Shadow

நானும் ரெளடிதான் விமர்சனம்

நானும் ரவுடிதான் விமர்சனம்

தன்னை ரெளடி என நம்பும் ஒருவனிடம், அவனது காதலி ஒரு கொலை செய்யச் சொல்கிறாள். பின் என்னாகிறது என்பதுதான் கதை.

தனி ஒருவன், மாயா முதலிய படங்களைத் தொடர்ந்து, இந்தப் படத்திலும் கோலேச்சியுள்ளார் நயன்தாரா. காது கேளாத காதம்பரியாகக் கலக்கியுள்ளார். பொதுவாக, இது போன்ற படங்களில் அல்லது பெரும்பாலான தமிழ்ப் படங்களில் நாயகியை ஊறுகாய் போலவே உபயோகப்படுத்துவார்கள். இப்படத்தின் வெற்றி, நாயகிக்குக் கொடுத்த முக்கியத்துவத்தில் இருந்தே தொடங்குகிறது.

இந்தப் படத்தின் இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம், கதாபாத்திரத் தேர்வுகள். விஜய் சேதுபதி, பார்த்திபன் என நீங்கள் யாரை எப்படி திரையில் காண விரும்புவீர்களோ, அவர்களை அப்படியே திரையில் கொண்டு வந்துள்ளார் விக்னேஷ் சிவன். அதே போல், வேதாளம் பட டீசரில் வரும் ‘தெறிக்க விடலாமா?’, புலி இசை வெளியீட்டில் டி.ஆர். பேசியது, தனுஷின் ‘இல்ல?’ என மக்களின் கவனத்தை ஈர்த்தவைகளை சாதுர்யமாக ‘டப்பிங்’கின் பொழுது சேர்த்துவிட்டிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன். அதற்குத் துணையாக, RJ பாலாஜி இணைந்து கொண்டுள்ளார்.

சிறு வயது பாண்டி, ‘நான் கடவுள்’ இராஜேந்திரனிடம் பெறும் ஞானத்தில் இருந்து கலகலப்பாகத் தொடங்கும் படம், முடியும் வரை அதே கலகலப்பைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. சிறு வயது பாண்டியாக நடிக்கும் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா முதல், ராகுலாக வரும் ராஜவேல் எனும் முதியவர் வரை படத்தின் அனைத்துக் கதாபாத்திரங்களுமே ஈர்க்கின்றனர். ஆனந்த்ராஜ், பார்த்திபன், மன்சூர் அலிகான் என படத்தின் இரண்டாம் பாதியில் இவர்கள் தோன்றும் பொழுதெல்லாம் திரையரங்கம் சிரிப்பொலியில் மூழ்குகிறது.

அஜித்துக்கே பாட்டெழுதிய விக்னேஷ் சிவன், தன் படத்தில் சும்மா இருப்பாரா? ‘நீயும் நானும்’ என்ற தாமரையின் பாடலைத் தவிர, மற்ற அனைத்தையுமே இவர்தான் எழுதியுள்ளார். எளிமையாக, கலகலப்பூட்டுவதை மட்டுமே மனதில் கொண்டு ரசிக்கும்படி வசனங்களை எழுதியுள்ளார் விக்னேஷ் சிவன்.

‘போனோமா, ஜாலியாகச் சிரிச்சோமான்னு இருக்கணும்’ என்பவர்களுக்கான படம்.