32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

கொம்புசீவி விமர்சனம் | Kombuseevi review

Dinesh R சேலம் Published: 20/12/2025 4 நிமிட வாசிப்பு Updated: 14/05/2026 இது புதிது
எழுத்து அளவு:

கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன், கிட்டத்தட்ட 2015-இலேயே சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி விட்டார். ஆயினும் கடந்த 10 ஆண்டுகளில் மொத்தமே 3 படங்கள் தான் நடித்திருக்கிறார். முதல் 3 படங்களிலுமே கடமைக்குத் தங்கள் கைக்கு அடக்கமாக இயக்குநர் ஒருவரைப் போட்டு இஷ்டத்துக்குப் படம் எடுத்ததன் விளைவாக இன்னுமே பெரிய பிரேக் கிடைக்காமல் வலம் வருகிறார். இப்போது தான் பொன்ராம் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஒரு இயக்குநரிடம் கதை கேட்டு நடித்திருக்கிறார். ஆனால் அவர் கதை கேட்ட நேரம் பொன்ராம் சுமார் படங்களையே தந்து போராடிக் கொண்டிருக்கிறார். இவ்விருவருக்குமே இப்படம் மிக முக்கியமானதொன்று என்பதால் எதிர்பார்ப்பைத் தூண்டியிருந்தது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

வழக்கமான பொன்ராம் படங்களைப் போலவே, “என்னப்பா அலப்பறைய குடுத்துட்டிருக்கீங்க?” எனச் சொல்லும் தென்மாவட்ட வட்டாரத்தைச் சுற்றிய ஒரு கதை தான். மதுரைப் பகுதியில் உள்ள கிராமத்தில் கஞ்சா கடத்தல் செய்கிறார்கள் சரத்குமாரும் சண்முகபாண்டியனும். அதே ஊருக்குக் காவல்துறை அதிகாரியாக வருகிறார் நாயகி தாரணிகா. நாயகி மீது நாயகனுக்குக் காதல் மலர்கிறது. தாய் தந்தை என யாரும் இல்லாமல் சரத்குமார் அன்பில் வளர்ந்த இளைஞன் சண்முகபாண்டியன் வாழ்க்கை எப்படி இருந்தது, காதல் என்னானது, கஞ்சா கடத்தல் போன்ற தொழிலை நாயகன் செய்ய காரணம் என்ன என்பது தான் படத்தின் கதை.

சண்முகபாண்டியன் முந்தைய படங்களை விட நடிப்பில் கொஞ்சம் முன்னேற்றமடைந்துள்ளார். கொஞ்சம் கலகலவென இன்னொரு பரிமாணத்தில் இப்படத்தில் தெரிகிறார். நல்லா வாட்டசாட்டமாக இருப்பதால் ஆக்ஷன் எல்லாம் பொளந்து கட்டுகிறார். ஆனால் என்ன கதையில் அதற்கான நோக்கம், சிட்சுவேஷன் எல்லாம் சரியாக அமைந்தால் தானே ரசிக்க முடியும்? எதற்கோ, யாரையோ, ஏதோ அடிக்கிறார் மாதிரி தான் தேமேவெனப் பார்க்க வேண்டியுள்ளது.

பருத்தி வீரன் கார்த்தி – சித்தப்பு காம்போவை நினைவுபடுத்துற மாதிரி சரத்துடன் கூடச் சேர்ந்து சுற்றிக் கொண்டிருக்கார் சண்முகபாண்டியன். சரத்குமாரின் நடிப்பில், அவரது அனுபவம் மிளிர்கிறது. நாயகி தாரணிகா நாட்டாமை படத்தில் டீச்சராக நடித்த ராணியின் மகளாவார். கியூட்டாக ரசிக்கத்தக்க வகையில், படம் முழுவதும் காவல் உடையில் ரசிக்க வைக்கிறார். கல்கி, முனீஷ்காந்த், காளி வெங்கட், ஜார்ஜ் மரியான், இந்துமதி என நல்ல நல்ல நடிகர்களும் படத்தில் உள்ளனர். Just உள்ளனர்.

