Shadow

திறந்திடு சீசே விமர்சனம்

Thiranthidu Seese tamil Review

தனக்குள் இருக்கும் பூதத்தை, ‘திறந்திடு சீசே’ என பாட்டிலை ஓப்பன் செய்து விழிக்க வைத்துவிடுகிறான் மனிதன். அப்படி ஒருவனுக்குள் விழித்துக் கொள்ளும் பூதத்தால், அவனைச் சுற்றியிருப்பவர்கள் எப்படிப் பாதிக்கப்படுகின்றனர் என்பதை மிகத் தெளிவாகச் சித்தரிக்கிறது படம்.

பப்-க்கு (Pub) வரும் சார்மி, பாத்ரூமில் வைத்து வன்புணர்வு செய்யப்படுகிறார். போதையில் இருந்த அவருக்கு வன்புணர்ந்தது யாரெனத் தெரியவில்லை. ஆனால், பார் அட்டெண்டர்களான ஜான் மற்றும் ஹூசைன் இருவரில் ஒருவர்தான் என உறுதியாகத் தெரிகிறது. யார் வன்புணர்ந்ததென சார்மி கண்டுபிடிப்பதுதான் படத்தின் முடிவு.

ஹூசைனாக நடித்திருக்கும் நாராயணன் கலக்கியுள்ளார். படம், ஓரிரவு ஒரு பப்-க்குள் நடக்கும்படியான கதையைக் கொண்டது. ஆனால், ஒரே லோக்கேஷன் என்ற அலுப்புத் தெரியாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் இவரது நடிப்புத்தான். எல்லையை மீற விருப்பம் கொண்ட, ஆனாலும் அதற்கான போதிய தைரியம் இல்லாததை அழகாக தன் நடிப்பில் கொண்டு வந்துள்ளார்.

படத்தின் நாயகி சார்மியாக வரும் தன்ஷிகா. பாதிக்கப்பட்ட வலியையும் அருவருப்பையும், அதற்குப் பழி வாங்கத் துடிக்கும் கோபத்தையும் அநாயசமாகப் பிரதிபலிக்கிறார். அவரது கேரியரில் கண்டிப்பாகச் சொல்லிக் கொள்ளும்படியான கதாப்பாத்திரமாக இது அமையும். மூவரைச் சுற்றி நடக்கும் கதை என்பதாலும், படத்தின் பிரதான பாத்திரம் என்பதாலும் படம் முழுவதும் வருகிறார். அவரது கம்பீரமான சரீரமும், அதைப் பிரதிபலிக்கும் பார்வையும் படம் பார்ப்பவர்களைக் கண்டிப்பாக ஈர்க்கும். ஆனால் அவரது கம்பீரத்தை, ‘என் ஹஸ்பெண்ட்க்காக நான் வச்சிருந்த ஒரே கிஃப்ட்டை நாசம் பண்ணிட்டீங்களேடா’ என்ற வசனத்தின் மூலம் இயக்குநர் எள்ளி நகையாடுவதுதான் கொடுமை.

படத்தின் நாயகம் ஜானாக வரும் வீரவன் ஸ்டாலின். அதாவது, ஒரு சமுதாய நோக்கம் கொண்ட விழிப்புணர்வு படத்தைத் தயாரிக்க முன் வந்ததால்.! முக்கோண த்ரில்லரான படம் தொடங்கி முடிவது இவரால்தான். படம் பப்-க்குள் நடக்கும்போது எழாத சலிப்பு, இவர் தன் வாழ்க்கையைப் பற்றிய ஃப்ளாஷ்-பேக் ஓப்பன் செய்ததும் எழுகிறது. அந்த சில காட்சிகளைத் தவிர்த்து, இயக்குநர் நிமேஷ் வர்ஷன் அழகான த்ரில்லரைக் கொடுத்துள்ளார். மேலும் குடிப்பழக்கத்தில் இருந்து மீள முடியுமென்ற நம்பிக்கையையும் முடிவில் அளிக்கிறார்.

சைக்காட்ரிஸ்டாக வரும் உஜ்ஜயினியும் தன் பங்குக்கு அசத்தியுள்ளார். அல்கஹாலுக்கு அடிமையாகிவிட்ட மூன்றாவது நிலையுள்ளவரின் உடல் எப்படி இயங்குகிறது என்ற அனிமேஷன் அற்புதமாக உள்ளது. அந்த அனிமேஷனைக் காட்சிகளைத் தொடர்ந்து உஜ்ஜயினி ஜானுக்கு வைக்கும் சோதனையும், அதில் வெல்ல முடியாமல் ஜான் செய்யும் அலப்பறையும் மிக முக்கியமான காட்சிகள். அதனாலேயே இன்றைய நிலைமையில், இப்படம் மிக மிக முக்கியமானதாகிறது.

‘நாம குடியை நிறுத்திட்டா, இந்த உலகமே சந்தோஷப்படும். ஆனா கூடச் சேர்ந்து குடிக்கிறவனுக்கு மட்டும் பொருக்காது. ஏதாவது செய்து நம்மள திரும்பக் குடிக்க வச்சுடுவான். ஏன் சூனியமே கூட வைப்பான்’ என பொருள்பட படத்தில் ஒரு வசனம் வருகிறது. இயக்குநர், நகைச்சுவை கலந்த த்ரில்லர் என தனது படத்தை வகைப்படுத்துகிறார். சில வசனங்களும், திரைக்கதையும் அதை உறுதி செய்கிறது.