Shadow

விரைவில் இசை விமர்சனம்

Viraivil Isai Review

சுசி எனும் சுதந்திர சேகரனும், ஏ.ஆர்.ராமன் எனும் ஏ.ரங்கராமானும் நண்பர்கள். சுசிக்கு இயக்குநராகவும், ராமனுக்கு இசையமைப்பாளராகவும் திரைப்பட உலகத்தில் பரிணமிக்க வேண்டுமென்பது கனவு. கிராமத்திலிருந்து ஓடி வந்த அவர்களின் கனவு நனவானதா இல்லையா என்பதே படத்தின் கதை.

மறைந்த நடிகர், தமிழகத்து ஜேம்ஸ் பாண்ட் என்றழைக்கபடும் ஜெய் ஷங்கர் அவர்களின் மகன் சஞ்சய் ஷங்கர் இப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகிவுள்ளார். நாற்பது வயதில் நடிப்பாசை ஏன் வந்தது என்ற சுய எள்ளலோடு கலகலப்பாக அறிமுகமாகியுள்ளார். எனினும், தனித்த அடையாளங்களோடு கவனத்தை ஈர்க்க, தோதான காட்சிகள் அவருக்குக் கிடைக்கவில்லை. வருகின்ற காட்சிகளிலும், ஜெய் ஷங்கரை நினைவுபடுத்திய வண்ணமே உள்ளார்.

காதல் வசமாக இளைஞர்கள் தலைகீழாய் நின்று முட்டி மோதி மண்டை உடைத்துக் கொள்ளும் இக்காலத்தில், நாயகர்கள் இருவருக்கும் எத்தகைய சிரமுமில்லாமல் காதல் கனி தானாய்க் கனிந்து விழுவது ஆச்சரியத்திலும் பெரும் ஆச்சரியம். நாயகிகளாக அர்ப்பணாவும், ஷ்ருதி ராமகிருஷ்ணனுன் நடித்துள்ளார்கள். அர்ப்பணா அறிமுகமான ஜோரில் ஒரு பாடலுடன் காணாமல் போக, தாமதமாக அறிமுகமாகும் ஷ்ருதி ராமகிருஷ்ணனோ படத்தில் முக்கியமான பங்கு வசிக்கிறார்.

கதையை எழுதி இயக்கியுள்ளார் வி.எஸ்.பிரபா. கோடம்பாக்கத்து இளைஞர்களின் போராட்டத்தை வலியினோடோ, அல்லது முழுதும் நகைச்சுவையாகவோ கூறியிருக்கலாம். இரண்டையும் கலந்து வழங்க முற்பட்டதால், கதைப்போக்கின் மாற்றத்தால் ஓர் அசூயை நேருகிறது. படத்தின் தொடக்கம் முதலே இழையோடும் அசுவாரசியத்தைக் கலைந்திருக்கலாம். நாயகர்களின் வெற்றியோ, தோல்வியோ நமதாகக் கடத்தப்படவில்லை. நாயகர்களான மகேந்திரனோ, திலீப் ரோஜரோ ஒட்டாமல் மூன்றாம் நபர்களாகத் தோன்றி மறைகிறார்கள்.

நாயகர்கள் மீது அக்கறையும் பாசமும் கொண்ட தேநீர் கடை முதலாளியாக டெல்லி கணேஷ் நடித்துள்ளார். மற்ற கதாபாத்திரங்களின் மத்தியில் அனுபவச் சிங்கமாகக் கம்பீரமாய் நிற்கிறார் அவர். கோடம்பாக்க கனவுகள், பலருக்கும் கவிதை போலே கனவாக முடிந்துவிடுகிறது. அந்த வேதனையையும் படத்தில் பதியப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத திறமை தண்டனைக்குச் சமமாகும். திறமையும் விடாமுயற்சியும் இருந்தால், எதிர்ப்படும் இடையூறுகளுக்கு மத்தியில் ஒருநாள் திறமை அங்கீகரிக்கப்படும் என்ற நம்பிக்கையை படம் விதைக்க முனைகிறது.