும் உணர்வைத் தர இப்படம் தவறி விடுகிறது. ஏதோ ஒரு புள்ளியில் சற்றுத் தள்ளி அந்நியமாகவே முழுப் படமும் இருக்கிறது. தமிழ் வாத்தியாராக வரும் வெண்ணெலா கிஷோரின் முக பாவனைகள் நகைச்சுவைக்கு உத்திரவாதம் அளிக்கிறது. வீட்டுக்கு எடுத்துச் செல்ல, சூப்பர் மார்க்கெட் மார்க்கெட் ஊழியர் ஒருவர் காய்கறிகளை டேமேஜ் செய்யும் யுக்தி அருமை.

சூப்பர் மார்க்கெட் ஸ்டாக் மேனஜர் சாய்ராமாக நடித்திருக்கும் மோகன் லால் வழக்கம் போல் அசத்தியுள்ளார். சேலரியைக் கூட ஷேலரி என உதடுகளுக்குப் பொருந்தாத வசன உச்சரிப்பைக் கொஞ்சம் பொறுத்துக் கொண்டால் மோகன்லாலின் அற்புதமான நடிப்பை ரசித்து மகிழலாம். அவருக்கு ஏற்படும் பதற்றத்தை மனிதர் அநாயாசமாக நமக்குக் கடத்தி விடுகிறார். தன்னால் ஒரு குடும்பம் சிதைந்து விடுமோ என்ற குற்றவுணர்வில் அவர் வருந்தி, வாழ்வின் மீதான புரிதலை நோக்கி நம்மைச் சிந்திக்க வைக்கிறார்.