Shadow

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 2

போதி தர்மா: மாஸ்டர் ஆஃப் ஜென் – 1

67 வருடங்களுக்குப் பிறகு, குருவின் கட்டளையை நிறைவேற்ற போதி தர்மர் சீனா கிளம்புகிறார். அவரது வயோதிகத்தைக் காரணம் காட்டி அவரது பயணத்தை ரத்து செய்யும் படி, அப்போதைய மன்னரான போதி தர்மரின் அண்ணன் மகன் வேண்டுகோள் விடுக்கிறார்.

“நான் என் சீடனை தேர்வு செய்யணும்” என்று நிறுத்தி விட்டு, “சீனாவில் ஜென்னைப் பரப்ப வேண்டியது என் கடமை” என்று மன்னனின் வேண்டுகோளை மறுக்கிறார் போதி தர்மர்.

தர்க்கப்படி போதி தர்மர் ‘ஜென்’ என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்க வாய்ப்பில்லை. ‘ஜென்’ என்பது ‘சேன் (Chan)’ என்ற சீன வார்த்தையின் ஜப்பானிய உச்சரிப்பு ஆகும். Chan என்ற வார்த்தையோ ‘தியான(ம்)’ என்ற சமஸ்கிருத வார்த்தையின் தழுவல். கி.மு. 2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக நம்பப்படும் பதஞ்சலி என்பவர் இயற்றிய யோக சூத்திரத்தில் வரும் அட்டாங்க யோகத்தின் 8 படிநிலைகளுள் ஏழாவது தான் தியானம் ஆகும்.

வரும் ஆதி ஈரெட்டுள் வந்த தியானம்
பொருவாத புந்திபுலன் போகமேவல்
உருவாய் சத்தி பரத்தியானம் உன்னும்

குருஆர் சிவத்தியானம் யோகத்தின் கூறே

       என்று தியானத்தைக் குறித்து கி.பி. 2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக நம்பப்படும் திருமூலரும் தனது திருமந்திரம் என்னும் நூலில் பாடியுள்ளார். புலன்கள் எல்லாம் மனதில் ஒடுங்கி பற்றற்ற நிலையை அடைய உதவுவது தியானம் என பொருள் கொள்ளலாம். ஆக ஜென்னைத் தோற்றுவித்தவர் போதி தர்மர் அன்று. மஹாயனா பெளத்தத்தை தியான முறையுடன் சேர்த்து போதிக்க சென்றவருக்கு ஜென்னைத் தோற்றுவித்தவர் என்ற பெருமையை சீனர்கள் அளித்து விட்டனர்.

தன் சித்தப்பாவைத் தடுக்க முடியாது என அறிந்த மன்னர், சீன மன்னருக்கு போதி தர்மரை சிறப்பாக வரவேற்க சொல்லி கடிதம் ஒன்றினை புறா கழுத்தில் கட்டி அனுப்பி வைக்கிறார். இந்திய மன்னர் ஒருவராலேயே பிரதிநிதித்துவப் படுத்தப்பட்ட துறவி என்பதால், சீன மடங்களும் சீன மக்களும் போதி தர்மரை வரவேற்க கோலாகலமாக தயாராகின்றனர்.

‘டங் லிங்’ மடத்திற்கு மற்ற மடத்துப் பிக்குகள் போதி தர்மரை வரவேற்க குழுமுகின்றனர். பெரும் பயணத்தின் முடிவில் பரதேசியாய் டங் லிங் மடத்திற்குள் நுழைகிறார் போதி தர்மர். பெருந்திரளாய் பிக்குகள் போதி தர்மரை வரவேற்க வாசல் நோக்கி வருகின்றனர். அவர்களின் பார்வை செருப்பணியாத போதி தர்மரின் கால்கள் மீது விழுகின்றன.

“உங்களை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்” என்று முகமன் கூறுகிறார் மடத்தின் மூத்த பிக்கு.

“நாம் அனைவரும் புத்தரின் சேவகர்கள். அநாவசியமாக என்னை உபசரிக்காதீங்க” என்கிறார் போதி தர்மர்.

“தங்கள் சீடர்கள் எங்கே!?”

“நான் அவர்களை அழைத்து வரவில்லை.”

“தங்களின் புத்தகங்கள் எங்கே!?”

“அவற்றையும் நான் எடுத்து வரவில்லை.”

“ஓ.. நீங்கள் பெளத்தத்தில் மிகுந்த தேர்ச்சி உடையவர். உங்களுக்கு பெளத்தத்தைப் போதிக்க புத்தகங்கள் தேவைப்படாது. எல்லாம் மனதிலேயே இருக்கும்” என்ற தனது ஏமாற்றத்தை சமாளித்துக் கொள்கிறார் மூத்த பிக்கு.

குருவிற்குரிய மேடையில் போதி தர்மரை அமர செய்து, அனைவரும் அவரின் பிரசங்கத்தைக் கேட்கும் ஆவலில் அமைதியாக நின்றுக் கொண்டிருக்கின்றனர். போதி தர்மர் மேடையில் இருக்கும் மேசை மீதிருந்த புத்தகங்களை எல்லாம் புரட்டி விட்டு, கண்களை மூடி அமர்ந்து விடுகிறார்.

“ஏன் அவர் எதுவும் பேச மாட்டேங்கிறார்!?” என்று கேட்கிறான் சின் மோன்.

“இது தான் இந்தியாவில் பழக்கமோ என்னமோ!?” என்று சந்தேகமாகவே சீடனுக்கு பதிலளிக்கிறார் மூத்த பிக்கு.

போதி தர்மர் மெல்ல கண்களைத் திறக்கிறார்.

“இப்ப போதனை தொடங்கிடும்” என சீடன் பக்கம் திரும்பி புன்னைக்கிறார் மூத்த பிக்கு.

போதி தர்மர் எழுந்து நின்று அனைவரையும் வணங்கி விட்டு மேடையில் இருந்து இறங்கி விடுகிறார். காத்திருக்கும் பிக்குக்கள் அனைவரும் குழம்புகின்றனர்.

சின் மோன் அவசரமாக போதி தர்மரை இடைமறித்து, “என்னாச்சு!? ஏன் போறீங்க?” என கேட்கிறான்.

போதி தர்மர் அவனைப் பார்த்து புன்னகைத்து விட்டு செல்கிறார்.

சீடன் போதி தர்மரை நெருங்கி மேலும் கேள்வி கேட்க எத்தனிக்கும் பொழுது, “மரியாதையாக நடந்துக் கொள்” என்று சின் மோன்னை அடக்குகிறார் மூத்த பிக்கு.

“ஆனா.. அவர் மரியாதையாக நடந்துக்கலையே!!” என்று குறைபடுகிறான் சின் மோன்.

“நீங்க சரியாக வரவேற்று உபசரிச்சு இருக்க மாட்டீங்க. அதான்!!” என்கிறார் மூத்த பிக்கு.

“நாங்கள் சரியாக தான் உபசரிச்சோம்.”

“பின்னர் ஏன் அவர் பேசவில்லை!?” என்று மூத்த பிக்குவிற்கும் குழப்பம் மேலிடுகிறது.

Leave a Reply