Shadow

பாகுபலி விமர்சனம்

Baahubali Tamil Review

(பாகுபலி – தொடக்கம்)

இந்தியாவின் மிக மிகப் பிரம்மாண்டமான படம். மிரட்டியுள்ளார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி.

பேரருவியின் அடிவாரத்தில் வளரும் ‘ஷிவு’-வுக்கு, மலை மீதேறிப் பார்க்க வேண்டுமென்ற தீராத ஆசை, மிகச் சிறிய வயது முதலே கனலாய் எழுகிறது. பலமுறை முயன்றும் மலையில் ஏற முடியாமல் வழுக்கி விழுந்து கொண்டேயிருக்கிறான். அருவியில் இருந்து விழும் மரத்தாலான முகமூடியின் சொந்தக்காரியை எப்படியும் காண வேண்டுமென்ற காதலின் உந்துதலில், ஒருநாள் மலையில் ஏறிவிடுகிறான். அங்கு யார் இருக்கிறார்கள்? அவர்களுக்கும் ஷிவு-வுக்கும் என்ன சம்பந்தம்? என்ற கேள்விக்களுக்கான பதிலைச் சொல்கிறது பாகுபலியின் தொடக்கம்.

பாகுபலி என்றால் வலிமையான தோள்கள் உடையவன் எனப் பொருள். அந்தப் பெயருக்கு, ப்ரபாஸ் அநாயாசமாக நியாயம் செய்துள்ளார். இவர் மட்டுமல்ல, நடிகர்கள் அனைவருமே அவர்கள் ஏற்ற கதாப்பாத்திரங்களுக்கு கன கச்சிதமாகப் பொருந்துகின்றனர். ப்ரபாஸ், சத்யராஜ், ராணா தக்குபாத்தி, அனுஷ்கா என ஆறடி அஜானுபாகவான்கள் திரையை நிரப்புவதால், இதில் சின்னஞ்சிறு தேவதையாகத் தெரிகிறார் தமன்னா. ரம்யா கிருஷ்ணன், ரோகினி, நாசர் என அனைவருக்கும் முக்கியத்துவம் அளித்ததோடு அல்லாமல் பிரத்தியேகமான குண வார்ப்புகளையும் அளித்துள்ளார் ராஜமெளலி.

பெண்களை ஆடல் பாடலுக்கு மட்டுமின்றி மிக வலுவான கதாப்பாத்திரங்களாக வடிவமைத்துள்ளார் இயக்குநர். இது மிக அபூர்வமாய் நிகழக் கூடிய ஒன்று. படம் சக்தி மயமாய் உள்ளது. ரோகிணி எடுக்கும் முடிவுகளைக் கேள்வி கேட்க ஆளில்லை. மகிழ்மதி பேரரசின் மகாராணி சிவகாமியாகக் கலக்கியுள்ளார் ரம்யா கிருஷ்ணன். அதுவும் படத்தின் தொடக்கத்தில், அவர் நீரில் மூழ்கும் காட்சியில் காட்டும் அசாத்தியமான கம்பீரம் எந்த ஹீரோகளுக்கும் கூடக் கிடைக்காத அசத்தலான அறிமுகம். அவர் காட்டும் வீரமும், ராஜதந்திரமும், மிடுக்கான தோரணையும்.. சந்தேகமில்லாமல் இது அவர் வாழ்நாளில் அவர் ஏற்று நடித்த, நடிக்கப் போகும் படங்களில் முதன்மையானது என அடித்துச் சொல்லலாம்.

அதே போன்ற பிரமாதமான கதாப்பாத்திரம் சத்யராஜுக்கும் கிடைத்துள்ளது. கட்டப்பா என்றால் வீரமும் விசுவாசமும் மட்டுமே என்பதை அவர் ஒற்றைப் பார்வையால் புரிய வைத்துவிடுகிறார். இத்தனை பிரம்மாண்டமான மேக்கிங்கில், அவரால் தனித்துக் கவர முடிவதே அவரது நடிப்புத் திறனுக்குச் சான்றாகும். அதிலும் இரண்டாம் பாதிக்கான விதையை, கட்டப்பாவின் கதாப்பாத்திரத்தில் வைத்து மேலும் சுவாரசியப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

இரும்புச் சங்கிலியால் பூட்டப்பட்டு, அழுக்கு படிந்து கருப்பாய் பயங்கரமாய் இருக்கிறார் அனுஷ்கா. சேர்த்து வைத்து, அடுத்த பாகத்தில் கலக்குவாரென எதிர்பார்க்கலாம். ஆரம்பம் படத்தில் அஜித்தின் நண்பராக நடித்த ராணா டக்குபாதி தான் இப்படத்தின் வில்லன் பல்வால்தேவனாக நடித்துள்ளார். ராணா போன்ற ஒரு வலுவான வில்லன் இல்லையெனில் இந்தப் படத்தை கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது.

