Shadow

சலீம் விமர்சனம்

சலீம் விமர்சனம்

‘நான்’ படத்தின் தொடர்ச்சியாக, சலீம் கதாபாத்திரத்தை இந்தப் படத்திற்குக் கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல் படத்தின் தலைப்பாகவும் சூட்டிவிட்டார். இந்தப் பாத்திரத்தைக் கொண்டு, இன்னும் 30 படங்களாவது செய்யும் எண்ணத்தில் உள்ளார் விஜய் ஆண்டனி.

தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள ‘நான்’-இல் கொலை புரியும் சலீம், இப்படத்தில் சேவை மனப்பான்மையுள்ள அமைதியான மருத்துவராக வருகிறார். ஆக கொலைகளின் எண்ணிக்கை குறைந்து இப்படத்தில் ஒன்றாகிறது. அதுவும் நல்லதுக்காகச் செய்யும் அறக்கொலை. அந்த ஒரு கொலையும் இல்லாமல், அடுத்த பாகத்தில் மகாத்மாவாகி பாலை வார்த்தால் இன்னும் நன்றாக இருக்கும். விஜய் ஆண்டனி தனது முந்தைய படத்தினைப் போலவே அதிர்ந்து பேசாமல், முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாதவராக உள்ளார். எல்லாவற்றையும் NV நிர்மல் குமாரின் திரைக்கதை பார்த்துக் கொள்கிறது. வசனங்களும் அட்டகாசம்.

கதாநாயகி நிஷாவாக அக்ஷா பார்தசாணி. படத்தின் முதல் பாதியைச் சுமக்கும் மிக முக்கியமான பாத்திரத்தில் வருகிறார். அவர் காட்டும் அலட்சியமும் கோபமும், சாந்த சொரூபியான சலீமுக்கே தாங்க முடியாத எரிச்சலை ஏற்படுகிறது. அவருக்கு மேலும் தூபம் போடுவது போல், திரையில் தோன்றும் பிரேம்ஜி அமரன், ‘அவள நம்பித்தான நாசமாயிட்டேன்’ என கானா பாலாவின் பாடல் வரிகளுக்கு வாயசைக்கிறார். இரண்டாம் பாதியில் ஓரிரு காட்சிகளில் மிக சொற்ப நிமிடங்களே வந்தாலும், விதிகளுக்கு உட்பட்டு லூசுப் பெண்ணாகி விடுகிறார் அக்ஷா. ஆனால் பெரும்பான்மையான தமிழ்ப்பட நாயகிகளைவிட இவர் பன்மடங்கு புண்ணியம் செய்தவர் என்றே சொல்லவேண்டும்.

தனிமையில் உழலும் நாயகனை மையப்படுத்தி நகர்கிறது படத்தின் முதல் பாதி. இரண்டாம் பாதி, அதிமுக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனை ஒன்றினை கையில் எடுக்கிறார் இயக்குநர். பணம் பாதாளம்வரை பாயும் இந்தியாவில், சட்டத்தின் நீண்ட கைகளில் இருந்து அதிகார வர்க்கத்தினர் எப்படியும் தப்பி விடுவார்கள். ஜெசிகாலாலின் கொலை வழக்கும், மோக்ஷாக்னாவின் மீது வழக்கு போடாத காவல் துறையினருமே சான்று (நன்றி: வினவு.காம்)! இத்தகைய பிரச்சனைக்கு, தமிழ்ப்பட நாயகனுக்கே உரிய பாணியில் நாயகன் புத்திசாலித்தனமாக தீர்வு காண்கிறார். படத்தின் விறுவிறுப்பும், சுவாரசியமும் மின்னல் வேகத்தில் நகர்கிறது. அமைச்சராக நடித்திருக்கும் இயக்குநர் RNR.மனோகரும், காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சந்திரமெளலியும் கலக்குகிறார்கள்.

படத்தில் விஜய் ஆண்டனியின் முகம்தான் எந்த உணர்ச்சியையும் பிரதிபலிக்கவில்லையே தவிர, பின்னணி இசை திரைக்கதையின் நெளிவு சுளிவுக்குத் தகுந்தாற்போல் ஏறி இறங்குகிறது. படத்தின் தலைப்பைத் தொடர்ந்து, பெயர் பொடும்பொழுது யூசுஃபின் குரலில் வரும் இஸ்லாமிய பிரேயர் சாங் முதல் தொடரும் எனப் போட்டு படம் முடியும்வரை விஜய் ஆண்டனி, இசையால் ஒரு குறையும் வராமல் பார்த்துக் கொள்கிறார். தீயதைப் பார்க்க மாட்டேன் எனத் திரும்பிக் கொள்கிறது படத்தின் தொடக்கத்தில் காட்டப்படும் ஆந்தை. ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திராவும், படத்தொகுப்பாளர் ராஜேஷ் குமாரும், நிர்மல் குமாரின் கதையைக் கச்சிதமாகக் காட்சிப்படுத்த உதவியுள்ளனர். வெந்ததையே மீண்டும் வேக வைக்காமல், 148 நிமிடங்கள் பார்வையாளர்கள் நெலியாமல் உட்கார வைக்கிறது. சலீமாக சம்ர்த்தாய் விஜய் ஆண்டனி கலக்கியுள்ளார்.