Shadow

வில்லாதி வில்லன் வீரப்பன் விமர்சனம்

Veerappan movie vimarsanam

இது சந்தன மரக் கடத்தல் வீரப்பனைப் பற்றிய படமில்லை. ராம்கோபால் வர்மாவின் படம். 900 யானைகளையும், 97 போலீஸ்காரர்களையும் கொன்ற வீரப்பனைப் பிடிக்க போலீஸார் நடத்திய “ஆப்ரேஷன் குக்கூன்” பற்றி மட்டுமே அலசுகிறது ‘வில்லாதி வில்லன் வீரப்பன்’ திரைப்படம். வீரப்பனை வீழ்த்த போலீஸ் எடுத்துக் கொண்ட கடைசிக் கட்ட முயற்சிகளைத் திரைக்கதையாக்கியுள்ளார்.

வீரப்பனைப் பிடிப்பதற்காகச் செலவு செய்யப்பட்ட தொகை 734 கோடிகளாம். இப்படி, வீரப்பனைப் பற்றி வெளியில் இருந்து, செய்திகள் மூலமே அறிந்த ராம்கோபால் வர்மா, வீரப்பனை எப்படி அணுகியுள்ளார் என்பது படம் பார்ப்பதற்கு முன் அறிவது மிக அவசியமாகிறது.

“செப்பல் அணிந்து கொண்டு, கையில் டபுள் பேரல் கன் (double barrel gun) ஏந்திக் கொண்டு தமிழ்நாடு, கர்நாடகா என இரண்டு மாநில அரசுகளுக்கும் சிம்மச் சொப்பனமாக இருந்துள்ளார் வீரப்பன். ஆசியாவின் மிக ஆபத்தான மனிதர் இவர்தான். ஏன் உலகத்திலேயே ஆபத்தான மனிதர் என்றே சொல்லலாம். ஒசாமா பின்லேடனுக்குக் கூட அல்-கொய்தா எனும் அமைப்பு இருந்தது. வீரப்பனோ தனி மனிதனாகக் இருந்து கொண்டு 30 வருடங்களுக்கு மேலாகக் காட்டில் ராஜாங்கம் நடத்தியுள்ளான்.

வீரப்பனை 2004-இல் கேள்விபட்டதில் இருந்து, அவன் சாகும் வரை அவன் பற்றிய செய்திகளைத் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தேன்.

கடந்த வருடம், ஆப்ரேஷன் குக்கூனில் ஈடுபட்டிருந்த சிலரைச் சந்திக்க நேர்ந்தது. அவர்கள் சொன்ன தகவல்களால், வீரப்பனைப் பற்றி மேலும் நெருக்கமாக அறிய நேர்ந்ததோடு, சில்லிட வைக்கும் போலீஸின் வழிமுறைகள் வியப்பை ஏற்படுத்தியது.

நூற்றுக்கும் மேற்பட்டவரைச் சந்தித்துப் பேசினேன். ஆப்ரேஷன் குக்கூனில் இருந்த காவல்துறையினர்; வீரப்பனோடு இருந்தவர்கள்; சுற்றுப்புற ஊர்களில் இருந்த மக்கள்; வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி ஆகிய நான்கு ஆதாரங்கள் (source) மூலம் தகவல்களைச் சேகரித்தேன். இதில் எது உண்மை, எது பொய் எனப் பிரித்தறிய மிகவும் கஷ்டம். நான் முடிந்தவரை ரெக்கார்ட் ஆகப்பட்ட தரவுகளைக் கொண்டே படத்தில் காட்சிகள் வைத்தாலும், வீரப்பனைப் பற்றிச் சேகரித்த தகவல்களைத் திரை வடிவமாகத் தொகுக்க மிகவும் சிக்கலாக இருந்தது. நான்கு புள்ளிகளை இணைத்து எது உண்மையென என் மனதுக்குப் பட்டதோ அப்படி இணைத்துள்ளேன். இம்முயற்சியில், நான் என்னை ஓர் இயக்குநராக என்னை மீண்டும் கண்டடைந்தேன். ஒரு திரைப்பட ரசிகனாக (connoisseur), இப்பட அனுபவம் எனக்கு மிக அபாயகரமான மூளைகளை ஊடுருவும் வாய்ப்பை வழங்கியது. அம்மூளைகள் வீரப்பனுடையதோ அவனது குழுவினருடையதோ கிடையாது. உண்மையில் அந்த அபாயகரமான மூளைக்குச் சொந்தக்காரர்கள் அவனைக் கொன்றவர்களுடையது” – இயக்குநர் ராம் கோபால் வர்மா.

