Shadow

ஷட்டர்(2008) – தீராத காதல்

உலகம் முழுவதும் பேய்கள் பற்றியப் பார்வை பெரும்பாலும் ஒரே மாதிரியே இருந்து வருகின்றன. தீராத ஏக்கங்களுடன் தற்கொலை செய்துக் கொண்டாலோ அல்லது அசாம்பாவிதங்களால் நிகழும் துர்மரணங்களாலோ தான் உயிர் பிரிந்தவுடன் ஆவியாக அலைய நேருகிறது. ஆனால் உலகில் உலவும் 90% சதவிகித பேய்கள் பெண்களாகவே பதியப்பட்டுள்ளது. திரைப்படத்தில் வரும் பேய்களும் அதிகபட்சமாக பெண்களாகவே உள்ளனர். இந்த விஷயத்தில் உலகத் திரைப்படங்களுக்குள் தான் எத்தனை ஒற்றுமை!? இதற்கு என்னக் காரணமாக இருக்கும்? பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடும் ஆண்களின் குற்றவுணர்ச்சியாக இருக்குமோ!?
பென்னும், ஜேன்னும் திருமணம் செய்துக் கொள்கின்றனர். பென் ஒரு புகைப்படக் கலைஞன். திருமணம் முடிந்ததும் அமெரிக்காவில் இருந்து ஜப்பான் தலைநகரான டோக்கியோவிற்கு செல்கின்றனர். விமான நிலையத்தில் இறங்கி ஒரு சிவப்பு நிறக் காரில் பயணிக்கின்றனர். இரவு நேரம். ஜேன் கார் ஓட்டிக் கொண்டிருக்கிறாள். போகும் வழி சரி தானா என சந்தேகம் வர பென்னை எழுப்பி வரைப்படத்தைப் பார்க்க சொல்கிறாள். பென் வரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது ஜேன்னும் எட்டிப் பார்க்கிறாள். அந்த நொடி கவனக் குறைவால்.. சாலையில் நின்றுக் கொண்டிருக்கும் பெண் ஒருத்தியை மோதி விடுகிறாள் ஜேன்.
கார் தடம் மாறி சாலையிலிருந்து விலகி பனி அடர்ந்த காட்டுக்குள் சென்று ஒரு மரத்தில் மோதி நிற்கிறது. ஜேன் பதறிப் போய் தான் காரில் மோதிய பெண்ணைத் தேடுகிறாள். ஆனால் அங்கு பெண் ஒருத்தி விபத்தில் சிக்கியதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை. குற்றவுணர்ச்சியுடன் ஜேன் புது வீட்டிற்கு பென்னுடன் சென்று குடியேறுகிறாள். ஜேன் எடுக்கும் புகைப்படங்களில் எல்லாம் ஓர் ஒளிக் கற்றை வருகிறது. தொடக்கத்தில் சாதாரணமாக எடுத்துக் கொள்பவளுக்கு, இது தற்செயல் இல்லையோ என சந்தேகம் வருகிறது. ஆவிகளைப் புகைப்படம் பிடித்து வெளியிடும் பத்திரிக்கையாளன் ஒருவனைச் சந்திக்கிறாள். இதற்கிடையில் பென் பிடிக்கும் புகைப்படங்களும் அவ்வெள்ளை ஒளிக் கற்றையால் பாழாகின்றன. பென் அப்புகைப்படங்களைக் கழுவி அச்செடுக்கும் பொழுது அதிலொரு பெண்ணின் முகத்தைக் காண்கிறான். குழப்பத்தில் மூழ்கும் பென்னை ஏதோ உருவம் தொடுவது போல எல்லாமே அமானுஷ்யமாக நடக்கிறது. கழுத்தில் வேறு வலி தோன்றுகிறது. மருத்துவர் அனைத்து டெஸ்ட்டும் எடுத்த பிறகு கழுத்தில் எந்தப் பிரச்சனையும் இல்லை என சொல்லி விடுகிறார்.
“ஆத்மா என்பது ஆற்றல். உயிர் உடலை விட்டுப் பிரிந்ததும், உடல் அழிந்து விடுகிறது. ஆனால் ஆத்மா அழிவதில்லை. ஒளி என்பது ஆற்றல். ஒளியை கேமிரா பதிவது போல் தான் இதுவும்.”
 
“அவர்கள் எப்படித் தோன்றுகிறார்கள்?”
 
“மனதின் தீவிர உந்துதல் ஆவியின் தோற்றத்திற்கு காரணம் ஆகிறது. அதிகப்படி ஆசை, காதல், வெறுப்பு இருந்தால் மரணத்திற்குப் பின்னும் ஆத்மா உடம்புடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்கிறது.”
 
