ஹிந்தியில் முதன்முறையாக, “கன்ஸ் ஆஃப் பெனாரஸ் (Guns of Benares)” என்னும் படத்தில் அறிமுகமாகிறார் கணேஷ் வெங்கட்ராம்.
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘பொல்லாதவன்’ படம் தான் ஹிந்தியில், ‘கன்ஸ் ஆஃப் பெனாரஸ்’ என மீள் உருவாக்கம் செய்யப்படுகிறது. டேனியல் பாலாஜி நடித்த பாத்திரத்தில் கணேஷ் வெங்கட்ராமன் நடிக்கிறார்.
“இயக்குநர் சேகர் சூரி எனது கதாபாத்திரத்தைப் பற்றி சொல்லும் பொழுது எனக்கும் முழுவதும் பிடித்து விட்டது. இதற்கு முன் கேங்ஸ்டராக நடித்ததில்லை.
முழுப் படமும் பெனாரசில் தான் எடுக்கப்படவுள்ளது. எனது கதாபாத்திரம் பற்றி சொல்லணும்னா.. கொக்கைனுக்கு அடிமையான பொல்லாதவனாக நடிக்கிறேன். எனது கையில் அகோரியை பச்சை குத்தியிருப்பேன்.
நான் ஹிந்தி நன்றாகப் பேசுவேன் எனினும், 20 நாளுக்கு முன்பே பெனாரஸ் சென்று உ.பி. மாநில தொனியைப் பழகி வர்றேன். அந்த ஊர் மாஃபியாக்களின் பாடி லேங்க்வேஜையும் பார்த்துப் பழகுறேன்.
‘கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர்’ படத்திற்கு சண்டைக்காட்சிகள் அமைத்து ஃப்லிம்ஃபேர் விருது வென்ற ஷ்யாம் கெளஷல் தான் இப்படத்திற்கும் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். படத்தின் இசை சொஹைல் சென். படத்தின் பின்னணி இசைக்கு ஜீ.வி.பிரகாஷிடம் பேசப்பட்டு வருகிறது” என்றார் படத்தைப் பற்றி கணேஷ் வெங்கட்ராம்.
அடுத்த மாதம் கணேஷ் நடித்த ‘இவன் வேற மாதிரி’ படம் வெளியாகவுள்ளது. இவர் நாயகனாக நடிக்கும் ‘அச்சாரம்’ என்ற படத்தின் படப்பிடிப்பும் நடந்து வருகிறது.