Shadow

படிக்காத பக்கங்கள் விமர்சனம்

தலைப்பாகப் பார்த்தால் கதை சொல்ல வரும் கருத்து, பெரிய பெரிய குற்றங்கள் நடக்கும் போது, அவை தொடர்பான செய்திகள் கண்ணைக் கவரும் வகையில் பெரிய எழுத்துக்களில் தலைப்புச் செய்தியாக வரும். அதே குற்றங்கள் தொடர்பான வழக்கு விசாரணையும், குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படும் ஜாமீன் தொடர்பான செய்திகளும், அவர்களின் விடுதலை தொடர்பான செய்திகளும் கண்ணில் படாத குட்டிச் செய்திகளாக பத்திரிக்கையில் வெளியாகும். பெரும்பாலும் நாம் இந்தக் குட்டிச் செய்திகளை படிக்காமல் கடந்து விடுவோம் அல்லது தவறவிட்டு விடுவோம். அவை தான் படிக்காத பக்கங்கள்.

தலைப்பும் அது சொல்ல வரும் கருத்தும் ஓகே. ஆனால் அது கதையோடு எந்த வகையில் தொடர்புடையதாக இருக்கிறது என்று கேட்டால் கதைக்கும் அதற்கும் தொடர்பே இல்லை என்பது போல் தான் இருக்கிறது.

படத்தின் கதை என்னவென்றால் நடிகை ”ஸ்ரீஜா”-வாகவே நடித்திருக்கும் யாஷிகா ஆனந்த் படப்பிடிப்பிற்காக சேலம் ஏற்காடு பகுதியிலுள்ள ஒரு ஹோட்டலில் தங்க வருகிறார். அவரை பேட்டி எடுக்க ஒரு லோக்கல் சேனலில் இருந்து ஒரு ரிப்போர்ட்டர் வருகிறார். பேட்டி தொடங்கியதும் குதர்க்கமான கேள்விகளைக் கேட்டு யாஷிகாவைப் கோபப்படுத்துவதோடு அவரை அடித்து துன்புறுத்த துவங்குகிறார். மேற்கொண்டு என்ன நடந்தது என்பது “படிக்காத பக்கங்கள்” படத்தின் மீதி கதை.

ஒரு ஹோட்டல் அறைக்குள் பிரபல நடிகையை அடைத்து வைத்து இப்படியெல்லாம் பண்ண முடியுமா..? என்கின்ற கேள்வி மேலெழுவதை தவிர்க்க முடியவில்லை.

நடிகை ஸ்ரீஜாவாக நடித்திருக்கும் யாஷிகா ஆனந்தை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படமாக தெரிகிறது. அவரும் அதை உணர்ந்து அவரால் முடிந்த அளவிற்கு சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகன் பிரஜன் ஏதோ கெளரவ தோற்றத்தில் வருபவர் போல் இரண்டாம் பாதியில் தலைகாட்டி, க்ளைமாக்ஸில் சம்பிரதாய சண்டை போட்டு படத்தை முடித்து வைக்கிறார்.

ஜார்ஜ் மரியம் நாயகிக்கு உதவி செய்யும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட வந்து போகிறார் என்றே சொல்லலாம்.

படத்தின் மிகப்பெரிய பலவீனம் வில்லன் நடிகர்களின் கூட்டம், பேட்டி எடுக்க வருபவரும் அவருக்குப் பின்னணியில் இருக்கும் வில்லன் கூட்டமும் காமெடி அடியாட்கள் தோற்றத்தில் இருந்து கொண்டு சைக்கோ வில்லனுக்கான வசனங்களைப் பேசுவதை ஜீரணிக்க முடியவில்லை. அந்த கூட்டத்தில் உள்ள ஒவ்வொருவரின் நடிப்பும் படு செயற்கையாக நாடகத்தன்மையுடன் இருக்கிறது.

இன்னும் எத்தனை நாள் தான் பணம் கொடுத்துவிட்டால் தங்களின் வீடியோக்களை சம்பந்தப்பட்டவர்கள் அழித்துவிடுவார்கள் என்று பெண்கள் நம்புவது போல் படம் வரப்போகிறதோ தெரியவில்லை.

எஸ் மூவி பார்க் & பெளர்ணமி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் “படிக்காத பக்கங்கள்”. செல்வன் மாதப்பன் எழுதி இயக்கி இருக்கிறார். யாஷிகா ஆனந்த், ப்ரஜன், மரியம் ஜார்ஜ், லொள்ளு சபா மனோகர், பாலாஜி, முத்து மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்., டாலி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜெஸ்ஸி கிப்ட் இசையமைத்திருக்கிறார். சரண் சண்முகம் மற்றும் மூர்த்தி படத்தொகுப்பு பணிகளை கவனித்திருக்கின்றனர்.

மொத்தத்தில் படிக்கக்கூடாத பக்கங்கள் முக்கிய செய்தியை தாங்கி இருந்தாலும் படிக்கக்கூடியதாகவும், பார்க்கக்கூடியதாகவும் இல்லாமல் போனது வருத்தமே.

– இன்பராஜா ராஜலிங்கம்