‘சமூகம் தன் தகுதிக்கேற்ற குற்றவாளிகளையே பெறுகிறது – வோல்டேர்’ என்ற வாசகத்தோடு படம் தொடங்குகிறது. தினேஷ் எனும் அதிகாரியின் கைகளையும் கால்களையும் வெட்டி, முகத்தைச் சிதைக்கிறார் வீரப்பன். அதிலிருந்து வீரப்பனைப் பிடிப்பதைத் தன் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு இயங்குகிறார் போலீஸ் உயரதிகாரி கண்ணன். அவருக்கு முழு ஒத்துழைப்பு நல்குகிறார் குக்கூன் கமாண்டரான விஜயக்குமார். குக்கூன் எப்படி வீரப்பனைக் காட்டை விட்டு வெளியேற்றி காவு வாங்கியது என்பதே படத்தின் கதை.

வீரப்பனாகச் சீறியுள்ளார் சந்தீப் பரத்வாஜ். அவரது பார்வையின் வீச்சு வீரப்பனின் அருகாமையை உணர வைக்கிறது. போலீஸ் உயரதிகாரி கண்ணனாக சச்சின் J.ஜோஷியும் வீரப்பனுக்கு இனையாக மிரட்டியுள்ளார். உண்மையை வர வைக்க அவர் செய்யும் சித்திரவதைகளும், உண்மையை மறைக்க அவர் செய்யும் கொலைகளும் அச்சுறுத்துகின்றன. அவர், சில கோணங்களில் இறுதிச்சுற்று மாதவன் போன்ற தோற்றப்பிரமையை ஏற்படுத்துகிறார். வீரப்பனுக்கும் கண்ணனுக்கும் நடக்கும் ஆடு புலி ஆட்டம்தான் மொத்த படமுமே! படத்தில் மிரட்டும் இன்னொரு நபர் அனிகேத் காண்டகலே (!? – Aniket Khandagale). இப்படத்தின் ஒளிப்பதிவாளர். காடு, மலை, முகடு, அருவி என கண்களுக்கு விறுவிறுப்பான விருந்தை அளித்துள்ளார்.

இறந்து போகும் காவல்துறை அதிகாரி தினேஷின் மனைவி ஷ்ரேயாவாக லிசா ரே நடித்துள்ளார். தன் கணவனின் கொலைக்குப் பழி வாங்க ஒரு சந்தர்ப்பம் உள்ளது எனத் தூண்டில் போட்டு, கண்ணன் அவரை வீரப்பன் மனைவி முத்துலட்சுமியுடன் பழக வைக்கிறார். லிசா ரேவை விட, முத்துலட்சுமியாக நடித்திருக்கும் உஷா ஜாதவ் மனதில் நிற்கும்படி அற்புதமாக நடித்துள்ளார். போலீஸ், முத்துலட்சுமியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தும் காட்சியை நாசூக்காகக் காட்டி சென்ஸாரில் இருந்து தப்பிப்பதோடு, போலீஸின் அராஜகங்களை மறுதலிக்காமல் ஓரளவுக்கேனும் காட்டியிருப்பது ஆசுவாசப்படுத்துகிறது.

காட்டுக்குள் எந்தப் பொறியிலும் சிக்காத விடாக் கொண்டனான காட்டு ராஜா வீரப்பனை, காட்டை விட்டு வெளியே வர வைக்க, அவரது மனைவி முத்துலட்சுமியை உபயோகிப்பது, வீரப்பனின் புகழ்ப் போதைக்குத் தீனி போடுவது, அவரது ஆதர்சமான LTTE பிரபாகரனைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கு ஆகிய தூண்டிலைப் போட்டு வெளியில் இழுக்கிறது போலீஸ். திரையில் நிகழ்த்திக் காட்டப்படும் என்கவுன்ட்டர் பார்வையாளர்களை மெளனமுறச் செய்கின்றன.