“நான் தெரியாம ஒரு ஆக்சிடென்ட் பண்ணிட்டேன்” என்கிறாள் ஜேன்.
 
“எழுன்ச்சு வா.”
 
முரேஸ் என்னும் ஆவியுடன் பேசும் வல்லமை உள்ள அந்த ஆள் போலி என இடையிலேயே எழுந்து வந்து விடுகிறான் பென்.வெளிப்புற படப்பிடிப்பின் பொழுது பென் எடுத்த புகைப்படங்களை ஆராய்கிறாள் ஜேன். ஓர் அப்பார்ட்மென்ட்டின் குறிப்பிட்ட இடத்தை சுற்றி சுற்றியே ஆவி அலைவதாக ஊகிக்கிறாள். ஒரு பொலராய்டு கேமிராவினை எடுத்துக் கொண்டு அந்த அப்பார்ட்மென்ட்டிற்குள் நுழைகிறாள். பேயின் இருப்பைத் தெரிந்துக் கொள்ள புகைப்படம் எடுக்கிறாள். நான்கைந்து புகைப்படத்திற்கு பின் அப்பெண்ணின் அருவ பிம்பம் புகைப்படத்தில் பதிகிறது. பதறும் ஜேன் அவ்வீட்டை விட்டு ஓட முயல்கிறாள். ஆனால் கதவு மூடிக் கொள்கிறது. சுவரில் மாட்டிக் கொண்டிருக்கும் ஒரு ஃபோட்டோ – ஃப்ரேம் தரையில் விழுகிறது.அந்த ஃப்ரேமில் உள்ள பெண்ணை தெரியுமா என பென்னைக் கேட்கிறாள் ஜேன். மேகுமி என்னும் அந்த ஜப்பானிய மொழிபெயர்ப்பாளனியும், பென்னும் காதலிக்கின்றனர். ஆனால் மேகுமியின் தந்தை அவர்கள் காதலை ஒத்துக் கொள்ளவில்லை. கண்டிப்புடன் வளர்க்கப்படும் மேகுமிக்கோ பென்னுடன் இருப்பதே பிடிக்கிறது. பென்னுக்கு விலை உயர்ந்த புகைப்படக் கருவியைப் பரிசளிக்கிறாள். மேகுமியின் தந்தை இறந்து விடுகிறார். பென்னும் மேகுமியைத் தவிர்ப்பதை அவள் உணர்கிறாள். ஆனால் தீராத காதலுடன் பென்னை விடாமல் பின் தொடர்கிறாள். பென்னின் நண்பர்களான ப்ரூனோ மற்றும் ஆடம் மேகுமியைச் சந்தித்து பென்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்கிறார்கள்.
ஆடம் விளம்பர அழகியைப் படம் பிடித்துக் கொண்டிருக்கிறான். ஜூம் செய்யும் பொழுது திடீரென ஒளி சிதறுவது போல் தெரிகிறது. அந்த ஒளி சிதறல் லென்ஸ் வழியாக நுழைந்து ஆடம்மின் வலதுக் கண்ணைப் பொசுக்கி விடுகிறது. ப்ரூனோவோ மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்துக் கொள்கிறான். முரேஸின் வார்த்தைகளை நினைவுக் கூருகிறாள் ஜேன். மேகுமியின் உடலைத் தேடி டோக்கியோவின் ஒதுக்குப் புறமாக இருக்கும் அவள் வீட்டுக்குப் போகிறார்கள் ஜேன்னும், பென்னும். மேகுமியின் எலும்பு கூட்டைப் பார்த்து பயந்து திரும்பி வந்து விடுகின்றனர். அன்றிரவு மேகுமி இருவரையும் கொல்ல முயல்வது போல் பயமுறுத்துகிறாள். விடிந்ததும் மேகுமியின் உடலை முறைப்படி தகனம் செய்ய ஏற்பாடு செய்கின்றனர். அதோடு ஜப்பான் வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு அமெரிக்கா வந்து விடுகின்றனர்.
புது வாழ்விற்கு தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்கிறாள் ஜேன். சமீபத்தில்எடுத்த புகைப்படங்களைப் புரட்டிப் பார்க்கிறாள். அந்தப் படங்களை உற்றுநோக்கும் பொழுது ஓர் உருவம் தவழ்ந்து சுவரில் உள்ள புகைப்படத்தை நோக்கிசெல்வது தெரிகிறது. அந்தப் புகைப்படத்தின் பின்னால் இருக்கும் அறையைஆராய்கிறாள் ஜேன். பென் குதூகலமாய் வீட்டிற்குள் வருகிறான். ஜேன் அமைதியாகமடிக் கணினியைத் திறந்து.. மேகுமியை ஆடமும், ப்ரூனோவும் பாலியல்தொந்தரவுகளுக்கு உட்படுத்தும் புகைப்படங்களைக் காண்பிக்கிறாள். (அந்தப்புகைப்படங்களை எடுத்தது பென். பிற்காலத்தில் அவள் தொந்தரவில் இருந்துதப்பிக்க.. அந்தப் புகைப்படங்கள் ப்ளாக்-மெயில் செய்ய உதவும் எனநண்பர்களின் வெறிச் செயலை அமைதியாக புகைப்படம் பிடித்துக்கொண்டிருக்கிறான்).“அந்தப் பொண்ண.. என்னச் செஞ்சீங்க!?” என்று கேட்கிறாள் ஜேன்.