பொன்ராம் இந்தக் கதையை அணைக்கட்டு என்ற ஒரு களத்திற்குக் கொண்டு போகிறார். ஆனால் அந்த அணைக்கும், இந்தக் கதைக்கும் என்ன சம்பந்தம், இவர்கள் உண்மையில் கஞ்சாவை எல்லாம் டன் கணக்கில் கடத்தி, அந்தப் பணத்தை வைத்து என்ன வாழ்ந்தார்கள் என்பதெல்லாம் பரம ரகசியமாகவே இருக்கிறது. கடைசிக் காட்சி வரை அதே வேட்டி, டவுசரில் தான் வலம் வருகிறார்கள். ஒருவர் தன் மகள் கல்யாணத்துக்கு நகை போட உதவுவதாக வாக்கு கொடுக்கிறார் நாட்டாமை சரத். ஆனால் 50,000₹ கேட்ட அந்தப் பெண்ணின் அப்பாவிற்குக் காசு கூடக் கொடுக்க முடியவில்லையாம் சரத்தால். ஏனெனில், ‘போலீஸ் கேஸ், கோர்ட்னு காசு எல்லாம் கரைஞ்சு போச்சு’ எனச் சொல்கிறார் வளர்ப்பு பிள்ளையான சண்முகபாண்டியன்.

ஆனால் போலீஸாரோ, டூப் போலீஸை விட காமெடியாக வந்து போகிறார்கள். போலீஸ் ஸ்டேஷனைக் கொளுத்திய வழக்கில் மாமா – மாப்பிள்ளையைக் கைது பண்ணுகிறார்கள். ஆனால் அந்த வழக்கில் பதியாமல் வெடிகுண்டு செய்த வழக்கை அவர்கள் மீது போடுகிறார்கள் போலீஸ். நீதிமன்றத்தில், ‘எதுக்கு வெடிகுண்டு செஞ்சீங்க?’ என நீதிபதி கேட்க, ‘பாகிஸ்தான் மேல போட’ எனச் சொல்கிறார்கள். அந்த வழக்கை தள்ளுபடி செய்து விடுவித்து விடுகிறார் நீதிபதி. தேசபக்தியில் அந்நீதிபதி,  நேற்று வெளியான கந்தன்மலை படத்து ஐயாவையே மிஞ்சி விடுகிறார். இன்னொரு காட்சியில், 5 டன் கஞ்சாவை ஆந்திராவுக்குக் கடத்துவதும், அதைப் போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டுக் கடத்துவதும் குபீர் ரகம். க்ளைமேக்ஸ்ஸ் காட்சியில், 50 போலீஸ் ஒட்டுமொத்தமாகத் துப்பாக்கியுடன் போய் போலீஸ் ட்ரைனிங்கில் சுடுகின்ற மாதிரி சுட்டுக் கொண்டிருக்க, பணத்தைப் பரப்பி வச்சி படுத்துக் கொண்டுள்ளார்கள் மாமாவும் மாப்பிள்ளையும். அம்மா பாசம் என சில காட்சிகள் வருகிறது, அந்த எமோஷனும் எடுபடவில்லை. கடத்தல் செய்யும் இவர்கள் நோக்கம் என்ன என்பதும் புரியவில்லை. சரி காவல்துறையின் நோக்கமாவது புரிகிறதா என்றால் அதுவுமில்லை.

பொன்ராம் ஒரு சில இடங்களில் ஓரளவிற்குக் காமெடி கலந்து ரசிக்க வைக்கிறார். ஆனால் படம் எதை நோக்கிப் போகிறதென்பதும் தெரியவில்லை, என்ன ஜானர் படமென்பது கடைசி வரை விளங்கவில்லை. லாஜிக் எல்லாம் மறந்து படம் பார்த்தால், ஆங்காங்கே சில காட்சிகளில் நகைச்சுவைக்குக் கொஞ்சமாக உத்திரவாதம் அளித்துள்ளார் பொன்ராம்.

– மாறன் செ

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.