படம் நெடுகே ஏகப்பட்ட சுவாரசியங்கள். பாகுபலியின் முதல் பாகம், எம்.ஜி.ஆரின் ‘அடிமைப் பெண்’ படத்தின் கதை போல் தோன்றினாலும், மேக்கிங்கிலும் சின்ன சின்ன விஷயத்தின் டீட்டெயிலிங்கிலும் அசத்தியுள்ளார் எஸ்.எஸ்.ராஜமெளலி. மலையின் மீதிருக்கும் கடைசி பாறையில் ஏற வில்லொன்று தயாரித்து கீழே குதித்தவாறு அம்பை மேல் நோக்கிச் செலுத்துவது; தமன்னாவும் ப்ரபாஸும் அரவணைக்கும்பொழுது தோளில் வரையப்பட்ட ‘டேட்டூ’வும் இணைவது; பிறந்தவுடனே பாகுபலி ரம்யா கிருஷ்ணனின் விரலை இறுகப் பிடித்து தன் தோள்வலிமையைப் புரிய வைப்பதெனச் சொல்லிக் கொண்டே போகலாம். படத்திற்காக ஆயுதங்களையும், போர் வியூகங்களையும் பிரத்தியேகமாக வடிவமைத்துள்ளனர். குறிப்பாக ராணா பயன்படுத்தும் ‘கதை’ அட்டகாசமான ஆயுதம். ‘திரிசூல வியூகம்’ குறித்து எளிமையாகப் புரியும்படி விளக்கியுள்ளனர்.

படத்தை வேறு தளத்துக்குக் கொண்டு செல்வது, இரண்டாம் பாதியில் வரும் போர்க்களக் காட்சிகளே.! இப்படியொரு அனுபவத்தை இந்தியப் படமொன்றில், அதற்குள் பெற முடியுமென நினைத்துப் பார்த்திருக்கவே மாட்டோம். மது விற்பவராக, எளிமையாக படத்தில் தோன்றும் எஸ்.எஸ்.ராஜமெளலி, இந்திய சினிமா உலகில் எடுத்திருக்கும் விஸ்வரூபம் இந்த ‘பாகுபலி’.

அதிகாரத்தைக் கைபற்றும் இருமுனைப் போட்டியாக மட்டும் ப்ரபாஸ், ராணா சண்டையைக் குறுக்கிவிட முடியாது. இடைவேளை விடும்பொழுது அதைக் குறிப்பால் உணர்த்தியிருப்பார் இயக்குநர். அமரேந்திர பாகுபலி இறந்து 25 வருடங்களான பின்னும், பல்வால்தேவனின் ‘ஈகோ’ குறைந்தபாடில்லை. காரணம், பாகுபலியின் புகழ் மகிழ்மதியில் அப்படிப் பரவியுள்ளது. அதை சத்யராஜ் வசனமாகவும் சொல்வார். ‘நான் உயிருடன் இருந்தும் என்றோ இறந்துவிட்டேன்; நீ இறந்தும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறாய்’ என.! தமிழில் வசனங்களை எழுதியதோடு மட்டுமல்லாமல், காளகேயர்களுக்கென ஒரு தனி மொழியையும் உருவாக்கியுள்ளார் மதன் கார்க்கி.

படம் திடீரென முடிவதால் ஒரு முழுமையை உணர முடியவில்லை. சட்டென கனவு கலைந்துவிட்ட ஏமாற்றம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. தேவசேனாவான அனுஷ்காவை மீட்பதோடோ, பல்வால்தேவனின் தலையற்ற மகன் மண்ணில் வீழ்வதோடோ படம் முடிந்திருந்தால் ஒருவேளை அவ்வெண்ணம் எழாமல் இருந்திருக்குமோ என்னவோ!

படத்தில் வரும் ‘நீர் மலை’ காட்சிகளின் பிரமிக்க வைக்கிறது. எஸ்.எஸ்.ராஜமெளலியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான கே.கே.செந்தில் குமார் அசத்தியுள்ளார். மகிழ்மதி பேரரசின் அரண்மனையும், மாட மாளிகைகளும், கோபுரங்களும் அசத்துகின்றன. மரகதமணியின் பின்னணி இசை படத்தின் பெரும்பலம்.

தொடக்கமே இப்படி என்றால், இரண்டாம் பாகமான ‘பாகுபலி – முடிவு’!??

ஜெய் மகிழ்மதி!!

இரண்டாம் பாகத்திற்கான சூசகங்கள்:

>> க்ளைமேக்ஸில் வரும் ‘கொன்றேன்’ என்ற வார்த்தை நம்பிக்கை துரோகத்தை மட்டுமே குறிக்கிறது. பாகுபலியைக் குரூரமாக, யாருடைய கைகள் கொன்றதென முன்பே வசனத்தில் வருகிறது.

>> பின் ஏன் கட்டப்பா அப்படிச் சொல்கிறார்? அது சிவகாமியின் கட்டளை என்பதை படத்தின் தொடக்கக் காட்சியில் பரமேஷ்வரிடம் சிவகாமி பேசும் வசனத்தில் இருந்து யூகிக்கலாம் (ராஜதந்திரியான சிவகாமியை எப்படி பிங்கலதேவனும், பல்வால்தேவனும் ஏமாற்றினார்கள் என்பதுதான் இரண்டாம் பாகத்தின் கதை).

>> தேவசேனாவான அனுஷ்காவும், அவந்திகாவான தமன்னாவும் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள். அது ‘குந்தலதேச சிற்றரசு’.