Search

மெல் கிப்சனில்லா ‘மேட் மேக்ஸ்’

மேட் மேக்ஸ்

1979 இல், ஒரு ஆஸ்ட்ரேலியப் படம் உலகத்தின் கவனத்தை ஈர்த்தது. அது சிட்னி மருத்துவர் ஜார்ஜ் மில்லர் இயக்கிய “மேட் மேக்ஸ்” படம். அவசர சிகிச்சைப் பிரிவில் பணி புரிந்த வந்த மில்லர், விபத்தில் பாதிக்கப்பட்ட பலருக்கு சிகிச்சை அளித்துள்ளார். அந்த சிகிச்சை அனுபவங்கள் அவருக்களித்த தாக்கங்கள் அவர் படத்தில் பிரதிபலித்தது. அன்றைய தேதியில், ‘ரோட் மூவிஸ்’ படங்களுக்கு இப்படம் ஒரு ட்ரெண்ட் செட்டராக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தின் நாயகன் நமக்கு மிகவும் பரிச்சயமான ஹாலிவுட் ஹீரோ மெல் கிப்சன். இதன் அடுத்தடுத்த பாகங்கள் 1981இலும், 1985இலும் வந்தன.

1998 இல் நான்காவது பாகத்திற்கான விதை எழுந்ததாக தன் முயற்சிகளை மேற்கொண்டார் ஜார்ஜ் மில்லர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக படம் ஆரம்பக் கிடப்பிலேயே இருந்தது. தன் பாதையை மாற்றிக் கொண்ட மெல் கிப்சனும், மேட் மேக்ஸ் சீரிசின் நான்காவது படத்திலிருந்து விலகிக் கொண்டார். இம்முடிவிற்கு அவரது வயதும் ஒரு காரணம்.

முப்பது ஆண்டுகளுக்குப் பின் வரவிருக்கும், ‘மேட் மேக்ஸ்: ஃப்யூரி ரோட்’ படத்தில் டாம் ஹார்டி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக சார்லைஸ் தெரான் நடிக்கிறார். முப்பரிமாணத்தில் எடுக்கப்பட்டுள்ளது இப்படம்.

குடும்பத்தை இழந்து தனிமையில் வாழும் மேக்ஸ் ராக்கட்டான்ஸ்கி, ஃப்யூரியோஸா என்பவரை பாலைவனத்தில் இருந்து கடற்கரைக்கு அழைத்துச் செல்லவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. ‘இம்முறை எரிபொருளுக்காகவோ, பணத்துக்காகவோ சண்டை நடக்காது. மனிதர்களுக்காக நடக்கும்’ என்றார் ஜார்ஜ் மில்லர். இந்த 17 வருடத்தில் கதை மாற்றங்களை அடைந்திருக்கலாம். ஆனால், ஜார்ஜ் மில்லர் பல்வேறு தடைகளைக் கடந்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார் என்பது மட்டும் திண்ணம். அவரது நம்பிக்கை வியப்பை அளிக்கிறது. மற்ற மூன்று படங்களைப் போல், இப்படமும் ரசிகர்கள் மத்தியில் நிச்சயம் கொண்டாடப்படும் என நம்பலாம்.