சமுத்திரக்கனியின் இயக்கத்தில் வந்திருக்கும் ஐந்தாவது படம் போராளி. சென்னைக்கு வரும் நாயகன் ‘பெட்ரோல் பங்க்’கில் வேலை செய்கிறார். பெட்ரோலின் தொடர் விலை ஏற்றத்தை நாசூக்காக காட்சிப்படுத்தியுள்ளார். எந்தவொரு கலைப் படைப்பும் சமகால விடயங்களைத் தனக்குள் பதித்துப் பின்வரும் சந்ததியினர் அறிந்து கொள்ளத்தக்க வகையில் இருக்கும். பெரும்பாலும் தமிழ்த் திரைப்படங்கள் கலை வரிசைக்குள் வராது. அவ்வகையில் நொடிகளில் மறையும் இந்த விலையேற்றப் பதிப்பு காட்சிகள் ஓர் ஆறுதலான கலைச் சங்கதி. தற்போது வருகின்ற படங்கள் எல்லாம் வலிந்து தமிழுணர்வை ஏதேனும் ஒரு வசனங்களிலாவது புகுத்தி விடுகின்றன. இப்படமும் அதற்கு விதி விலக்கில்லை.
நாடோடிகள் படத்தில் போகிறப் போக்கில், “இன்னா செய்தாரை ஒறுத்தல்..” எனத் தொடங்கும் திருக்குறளை எதிர்பாராத இடத்தில் மேற்கோள் காட்டி அசத்துவார் சமுத்திரக்கனி. இந்தப் படத்தில் இன்னும் அழகாக, நாயகியின் மன இறுக்கம் தளர்ந்து நாயகன் மேல் பிடிப்பு ஏற்படுவதை, “அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்” என அம்பாசிடர் காரின் பின்புற கண்ணாடியில் உள்ள எழுத்துக்கள் மூலம் உணர்த்துகிறார். இது ஒரு சப்பை விடயமாக இருக்கலாம். ஆனால் எத்தனை இயக்குனர்கள் தங்களது படைப்புகளில் இத்தகைய நுணக்கங்களை கையாள்கின்றனர் என்பதை யோசிக்க வேண்டும். (திரைமொழிகள் கிஞ்சித்தும் அற்ற “பாலை” படம் ஞாபகம் வருகிறது. அதன் இயக்குநர் சொன்னது போல் கேலிச் சித்திரமாக வந்தாலாவது.. 2000 வருடத்திற்கு முந்தைய தமிழரின் வாழ்க்கைப் பற்றி ‘காமிக்ஸ்’ ரசிகர்களுக்கு மட்டுமாவது தெரிந்திருக்கும்).

மனநோயும் காய்ச்சல், தலை வலி போன்று மிகச் சாதாரண நோய்கள் என்பதே இப்படத்தின் பிரதான கரு. உடல் நோயிற்கு வைத்தியம் பார்ப்பது போல், மனநோயை வளர விடாமல் ஆரம்பத்திலேயே சிகிச்சை அளித்து குணப்படுத்தலாம். அப்படிச் செய்ய முற்படாததால் 10% பேர் மனநோய் மருத்துவமனைகளிலும், 90% பேர் சாலைகளிலும் திரிகின்றனர் என காட்சிகள் வைத்துள்ளார் இயக்குனர். உறவுகளின் புரிதலும், அன்பான அரவணைப்பும் தான் ரொம்ப முக்கியம் என்ற வசனங்கள் படத்தில் வருகின்றன. மருத்துவர் பேசவதும் அதை சசிகுமார் அமைதியாக உள்வாங்குவதுமாக காட்சிகள் அமைந்துள்ளன.
ஆனால்..
‘முன்னப் பின்னத் தெரியாதவன் கூட உதவுவான்.. ஆனா இந்தச் சொந்தக்காரன் இருக்கானே!!’ என்று உறவினர்களின் மீதான நம்பிக்கையைக் கேள்விக் குறியாக்குவது போல் இரண்டொரு முறை வசனம் பேசுகிறார் நாயகன். ஆனால் பைத்தியம் என ஒதுக்கப்படும் பெண் ஒருவரின் தந்தையைப் பார்த்து, “எவனோ சொல்றத நம்புவ.. பெத்த பொண்ணு சொல்றத நம்ப மாட்ட. நீ பேசி இருந்தாலே இங்க எந்தப் பிரச்சனயுமே நடந்திருக்காதேய்யா” என உறவுகள் மீது நம்பிக்கை வைக்க அறிவுரைப்பார். நாயகன் மனதில் உள்ள இந்த முரண் அப்படத்தில் வில்லனாக தோன்றுபவரிடம் இல்லை. தங்கை மற்றும் தங்கை மகனுக்காக மறுகுகிறார். உறவுகளின் மீதான நம்பிக்கையை வளர்த்தெடுப்பவராக உள்ளார் வில்லன். நாயகி, ஒரு பாட்டி, ஒரு பள்ளி மாணவி என அநாதைகள் மூவர் ஒன்றாக உறவுகளாக வாழ்கின்றனர். அதே சமயம் நாயகியின் கீழ் வீட்டில் வாழும் படவா கோபியும், சாந்தி என்ற பெயர் கொண்ட அவரது மனைவியும் எப்பவும் சண்டையிட்டுக் கொண்டே உள்ளனர். அந்தக் காம்பவுண்டில் வாழும் குடிக்காரர் ரொம்ப நல்லவராகச் சித்தரிக்கப்பட்டுள்ளார். நாயகி அநாதை என்று தெரிந்ததும் நல்லவேளை நாயகனுக்குள் காதல் மலரந்து தொலைக்கவில்லை.



