Shadow

எலக்‌ஷன் விமர்சனம்

நாயகர்களின் அரசியலை விட்டுவிட்டு நடுத்தர மக்களின் அரசியலை அச்சு அசலாகக் காட்டியிருக்கிறது இந்த எலக்‌ஷன் திரைப்படம். அரசியல், தேர்தல் போன்றவைகளை வெளியில் இருந்து பார்ப்பதற்கும், அதன் அங்கமாக மாறி அதனோடு பயணிப்பதற்குமான வித்தியாசங்களை ஆணித்தரமாகப் பேசியிருக்கிறது எலக்‌ஷன் திரைப்படம்.

ஜனநாயகத்தின் பலமே இந்தத் தேர்தல் முறையின் மூலம் தங்களைத் ஆளப் போகிறவர்களை மக்கள் தாங்களே தேர்ந்தெடுப்பது தான் என்று நாம் மார்தட்டிக் கொண்டாலும், அப்படி மக்களால் ஒவ்வொரு முறையும் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் யாராக இருக்கிறார்கள்? நல்லவன் என்றோ, நல்லது செய்பவன் என்கின்ற நம்பிக்கையைப் பெற்ற ஒருவனோ, இந்தத் தேர்தல் நடைமுறைகளின் வழி மக்களின் தலைவன் ஆகிவிட முடியுமோ என்று கேட்டால், அதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என்பதே சத்தியமான பதில். அதைத்தான் இந்த எலக்‌ஷன் பேசி இருக்கிறது.

நாற்பது ஆண்டு காலம் கட்சிக்காக நாயாக உழைக்கின்ற ஒரு தொண்டனைக் கடைசி வரை தொண்டனாக வைத்திருக்கவே முயல்கிறது கட்சி. அதைத் தாண்டி தொண்டன் அதிகாரத்தின் ஒரு மையமாக மாற நினைக்கும் போது அவனை அதட்டிக் கட்டி வைக்கிறது. முடியாத போது அரிவாளால் வெட்டி வைக்கிறது என்கின்ற கள யதார்த்தம் எந்தவிதச் செயற்கை சாயமும் பூசிக் கொள்ளாமல் அப்பட்டமாகக் காட்டப்பட்டு இருக்கிறது.

ஒரு பழம்பெரும் கட்சியின் 40 ஆண்டுகாலத் தொண்டராக இருக்கும் ஜார்ஜ் மரியான், தன்னோடு சேர்ந்து கட்சியில் ஒன்றாகப் பயணித்த தன் நண்பன் கட்சியில் உள்ளாட்சி தேர்தலில் சீட் கேட்டு, தலைமை இல்லை என்று மறுக்க, அவன் கட்சியில் இருந்து வெளியேறி சுயேட்சையாக நிற்கிறான். அப்போதும் நண்பனுக்கு துணை நின்று தோள் கொடுக்காமல், கொண்ட கொள்கைக்காக கட்சியின் வேட்பாளரை ஆதரித்து ஓட்டு கேட்கிறார். இதனால் நட்பு உடைகிறது. அதுமட்டுமின்றி தன் மகன் சுயேட்சையாக ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்குப் போட்டியிடும் போதும் தன் மகனுக்காக தேர்தல் வேலை பார்க்காமல் கட்சி வேட்பாளருக்காகத் தேர்தல் வேலை பார்க்கிறார்.

அப்படிப்பட்ட அந்தத் தொண்டன் ஒரு கட்டத்தில் தனக்காக சீட் கேட்க, ஜார்ஜ் மரியானின் நண்பனுக்கு என்ன நடந்ததோ அதுவே அவருக்கும் நடக்கிறது. அந்த எளிய தொண்டன் உயிராக நினைத்த அந்தக் கட்சித் துண்டைக் காற்றில் பறக்கவிட்டு உடைந்து போகிறான். இது ஒரு கதை. இதைத் தவிர்த்து தேர்தலையும், பதவியையும், வெற்றி தோல்வியையும் ஒவ்வொருவரும் எப்படி எப்படிப் பார்க்கிறார்கள் என்பதான பல கிளைக்கதைகள். இவை எல்லாம் சேர்ந்தது தான் இந்த எலக்‌ஷன்.