“நான் ஒன்னும் பண்ணல. அவங்க ரெண்டு பேர் தான்….”

“அதனால் தான் அவங்க இறந்தாங்க.”

“எனக்கு ஒன்னும் ஆகல.”

“இல்ல.என்னை அந்தப் பொண்ணு எச்சரிச்சு இருக்கு. எனக்கு ஆரம்பத்தில் இருந்தே உதவிச் செய்யப் பார்த்து இருக்கா. உன் கூட வாழ் நாள் முழுவதும் இருக்க முடியாது” என ஜேன் பென்னை விட்டுப் பிரிந்து செல்கிறாள்.

ஜேன்னைப் பிரிந்த துக்கத்தில் கடுப்பாகும் பென், “அவ என்னை விட்டுப் போயிட்டா. அது தானே வேணும் உனக்கு. நாம ரெண்டுப் பேர் மட்டும் தான் இப்ப. வா முன்னாடி” என பொலராய்டு கேமிராவை வீடு முழுவதும் இயக்கிப் பார்க்கிறான். மேகுமி அங்கு இல்லை என கேமிராவைத் தூக்கி வீசி எறிகிறான் பென். தரையில் கிடக்கும் கேமிரா தானாக இயங்குகிறது. அந்தப் புகைப்படத்தை எடுத்துப் பார்க்கிறான் பென். பென்னுக்கு அவன் கழுத்து வலிக்கான காரணம் புரிகிறது. மேகுமி அவன் கழுத்தில் இரு கால்களையும் தொங்கப் போட்டவாறு அமர்ந்திருக்கிறாள். மேகுமி பென்னை விட்டு விலகியதே இல்லை. எரிச்சலுறும் பென், மேகுமி மேல் இருக்கும் கோபத்தில் தன் கழுத்தில் மின்சாரம் வைத்துக் கொள்கிறான்.
பென் மருத்துவமனையில் நினைவுகள் மழுங்கி முடங்கிக் கிடக்கிறான். அவனுக்கு நர்ஸ் ஊசி போட்டு விட்டு செல்கிறார். பென் எந்தச் சுரணையும் இன்றி தேமோவென அமர்ந்து உள்ளான். நர்ஸ் சென்றதும் கதவு ஆடுகிறது. கதவில் உள்ள கண்ணாடியில் பென் மற்றும் மேகுமியின் உருவம் பிரதிபலிக்கிறது. மேகுமியின் தீராத காதல் அவளை பென் விட்டு அகல விடுவதே இல்லை.

மேகுமி போல் (உயிர் பிரிந்தும்) விட்டு விலகாத காதலி கிடைக்க பென் கொடுத்து வைத்திருக்க வேண்டும். கண்டிப்பாக மனிதர் உணர்ந்துக் கொள்ள இது மனித காதல் அல்ல. அதையும் தாண்டி புனிதமானது.

நீதி: இறந்த பின்பும் பெண்கள் காதலை.. சில உயிருடன் இருக்கும் ஆண்களைப் போல் அலட்சியப்படுத்துவது இல்லை.

பி.கு.: 2004இல் வந்த ‘ஷட்டர்’ என்னும் தாய்லாந்துப் படத்தை 2008ல் ஹாலிவுட்டில் ரீ-மேக் செய்தனர். ஹிந்தியில் ‘க்ளிக்’ என்று 2010இல் வந்தது. தமிழில் கூட ‘சிவி’ என்னும் பெயரில் 2007இல் எடுக்கப்பட்டது.

– தமிழ் ப்ரியா

Leave a Reply