32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

மகாசேனா விமர்சனம் | Mahasena review

Dinesh R சேலம் Published: 12/12/2025 2 நிமிட வாசிப்பு இது புதிது
எழுத்து அளவு:

மகாசேனா என்பது யாளீஸ்வர் எனும் தெய்வத்தைக் குறிக்கும் திருநாமங்களில் ஒன்றெனப் படத்தலைப்பாகப் பயன்படுத்தியுள்ளனர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

யாளிமலையில் உள்ள குரங்கணி எனும் ஊரில், எவர் கண்ணுக்கும் தெரியாத ‘யாளீஸ்வரர் சிலை’ ஒன்று கோயிலில் இருப்பதாகக் கருதப்படுகிறது. சித்ரா பெளர்ணமியன்றே அச்சிலையைக் கண்களால் காண முடியும். அதை அபகரிக்க அடிவாரப்பகுதி மக்கள் மூவாயிரம் ஆண்டுகளாக முயற்சி செய்கின்றனர். குரங்கணியின் தலைவன் செங்குட்டுவன் அதைக் காப்பாற்ற நினைக்க, அதை அடைந்தே தீருவது எனும் தீவிரமான பிடிவாதத்துடன் உள்ளார் அடிவாரப்பகுதி தலைவி கங்கா. யாளி சிலையை அடைந்தே தீருவதென்ற கங்காவின் சபதம் நிறைவேறியதா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

நரபலி கொடுக்கும் காட்டுவாசிகளாக உள்ளனர் அடிவாரப்பகுதி மக்கள். அதிகாரிகளின் தலைகளைக் கொய்து சாக்கில் சுருட்டி எடுத்துச் செல்லும், கைலி அணிந்த நாகரீகமானவர்களாக உள்ளனர் குரங்கணி மக்கள். குரங்கணி மக்களுக்குப் பாதுகாவலாக விளங்குகிறது சேனா எனும் பெரிய கம்பீரமான ஆண் யானை. அது திரையில் தோன்றினாலே, அவ்வானையின் கம்பீரம் மனதை வசீகரிக்கிறது.

படத்தின் முதற்பாதி எதை நோக்கிச் செல்கிறதென்றே தெரியாமல் பயணிக்கிறது. குரங்கணி தலைவர் செங்குட்டுவனாக நடித்துள்ள விமலே கெளரவத்தோற்றத்தில்தான் நடித்துள்ளாரோ என நினைக்குமளவே அவருக்குக் காட்சிகள் அமைந்துள்ளன. மேடை நாடகத்தில் நடிகர்கள் நடந்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று, வசனம் பேசி விட்டு நகர்வது போலவே, இப்படத்திலும் கதாபாத்திரங்களின் நகர்வும் வசன உச்சரிப்பும் அமைந்துள்ளன. அடிவாரப்பகுதித் தலைவி கங்கா மட்டும் கடைசி வரை தூய தமிழில் பேசியவாறு உள்ளார். கங்காவாக மஹிமா குப்தா நடித்துள்ளார். மஹிமா குப்தாவின் காட்டுவாசி கணவர் இடும்பனாக விஜய் சேயோன் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு மிரட்டலாக நிற்கிறார். அவரது முன், களவாணி ஹேங் ஓவரில் உடலை மிகத் தளர்வாய் வைத்துக் கொண்டிருக்கும் விமல் வந்து நிற்கும்போது துரும்பாய்த் தெரிகிறார். செங்குட்டுவன் மனைவி பொம்மியாக வரும் சிருஷ்டி டாங்கே, கணவர்க்கும் சேர்த்து ஆங்காங்கே கோபாவேசம் காட்டுகிறார்.

முதற்பாதியில், ஒரே ஒரு டயலாக் பேச ரொம்பத் தூரம் நடந்து வந்து, தனக்காகக் குறிக்கப்பட்ட இடத்தில் நின்று பேசிவிட்டுச் செல்கிறார். யாளீஸ்வரர் சிலையை அடைய நினைக்கிற ஒரு கடத்தல் குழுவும், ஊழல் வனத்துறை அதிகாரி பிரதாப்பாக ஜான் விஜயும், கிங் ஆஃப் காட்ஸாகக் கபீர் துஹான் சிங்கும், குரங்கனிக்கு ட்ரெக்கிங் வருகின்ற ஒரு மாணவர் குழுவும், அக்குழுவின் ஆசிரியர் காமராஜாக அல்ஃப்ரெட் ஜோஸும், வனத்துறை சார்பான வழிகாட்டி சுருளியாக யோகிபாபுவும் குரங்கணிக்கு வந்து சேருகின்றனர்.

படத்தின் இரண்டாம் பாதியில், முதற்பாதியின் குறைகள் கலையப்பட்டுக் கோர்வையாகப் பயணிக்கிறது திரைக்கதை. ஒளிப்பதிவாளர் மனாஸ் பாபு DR-இன் ஒளிப்பதிவில் மான்டேஜஸாகக் காட்டப்படும் மலைச்சிகரங்கள் அழகாக உள்ளன. நல்ல தொன்மவியல் கதையை சுமாரான திரைக்கதையால் நீர்த்துப் போகச் செய்துள்ளார் இயக்குநர் தினேஷ் கலைச்செல்வன்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.