

நீண்ட இடைவெளிக்குப்பிறகு வைகைப்புயல் வடிவேலு நடிக்கும் படம் ‘ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன்’. தெனாலிராமன், மன்னர் என இரட்டை வேடங்களில் நடித்து பட்டையைக் கிளப்பியுள்ளார் வடிவேலு.
இப்படத்திற்காக அரண்மனை, கோட்டைச்சுவர், நகரம் என ஏகப்பட்ட பொருட்செலவில், பிரம்மாண்டமான செட்டுக்கள் போடப்பட்டு, படமாக்கப்பட்டது. மேலும் குற்றாலம், அச்சன் கோவில், பாண்டிச்சேரி போன்ற இடங்களிலும் முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. வரலாற்றுக்கால பின்னணியில் மிகவும் வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ள நகைச்சுவைப் படம் இது.
D.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் பின்னணி இசை சேர்ப்பு வேலை இப்போது நடைபெற்று வருகிறது. கலை இயக்குநர் M.பிரபாகரன் பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து மிரட்டியுள்ளார். ஒளிப்பதிவாளர் ராம்நாத் ஷெட்டி தத்ரூபமாக காட்சிகளைப் படமாக்கியுள்ளார்.
கலைவித்தகர் ஆரூர்தாஸ், சிரிக்கவும் சிந்திக்கவும் தக்க வகையில் வசனம் எழுதியுள்ளார். கதை திரைக்கதை எழுதி மிகவும் வித்தியாசமான முறையில் இப்படத்தை இயக்கியுள்ளார் யுவராஜ் தயாளன்.
சித்திரை மாதம் திரைக்கும் வரும் இந்த பிரம்மாண்டமான படத்தை, AGS எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி S.அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் ஆகியோர் தயாரித்து இருக்கிறார்கள்.

