Shadow

ராஜபாட்டை விமர்சனம்

Rajapattai
 

ராஜபாட்டை – அரசர் செல்வதற்கான அகன்ற பாதை அல்லது நேர்முறையான வழி.

படத்திற்கும், தலைப்பிற்கும் எந்தளவு தொடர்பு இருக்கும் என சரியாக ஊகிக்க முடியவில்லை. கூட்டணிக் கட்சித் தலைவர் ஒருவர் தன் வெளிநாட்டு ஜீப்பில் செல்லும் சாலைகளைக் குறிக்கலாம் அல்லது நாயகன் தங்கி இருக்கும் விடுதிக்கு செல்லும் சாலையைக் குறிக்கலாம். ஆனால் கண்டிப்பாக நேர்முறையான வழி என்ற பொருள் வருமாறு தலைப்பு வைக்கப்பட்டிருக்காது என்பது மட்டும் திண்ணம்.

அனல் முருகன் இரண்டாம் வரிசையில் நிற்கும் ஸ்டன்ட் ஆர்டிஸ்ட். தற்செயலாக முருகனுக்கு.. தட்சணாமூர்த்தி என்பவரை சில ரவுடிகளிடம் இருந்து காப்பாற்றி அடைக்கலம் தர நேருகிறது. தட்சணாமூர்த்திக்கு சொந்தமாக இருக்கும் ஓர் ஆசிரமத்தை, அது அமைந்திருக்கும் இடத்திற்காக ‘அக்கா’ என்றழைக்கப்படும் ரங்கநாயகி ஆக்கிரமிக்க முயல்கிறார். தட்சணாமூர்த்தியின் இடத்தை ஒரு கட்சியின் தலைவி ஆன அக்கா வளைத்து பிடித்தார்களா இல்லையா என்பதற்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது.

அழகர்சாமியின் குதிரை என்ற சிறுகதையைத் திரைப்படமாக்கிய அற்புத முயற்சியைத் தொடர்ந்து வந்துள்ள இயக்குனர் சுசீந்திரனின் படம். நான் மகான் அல்ல என்ற தனது இரண்டாவது படத்தின் பாணியை அடியொட்டியவாறு எடுத்துள்ளார். முதல் பாதியைக் கலகலப்பாகவும், இரண்டாம் பாதியை விறுவிறுப்பாகவும் கொடுக்க முயன்றுள்ளார். ஆனால் அதற்கு திரைக்கதை கை கொடுத்ததாக தெரியவில்லை. எதையும் சாதிக்க வல்ல நாயகன் என்பது எவ்வளவு சுலபமாரொரு வரி கதை. அத்தகைய நாயகனை நாயகன் என்று நம்ப வைக்க கதையில் ஒரு வில்லன் தேவை. அதிலேயே கொஞ்சம் வித்தியாசம் தேவை என்பதால் வில்லனுக்கு பதில் கதையில் வில்லியைச் சேர்த்தாச்சு; அவ்வளவு தான் படம் முடிஞ்சுடுச்சு என்ற ரீதியில் அசத்தி உள்ளார் இயக்குனர். ‘சினிமாவிற்கு வர்றியா?’ என நாயகன் கேட்டு, நாயகி வந்தால் ஒரு வகை காதல் வராவிட்டால் ஒருவகை காதல் என்ற வசனங்களால் நம்மை சோதித்துப் பார்க்கிறார் வசனக் கர்த்தா. எழுத்தாளர் பாஸ்கர் சக்தி தான் வசனக் கர்த்தாவாம்.

எவராக இருந்தாலும் சளைக்காமல் அடிப்பேன் என்ற கங்கணத்தை இன்னும் கழட்டாத நாயகனாக சீயான் Dr.விக்ரம். அவரின் வயதை அடிக்கடி அவரது கண்களின் பக்கவாட்டில் தோன்றும் சுருக்கங்கள் எடுத்து இயம்புகிறது. வயதில் நாயகியை விட 24 வருடங்கள் மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது முந்தையப் படம் தெய்வத் திருமகள் என்பது ஏனோ நினைவில் வந்து தொலைக்கிறது.

Rajapaattai

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பகவத் கீதையைத் தமிழ்ப்பட நாயகிகளை மனதில் கொண்டது தான் உபதேசித்திருப்பாரோ என்ற சந்தேகம் எழுகிறது. ‘நடிகையாய் இரு; நடிக்கணும்னு எதிர்பார்க்காதே’ என்பதை நாயகிகளும் சரியாகவே புரிந்துக் கொண்டுள்ளனர். இப்படத்தின் நாயகி பெயர் தேஷ்கா சேத். அவரது கதாபாத்திரத்தின் பெயர் என்னவென்று கூட மனதில் பதியவில்லை. நடிகைகள் சரியாக செய்வதே பாடல்களுக்கு ஆடுவது தான். பாவம் அந்தக் கொடுப்பினைக் கூட இவருக்கு சரி வர கிடைக்கவில்லை. ‘வில்லாதி வில்லன்கள்’ எனத் தொடங்கும் பாடலிற்கு தெலுங்கு நடிகை சலோனி அஸ்வனியும், ‘லட்டு லட்டு ரெண்டு லட்டு’ எனத் தொடங்கும் பாடலிற்கு ரீமாசென், ஷ்ரேயா இணைந்தும் விக்ரமுடன் ஆடியுள்ளனர். அதுவும் படம் முடிந்தே போன பிறகு லட்டு பாடலை வைத்துள்ளார். இதன் மூலம் தனக்கு கதை(!?) தான் பிரதானம் என நிருபித்துள்ளார் இயக்குனர். யுவனின் பிண்ணனி இசை அளவு பாடல்கள் வசிகரிக்கவில்லை. மதியின் ஒளிப்பதிவுகளில் சண்டைக் காட்சிகள் அதிறுகிறது. சண்டைக் காட்சிகளை வடிவமைத்தவர் அனல் அரசு. நாயகன் யாரையாவது அடித்தால்.. அவர்கள் தரையில் பட்டு ‘ரப்பர்’ பந்து போல் துள்ளி(!?) மீண்டும் மேலே வருகின்றனர்.

கே. விஸ்வநாத். படத்தில் இவர் ஏற்றிருக்கும் தட்சணாமூர்த்தி என்ற பாத்திரத்தில் மட்டுமே உயிர் உள்ளது. அவர் வாழ்ந்த வாழ்க்கை, வாழ்ந்துக் கொண்டிருக்கும் வாழ்க்கை, வாழ விரும்பும் வாழ்க்கை என இந்த ஒரே ஒரு கதாபாத்திரத்தை மட்டும் இயக்குனர் நன்றாக வடிவமைத்துள்ளார். கே. விஸ்வநாத்தை சில மொன்னையான காட்சிகளிலும் நடிக்க வைத்துள்ளார் இயக்குனர். எனினும் அவரை ரசிக்க முடிகிறது. தட்சணாமூர்த்தியின் மகனாக அவினாஷ் நடித்துள்ளார். ‘வாப்பா’ என்னும் பாத்திரத்தில் அபகரித்த நிலங்களை விற்றுத் தரும் கெட்டவராக ப்ரதீப் ரவாத் நடித்துள்ளார். கஜினி படங்களில் இரட்டை வேடத்தில் வில்லனாக நடித்தவர் என்று சொன்னால் சட்டென்று நினைவில் வரும். சனா என்னும் அறிமுக நடிகை வில்லி ஆக படத்தில் முறைத்துக் கொண்டே உள்ளார்.

ராஜபாட்டை இந்தச் சாலை முன்னொரு காலத்தில்..

Leave a Reply