32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

29* விமர்சனம் | 29 Tamil movie review

Dinesh R சேலம் Published: 08/05/2026 3 நிமிட வாசிப்பு Updated: 09/05/2026 இது புதிது
எழுத்து அளவு:

மேயாத மான், ஆடை, குலு குலு ஆகிய படங்களைத் தொடர்ந்து ரத்ன குமாரின் இயக்கத்தில் உருவாகியுள்ள நான்காவது படமாகும். இருபத்தொன்பது வயதான சத்யா, தனது வாழ்வின் லட்சியத்தை ஒரு காதல் தோல்வியில் இருந்து கண்டடைவதே படத்தின் கதை.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இந்தக் காதல் கதையைப் பத்து அத்தியாயங்களாகப் பிரித்துச் சொல்லியுள்ளார். நீ நான் மழை குடை (1), கடல், காதல் ரோமம், ஆச்சரியக்குறி! (2), அண்ணா சாலை பேருந்து கிறுக்கல்கள் (3), சீலே.. (4), ஒரு முத்தம் 4 உதடுகள் (5), கூதிர் காற்று, அறுந்த காற்றாடி (6), கவிழ்த்துப் போட்டா ரோஜாக்கள் (7), காதல் மனசின் அதிகபிரசங்கித்தனம் (8), நெருப்பின் நடனம் (9), சான்றோன் எனக் கேட்ட காதலி (10) என்பனவே அவ்வத்தியாயங்களுக்கு ரத்ன குமாரிட்ட தலைப்புகளாகும்.

அயோத்தி படத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த ப்ரீத்தி அஸ்ரானி, 21 வயது பெண் விஜியாக இப்படத்திலும் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். The World of 29 எனும் ப்ரோமோவில், இரண்டாவது அத்தியாயத்தைப் பயன்படுத்தி அவர் ஆவலை ஏற்படுத்தி இருந்தனர். அந்த ஆவலைத் தூண்டியதில் ப்ரீத்தியின் நடிப்பு மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. படத்தின் மென்மைக்கும் வண்ணத்திற்கும் பொறுப்பேற்றுள்ளார் ப்ரீத்தி.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ரெட்ரோ என விது ஏற்ற கதாபாத்திரங்கள் ஒன்றொன்றும் ஒவ்வொரு விதம். லட்சியமற்ற சத்யாவாக இப்படத்தில் தோன்றியுள்ளார் விது. லட்சியமற்றவர் தான், வழக்கமான தமிழ் சினிமா நாயகன் போல் பொறுப்பற்றவர் அல்ல. ஆனால், இந்தியக் குடிமைப் பணி தேர்வெழுதும் தன்னைப் போல் சத்யாவிற்கு எந்த லட்சியமும் இல்லையெனக் குறைப்படுகிறாள் விஜி. கதாபாத்திரங்களுக்கு இடையே எழும் இந்த முரண், கதையின் ஓட்டத்தில் இயல்பாக அமையாதது குறை. நாயகனின் நண்பன் மணியாக நடித்துள்ள அவினாஷ் ரகுதேவன், காதலர்களுக்கு இடையில் பணம் ஒரு பிரச்சனையாக வருமென எச்சரிக்கிறான். அது மெல்ல நாயகியைத் தொந்தரவு செய்கிறது. ஆனால், நாயகன் – நாயகி இருவரும் ஒரு நல்ல வேலையில்தான் இருக்கின்றனர்.

ஒரு காதல் கதையாகத் தெள்ளிய நீரோடை போல் படம் தொடங்கினாலும், இரண்டாம் பாதியில் மெல்ல தடம் மாறுகிறது. ‘தொட்டுத் தாலி கட்டினா என்ன? தொட்டுட்டுத் தாலி கட்டினா என்ன?’ என்ற கேள்வியில் கவிழ்த்துப் போடப்படுகிறது. Tinder, Bumble, Oyo வருகைக்கு முன்னொரு காலத்தில் (கி.பி. 2010) எனத் தொடங்கும் படம், இன்றைய காதலினின்று விலகுமோ என்ற பூர்வாங்க பீடிகையை நீர்த்துப் போகச் செய்கிறது. காமத்தைக் கொண்டாடி விட்டாலும் பரவாயில்லை. ரத்ன குமார் அதை taboo-வாகக் கட்டமைக்க முயன்று, ‘இதற்குத் தானே என்னைச் சுத்தி வர?’ என்ற நாயகியைக் கேட்க வைக்கிறார். காதலோ, காமமோ கதாபாத்திரங்களுக்கு இடையே இயல்பாக எழாமல் ஓர் அரூப இழை போல், இயக்குநரின் இருப்பு திரையில் தெரிந்து கொண்டே உள்ளது. உதாரணத்திற்கு அத்தியாயங்களுக்கு அவர் வைக்கும் தலைப்புகளையே உதாரணமாகச் சொல்லலாம்.

மாதேஷ் மாணிக்கத்தின் விஷுவல்களை மீறி ஷான் ரோல்டனின் இசை, தனிப்படலம் போல் படத்தில் தனித்துத் தெரிகிறது. ஒலி – ஒளிக் கலவையின் மேஜிக் மிஸ் ஆகி ஒவ்வொரு அத்தியாயத்திலும் பாடல்களாலும், பின்னணி இசையாலும் பார்வையாளர்களை ஆக்கிரமித்துள்ளார் ஷான் ரோல்டன். திரைக்கதையும் விஷுவல்களும் தவறவிட்ட புள்ளியை, இசையால் அடைய முயற்சி செய்துள்ளார் ஷான் ரோல்டன்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.