பகிரி என வாட்ஸ்-அப்பை (WhatsApp) மொழிபெயர்த்துள்ளனர். காதலை நாயகனும் நாயகியும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்கின்றனர்; சமூக விஷயங்களை குழுவில் மக்கள் பகிர்ந்து கொள்கின்றனர். ஆக, இப்படி வாட்ஸ்-அப்பில் உணர்வுகளும் கருத்துகளும் பகிர்ந்து கொள்ளப்படுவதால், வாட்ஸ்-அப் ‘பகிரி’ ஆனது போலும்! (படத்தைத் தயாரித்துள்ள நிறுவனத்தின் பெயர் ‘லட்சுமி கிரியேஷன்ஸ்’. உலகிலுள்ள அனைத்து மொழிகளிலும் அந்நிறுவனத்தின் பெயர் அதேதான். பெயர்ச்சொற்களை மொழிபெயர்க்கக் கூடாது. தகவல் பரிமாற்றச் செயலியான ‘வாட்ஸ்-அப்’-பை எல்லா மொழியிலும் அப்படியே அழைக்கப்படுவதுதான் நியாயம்).
நாஸ்மாக்கில் வேலை செய்யவேண்டும் என்பது முருகனின் லட்சியம். அதற்கு லஞ்சமாக 5 லட்சம் தேவைப்படுகிறது. விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவனது இந்த உன்னத லட்சியம் நிறைவேறியதா இல்லையா என்பதே படத்தின் கதை.
நாஸ்மாக் (NASMAC) என்பதன் விரிவாக்கம், ‘நம்மூர் சோமபானம் மார்க்கெட்டிங் கார்ப்ரேஷன்’ ஆகும். படத்தில் இப்படிச் சின்னஞ்சிறு சுவாரசியங்கள் ஆங்காங்கே இழையோடுகிறது. படத்தின் தொடக்கமே , ‘குடிக்கு யார் காரணம்?’ எனக் கட்சிகளுடனான தொலைக்காட்சி ஒன்றின் சூடான விவாதத்தோடு தொடங்குகிறது. திறந்திடு சீசே போல் குடிப் பழக்கத்துக்கு எதிராய்ப் பேசும் சீரியஸ் படமோ என்ற தோற்றத்தை முன் வைக்கிறது. ஆனால், பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பினூடே ‘டாஸ்மாக்’ கடை நடத்துவது சாதாரண விஷயமில்லை என்ற பிரமிப்பைத்தான் படம் ஏற்படுத்துகிறது.
நாயகனின் லட்சியத்திற்குத் துணை நிற்கும் நாயகியும், அவரது அம்மாவும் தெருத் தெருவாக நாஸ்மாக் கடை வைக்க இடம் பார்க்குமிடம் அதகளம். நாயகியாக ஷ்ரவ்யா அறிமுகமாகியுள்ளார். மனதில் பதியும்படியாக நடிக்கவும் செய்கிறார். சரியானதொரு வாய்ப்பு அமைந்தால், தமிழ்த் திரையுலகில்வலம் வர வாய்ப்புகள் பிரகாசமாய் உள்ளது. ஷ்ரவ்யாவின் அம்மாவாக சன் தொலைக்காட்சியின் மெகா தொடர் நடிகை ராணி (‘வள்ளி’ நாடகத்தில் இந்திரசேனாவாகவும், ‘குலதெய்வம்’ நாடகத்தில் ஆர்த்தியாகவும் நடிப்பவர்) நடித்துள்ளார். குடிக்காரக் கணவனை நம்பாமல் பெண்ணுக்கு நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க நினைக்கும் டி.வி. சீரியல் பாத்திரத்தையே இயக்குநர் அவருக்கு அளித்திருக்கிறார்.
வெட்டி ஜம்பத்துடனும், கவுன்சிலர் கனவுடனும் அலையும் அரசியல்வாதியாக ரவிமரியா வருகிறார். தமிழகத்தில் கல்லா கட்டிய அரசியல்வாதிகள் எல்லாம் ‘தந்தை பெரியார்’ பெயரை உபயோகித்தே பெரியாள் ஆனார்கள் என நம்பும் ஒன்றையணா அரசியல்வாதி பாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார் ரவி மரியா. அதற்காக,தந்தை பெரியாரின் புகைப்படத்தை வணங்கிவிட்டு நாயகியின் அம்மாவிடம் போய் ரவி மரியா வழியும் காட்சியெல்லாம் ரொம்பவே அதிகபிரசங்கித்தனம். நகைச்சுவையாமாம்! ஏன் வழிகிறார் என்பதற்கு ஒரு விளக்கெண்ணெய் ஜோசியர் ஃப்ளாஷ்-பேக்கும் படத்தில் உண்டு. ஆதலால், ‘மனுஷனுக்கு பசி இருக்கிற வரைக்கும் விவசாயம் இருக்கும்’ என படம் பேசும் ஒன்றிரண்டு சீரியஸ் விஷயங்களும் நீர்த்துப் போகின்றன.
நாயகன் முருகனாக பிரபு ரணவீரன் அறிமுகமாகியுள்ளார். ஹீரோயிசமோ, யதார்த்தமோ இன்றி தனது ‘நாஸ்மாக்’ லட்சியத்தை உயர்வாகக் கருதுவதால், நாயகி அளவுக்கு மனதில் நிற்க அவசியமில்லாப் பாத்திரம் அவருக்கு. விவசாயத்தின் பக்கம் அவருக்கு நிகழும் மனமாற்றம் கூட, அதன் மகத்துவம் உணர்ந்து நிகழப்படவில்லை. அரசு எடுக்கும் ஒரு நம்ப முடியாத முடிவால் வேறு வழியின்றி களப்பையைப் பிடிக்கிறான் நாயகன். ‘விவசாயம்ன்னா என்ன தெரியுமா? விவசாயின்னா யார் தெரியுமா?’ என கண்களை உருட்டி உருட்டிப் பேசும் பாத்திரத்தில் ‘சூப்பர் குட்’ சுப்பிரமணி. அழுத்தமாக வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டிய கதாபாத்திரம் ஏனோ படத்தோடு பொருந்தி வராமல் க்ளைமேக்ஸ்க்காக மட்டும் நேர்ந்து விடப்பட்டது போல் உள்ளது.
விவசாயத்தின் அருமையையும் உணர்த்தாமல், மதுக்கு அடிமையாகி அழியும் சமூகத்தின் மீதான வருத்தத்தையும் பதியாமல் படத்தைச் சுபமாக முடித்துள்ளார் இயக்குநர் இசக்கி கார்வண்ணன். ‘மது விலக்கு’ அமைச்சராக இருந்து எம்.எல்.ஏ.வாகப் பதவி இழக்கும் T.P.கஜேந்திரன் பாத்திரம் மூலம் சமகால அரசியல் பகடிக்கு இயக்குநர் முயன்றுள்ள தைரியத்திற்காகப் பாராட்டலாம். ஒரு மையக் கருவை நோக்கமாகக் கொண்டு பயணிக்காத திரைக்கதை படத்தின் பலஹீனம். லஞ்சம் வாங்கி, அதைக் கீழிருந்து மேலாகச் சம்பந்தப்பட்டவர்களுக்குப் பகிரும் மாவட்டச் செயலாளராக K.ராஜனும், ஒன்றியச் செயலாளராக மாரிமுத்துவும் வரும் காட்சிகள் பிரமாதமாய் உள்ளது. பகிரி என்ற பெயர் காரணம் படத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது.