

விஜய் – மோகன்லால் இனைந்து நடிக்கும் படம் ஜில்லா. மலையாள சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறக்கும் மோகன்லால் தமிழில் நடித்தது பற்றி நம்மோடு பகிர்ந்து கொண்டவை.
ஜில்லா படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது பற்றி?
ஜில்லா படத்தில் நடிக்க முதல் காரணம் விஜய். அடுத்தது சூப்பர்குட் என்ற தரமான நிறுவனம். இதற்கெல்லாம் மேலாக நான் மலையாளப் படங்களில் பிஸியாக இருந்த வேளையில் விடாமல் என்னைத் துரத்தி கதை சொன்ன இயக்குநர் நேசன். ஏதோ வருகிறோம், போகிறோம் என்றால் மோகன்லால் எதற்கு? கதை அழகாக இருந்தது. அதில் எனது கேரக்டரும் வலுவாகப் பொருந்தும்படியாக இருந்தது.
விஜய்க்கும் அப்பாவாக நடிக்கிறீர்களே? ஹீரோ இமேஜ் பாதிக்காதா?
படம் பார்க்கும் யாருக்கும் அப்படியொரு கேள்வி எழாது. மதுரை மண்ணுக்கே உரித்தான வீரமும் கெளரவமும் கலந்த பாத்திரத்தில் வந்திருக்கிறேன்.
தமிழில் விஜய்க்கு, பெரிய ரசிகர்கள் உள்ளனர். கேரளாவில் உங்களுக்கும் பெரிய ரசிகர்கள் உள்ளனர். இரண்டு ரசிகர்களும் திருப்தியடைவார்களா?
தமிழ்நாட்டில் விஜய்க்கு பெரிய ரசிகர்கள் உள்ளது போல் கேரளாவிலும் அவருக்கு பெரிய ரசிகர்கள் உள்ளனர். அவரது ரஸ்கர்களுக்கும் எனது ரசிகர்களுக்கும் கண்டிப்பாக இனிப்பான பொங்கலாக ஜில்லா இருக்கும்.
கேரளா, தமிழ் ரசிகர்கள் பற்றி..
கேரளா, தமிழ் மக்கள் உறவுகளால், உணர்வுகளால், கலாச்சாராத்தால் ஒன்றானவர்கள். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே உருவாகிய நட்பு இது. இந்த அன்பையும் நட்பையும் யாராலும் பிரிக்க முடியாது. தமிழ்ப் படங்கள் கேரளாவிலும், கேரளா படங்கள் தமிழிலும் அதனால் தான் நன்றாக ஓடுகிறது.
மலையாளத்தில் நீங்கள் நடித்த ‘திரிசம்’ சூப்பர்ஹிட் ஆகியுள்ளதே?
இந்தப் படத்தின் கதை சொல்லும்போது பெரிய அழுத்தம் இருந்தது. இந்தக் கதையில் ஹீரோயிசம் இல்லையென்பது எனக்குத் தெரியும். ஆனால் கேரக்டர் அவ்வளவு அழுத்தமாக இருந்தது. ‘திரிசம்’ தமிழ், தெலுங்கில் கூட தயாராக உள்ளது.
விஜயுடன் உங்கள் நட்பு பற்றி?
சிறிய வயதிலேயே சூப்பர் ஸ்டார் ஆனவர். ஆனால் அதற்குரிய எந்த பந்தாவும், பதட்டமும் அவரிடமில்லை. பங்சுவாலிட்டி, ஒழுக்கம், உழைப்பு என பல அவரிடம் உள்ளது. அதனால்தான் இவ்வளவு ரசிகர்களைப் பெற்ற் உயர்ந்து நிற்கிறார். ஆரம்பத்தில் இருவரும் அமைதியாகத்தான் இருந்தோம். போகப்போக நல்லா பழக ஆரம்பித்து, நகைச்சுவையோடு பேச ஆரம்பித்தோம். இப்போது அவர் வீட்டிற்கு நானும், எனது வீட்டிற்கு அவரும் வந்து போகும் அளவிற்கு நட்பு வளர்ந்துள்ளது.
ஜில்லா படம் பார்த்தீர்களா?
நானும் எனது மனைவியும் சேர்ந்து பார்த்தோம். சிவனும் சக்தியும் சேர்ந்த ஜில்லா படம் மாசுடா பாடலுக்கு நானும் விஜயும் நடனமாடியதை எல்லோரும் பாராட்டினார்கள். எனது மனைவி எதையும் வெளிப்படையாக விமர்சிப்பவர். அவருக்கு படம் ரொம்ப பிடித்துள்ளது.
கேரளாவில் நீங்கள்தான் ஜில்லாவை வெளியிடுகிறீர்களாமே?
நான்தான் வெளியிடுகிறேன். சுமார் 300 திரையரங்களில் படம் வெளியாகிறது. ஜில்லா வெளியாகும் நாள் கேரள மக்களுக்கு கண்டிப்பாக ஓணம் பண்டிகையாக இருக்கும்.
– கோலிவுட் பாலா