ஜார்ஜ் மரியானின் மகனாக விஜயகுமார் நடித்திருக்கிறார். இவருக்கென்ற வடிவமைக்கப்பட்ட ஆக்‌ஷன் காட்சிகளிலும், காதல் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி முத்திரை பதிக்கிறார். உணர்வுபூர்வமான காட்சிகளில் சற்று தடுமாறி இருக்கிறார். தந்தையாக ஜார்ஜ் மரியான் நிறைவான நடிப்பைk கொடுத்திருக்கிறார். அம்மாவாக நடித்திருக்கும் நாச்சியாள் சுகந்தி அந்தக் கதாபாத்திரத்தோடு பொருந்திப் போகிறார்.

அயோத்தி மூலம் நம் அடிநெஞ்சில் குடியிருக்கத் துவங்கிய ப்ரீத்தி அஸ்ரானி குடும்பப்பாங்கான மனைவியாக வந்து அசத்தியிருக்கிறார். குடிகார மாமாவாக, இயலாமையுடன் கூடிய உடல்மொழியுடன் வளைய வரும் பாவல் நவகீதன் முற்றிலும் புதுமையான வெகுளித்தனமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். இரண்டு கைகளையும் தடவிக் கொண்டு பேசும் அந்த உடல்மொழி வாழ்க்கையில் தோல்வியுற்ற, அவநம்பிக்கையுடன் கூடிய ஒரு மனிதனை நம் கண் முன் நிறுத்த உதவி இருக்கிறது.

வத்திக்குச்சி திலீபன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். தேர்தல் தோல்வியினால் ஏற்பட்ட வலியை இழக்க முடியாமல் தூக்கிக் கொண்டே அலையும் துயரம் நிரம்பிய பல முகங்களின் ஒட்டு மொத்த பிரதிநிதியாக வாழ்ந்து கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். இவர்கள் தவிர்த்து முஸ்லிம் பாயாக நடித்திருக்கும் அருள், திருநங்கையாக நடித்திருப்பவர், சேவியர், மூர்த்தி, அம்பேத்கர் போன்றோரும் கதைக்குத் தேவையான நடிப்பைக் கொடுத்து கதாபாத்திரத்துடன் ஒன்றிப் போகின்றனர்.

கோவிந்த் வசந்தா இசையில் தேர்தல் களத்திற்கான பாடலும், காதல் களத்திற்கான பாடலும் கச்சிதமாகக் கரை சேர்ந்திருக்கிறது. பின்னணி இசையிலும் குறைவேதும் இல்லை. மகேந்திரன் ஜெயராஜுவின் ஒளிப்பதிவு தமிழகத்தின் வேறொரு நிலப்பரப்பை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. 

சேத்துமான் திரைப்படத்தை இயக்கிய தமிழ், இப்படத்தை இயக்கி இருக்கிறார். வசனங்களை எழுத்தாளர் அழகிய பெரியவன் எழுதி இருக்கிறார். எலக்‌ஷன் என்பது அதிகாரத்திற்கும் பணபலத்திற்கும் எப்படி பக்கபலமாக மாறி இருக்கிறது. மக்களும் இந்த வாழ்க்கை மற்றும் நடைமுறைக்கு எப்படிப் பழகிப் போய் இருக்கிறார்கள் என்பதையும், தேர்தலில் நிற்கும் நல்லவர்களுக்கும், மக்களுக்குமான இடைவெளியும், அந்த நல்லவர்களுக்கும் அதிகாரத்திற்குமான இடைவெளியும் எந்தக் காலத்திலும் இட்டு நிரப்ப முடியாத இடைவெளியாக இருந்து கொண்டே தான் இருக்கும் என்பதையும், மன்னராட்சிக்குப் பழக்கப்பட்டு வாழ்ந்த நாம், இன்று மக்களாட்சி என்ற பெயரில் கட்சிகளின் ஆட்சிக்கும் வாரிசு அரசியலுக்கும் பழக்கப்பட்டு வருகிறோம் என்பதையும் நெற்றிப்பொட்டில் அடித்துச் சொல்கிறது படம். 

அரசியல் படம் என்றாலே இருக்கக்கூடிய போட்டி, பொறாமை, அடிதடி, வெட்டுக்குத்து, கொலை, துரோகம், பழிவாங்கும் உணர்வு போன்றவை எல்லாமே இந்த எலக்‌ஷனிலும் இருக்கிறது. என்னவொரு வித்தியாசம் என்றால், நாயகர்களின் படமாக இல்லாமல், இந்த ஜனநாயகத்தில் நாமளும் தலைவர்கள் ஆகலாம் என்று நம்பி ஏமாறும் நடுத்தரனின் படமாக இருக்கிறது.

எலக்‌ஷன் – யதார்த்த அரசியல்.

– இன்பராஜா ராஜலிங்கம்