Search

வேலாயுதம் விமர்சனம்

Velayutham

வேலாயுதம் – நவீனத்துவத்தால் சோடைப் போயிருக்கும் தமிழ்க் கலாச்சாரம், வீரம் மற்றும் இன்னபிற போன்றவைகளைத் தட்டி எழுப்பும் ஓர் உன்னத திரை முயற்சி.  குறியீடான படத்தின் தலைப்பில் இருந்தே அதை உணரலாம். வேல் பண்டையத் தமிழர்களின் ஆயுதம். வேலாயுதன் என்பது முருகனைக் குறிக்கும். முருகன் தமிழ்க் கடவுள்; வேலாயுதம் தமிழ்ப் படம். ஒவ்வொருவருக்கு உள்ளும் வேலாயுதம்(கடவுள்) வீற்றிருக்கிறார் என்ற வேதாந்த சாரத்தினை படத்தின் இறுதியில் நாயகனின் வசனமாக வைத்து மக்களை விழிப்புற செய்கிறார்கள்.

பவுனூர் என்னும் கிராமத்தில் பாசக்கார அண்ணன், தங்கை வாழ்கிறார்கள். மனிதர் உணர்ந்துக் கொள்ள அவர்களுடையது மனித பாசம் அல்ல; அதையும் தாண்டி புனிதமானது. புனிதமானவர்களின் வாழ்க்கையில் சோதனைக்கு பஞ்சமிராது. அப்படித் தான் அண்ணன், தங்கை இருவரும் சென்னைக்கு பயணிக்கும் பொழுது பாகிஸ்தான் தீவிரவாதிகளால் அவர்கள் வாழ்க்கையில் சோதனை நேர்கிறது. அந்தச் சோதனையை பாசக்கார அண்ணன் எப்படி எதிர்கொள்கிறார் என்பதுடன் படம் நிறைவுறுகிறது.

வேலாயுதமாக இளைய தளபதி விஜய். ஆஃப்கானிஸ்தான் தீவிரவாதிகளுக்கு சிம்மச் சொப்பனமாக விளங்கிய கேப்டன் அரசியலில் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டதால், தீவிரவாதிகளுக்கு துளிர் விட்டுப் போகிறது. திட்டமிட்டு சென்னையில் வெடிகுண்டு வைக்கின்றனர். தீவிரவாதிகளை அழிக்க கிடைத்த பொன்னான வாய்ப்பை கில்லி போல் பயன்படுத்திக் கொள்கிறார் விஜய். ஆடுறார்; பாடுறார்; ட்ரெயினைப் பார்த்தால் தாவிக் கொள்கிறார். ஆனால் தீவிரவாதியைப் பேசி திருத்துவதற்கு பதில் மக்களைத் திருப்பி விட்டு விடுகிறார்.

ஹன்சிகா மோட்வானி. நாயகனால் காதலிக்கப்படுவதால் நாயகி. திரையரங்கிற்கு வந்து கடுப்பானவர்கள் மன அழுத்தத்தை ஆவியாக்கி விரட்ட உதவுகிறார். பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்ல நினைக்கும் பத்திரிக்கையாளராக ஜெனலியா. படம் நெடுக்க வருகிறார்.

தன்னை திருடன் என நம்புவராக சந்தானம். அவர் மட்டும் இல்லையேல் படம் பார்ப்பவர்களின் கதி என்னாகும் என்ற கிலி ஏற்படுகிறது.  விஜய்யின் தங்கையாக சரண்யா மோகன். ஃபெரோஸ் கான் என்னும் ஐ.பி.எஸ். அதிகாரியாக ஷாயாஜி ஷிண்டே, பாண்டியராஜன், டி.பி.கஜேந்திரன், சிங்கமுத்து, எம்.எஸ்.பாஸ்கர், வையாபுரி என பலர் உள்ளனர் படத்தில்.

ஆரம்பக் காட்சிகளில் விஜய் சங்கிலியை இழுத்து ட்ரெயினை நிறுத்துகிறார். ஆனால் தீவிரவாதிகளிடம் சிக்கிய ட்ரெயினை, பிரயதனப்பட்டு இன்ஜின் உள்ள பெட்டிக்கு சென்று நிறுத்துகிறார். படம் இப்ப முடியும், அப்ப முடியும் என நினைத்தால் அலைக்கழித்தே நிப்பாட்டுகிறார்கள். வன்முறையைத் தீர்வாக சொல்லும் தமிழ்ப் படங்கள் வரிசையில் மற்றொன்று. தீவிரவாதியைக் கொல்ல ஊக்குவிக்கும் மக்கள், அரசியல்வாதியைக் கொல்ல ஊக்குவிக்கும் நாயகன் என ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் வன்முறையைக் கொண்டாடுகின்றனர். வேப்பெண்ணையை வாயில் ஊற்றிக் கொண்டது போல் முகத்தை வைத்திருக்கும் உள்துறை அமைச்சர் கதாபாத்திரம் போல் ஒரு மொன்னைப் பாத்திர வடிவமைப்பை தமிழ்த் திரையுலகம் தவிர்த்து வேறெங்கும் காண இயலாது.  பொருளின் தரம் அதன் மூலப் பொருட்களில் அடங்கியிருப்பது போல்.. விஜயகாந்திடமிருந்து பயங்கரவாதிகளையும், விஜய டி.இராஜேந்திரடமிருந்து தங்கச்சி மிகையுணர்ச்சியையும் இயக்குனர் ராஜா எடுத்திருந்தாலும் விஜய்யிற்கு வாய்த்தது என்னவோ அவரது வழக்கமான பாணி படம் தான். ‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்பதைப் பொய்த்து போக செய்துக் கொண்டிருக்கும் விஜய் என்னும் ஆளுமையை உங்களால வியக்காமல் இருக்க முடியாது.
Leave a Reply