“வீரப்பன் போல் ஒரு மனிதன் இருந்ததுமில்லை; இருக்கப் போவதுமில்லை” என்ற வசனம் படத்தின் தொடக்கத்திலேயே வருகிறது. கொடூரமாக மனிதர்களைக் கொல்பவராகவும், யானைகளைச் சுட்டு, அதன் மேல் ஏறி நின்று யானையின் தந்தங்களை வெட்டுபவராகவும் அழுத்தமாகச் சித்தரிக்கப்படுகிறார்.

வீரப்பன் உண்மையிலேயே ஓர் அப்பாவி. அவனைப் பினாமியாக வைத்து அரசியல்வாதிகள் தான் சம்பாதித்தார்கள். இதைப் பற்றி படத்தில் சொல்லப்பட்டிருக்கா?

அந்தக் கான்ஸ்பிரைசி தியரியை நான் நம்பவில்லை. அது வீரப்பன் போல் தனித்துவமானவனுக்குச் செய்யும் இழுக்காக நான் நினைக்கிறேன் – ராம் கோபால் வர்மா.

வீரப்பன் தன் தொடர்புகள் அனைத்தின் மூலமும் ஏமாற்றப்பட்டிருக்கார் எனப் படத்தில் பதிந்துள்ளார் ராம் கோபால். உதாரணம், கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் கடத்தலுக்கு பிணைத் தொகையாக வாங்கப்பட்ட 9 கோடியில் 7 லட்சம் தான் வீரப்பனுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது என்கிறார் ராம் கோபால். புகழ்ப் போதையும் பணத் தேவையும் உடைய வீரப்பன், தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினியையும் காஞ்சி சுவாமியையும் (சங்கராச்சாரி) கடத்தத் திட்டமிட்டாராம்.

வீரப்பனுக்கு மக்கள் மனதில் நல்ல பெயர் இருந்தது. அவரை ஹீரோவாகக் கொண்டாடினார்களே! அந்தத் தகவல் படத்தில் இடம் பெற்றிருக்கா?

மக்கள் அனைவரும் அவரைக் கொண்டாடவில்லை. அவரால் பயன்பெற்றவர்கள் அவரை இன்று வரை கொண்டாடுகிறார்கள்; சிலர், அவரால் தான் தங்கள் பகுதியில் வளர்ச்சியில்லை என வருத்தத்தில் உள்ளார்கள்; ‘போலீஸ்க்குத் துப்பு கொடுப்பவர்’ என்று வீரப்பனின் சந்தேகத்தால் உயிரை இழந்த குடும்பத்தினரும், ‘போலீஸை ஊருக்குள் அழைத்து வந்துவிட்டான்’ என நினைத்தவர்களும் அவர் மேல் கடும்கோபத்தில் இருந்துள்ளனர்; இம்மூவகை மக்களைத் தவிர்த்து, நியூட்ரல் மனநிலையிலும் மக்கள் இருந்துள்ளனர். ஆக, மக்கள் மனதில் வீரப்பனுக்கு ஹீரோ இமேஜ் எனப் பொதுமைப்படுத்த முடியாது என்பது என் ஆய்வில் நான் நேரடியாகக் கண்ட உண்மை – ராம் கோபால் வர்மா.

படத்தில், மேலதிகாரிகள் அரசியல்வாதிகளின் அழுத்தம் தாங்காமல் STF (Special Task Force) ஊருக்குள் புகுந்து வீரப்பனின் மறைவிடத்தைச் சொல்ல மறுக்கின்றனரென, வீடுகளைச் சூறையாடி விட்டுச் செல்கின்றனர். பின், அங்கு வரும் வீரப்பன் அதைத் தனக்குச் சாதகமாக்கி மக்களின் அபிமானத்தைப் பெறுகிறார் எனக் காட்டியுள்ளார். STF, மலைக் கிராமப் பெண்கள் மீது கட்டவிழ்த்த பாலியல் வன்கொடுமைகள் பற்றி படத்தில் மருந்துக்குக் கூட ஒரு காட்சியிலும் இல்லை.

இன்னது தான் நடந்ததென்ற உண்மையை அறிய முடியாத பட்சத்தில், தனக்குக் கிடைத்த புள்ளிகளை இணைக்கும் புனைவுக்கான முழுச் சுதந்திரத்தை எடுத்துக் கொண்டுள்ளார் ராம் கோபால் வர்மா.