ஒவ்வொரு வேலை உணவிற்கும் போராடியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஆதி மனிதனிடம் போர்க் குணங்கள் நிரம்பி இருந்தது. தற்காப்பிற்காகவோ, உணவிற்காகவோ வேட்டையாடி பழக்கப்பட்ட மனிதனிடம் நாகரீகம் என்ற பெயரில் சாத்வீக குணங்கள் கொஞ்சம் தோன்றினாலும் மிருக குணங்கள் முற்றிலும் விடைப் பெறவில்லை. உள்ளிருக்கும் மிருகம் அடிக்கடி தனது பலத்தை சோதித்து பார்த்துக் கொள்ள துடித்த வண்ணம் உள்ளன. அந்த துடிப்பு தரும் போதை காரணமாக இராணுவத்தில் சிலர் ஆர்வத்தோடு சேர்கிறார்கள். அப்படி வந்தவர்களையும்.. எங்கிருந்தோ தாக்கும் நவீன ஆயுதங்களின் முன் தன் முழு வீரத்தையும் வெளிப்படுத்த முடியாத சோர்வும், மறைந்திருந்து தாக்குபவர்களால் ஏற்படும் எரிச்சலும், கண் முன் சக மனிதர்கள் சிதறும் கோரமும் தளர்வுற செய்யும். ஒரு வெடிகுண்டு அகற்றும் குழுவில் ஏற்படும் இத்தகைய தளர்வுறல்களை அழகாக சொல்லியிருக்கும் படம்’. வியட்னாம் போரில் வெடிகுண்டுகளை செயலிழக்க செய்யும் அந்த பணியினை ‘வலிகளின் பெட்டகம் (தி ஹர்ட் லாக்கர்)’ என்ற சொற்றொடர் மூலம் குறிப்பிடுவது வழக்கம்.
“யுத்தத்தில் விசையுடன் தள்ளப்படுவது பலமான ஆபத்தை விளைவிக்கக் கூடிய அடிமைப்படுத்தும் பழக்கம்; போர் ஒரு போதை” – க்ரிஸ் ஹெட்ஜஸ். இந்த பொருத்தமான வரிகளோடு படம் துவங்குகிறது.
ஈராக் தலைநகரான பாக்தாத் நகரத்தில் வெடிகுண்டுகளை அகற்றும் முயற்சியில் உயிரிழக்கிறார் வெடிகுண்டு அகற்றும் குழுவின் தலைவர் தாம்ப்ஸன். அவருக்கு பதிலாக சர்ஜென்ட் வில்லியம் ஜேம்ஸ் அவ்விடத்திற்கு வந்து சேருகிறார். முதல் நாளே குழுத் தலைவனை அங்கு வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பீரங்கிகளைக் காட்டி கலவரப்படுத்த நினைக்கும் இரண்டு சகாக்களை பார்த்து, ‘இத விட அதிகமாவே நான் ஆஃப்கானிஸ்தான்ல பார்த்திருக்கேன்’ என சலனமில்லாமல் பதில் சொல்கிறார் வில்லியம். பழைய குழுத் தலைவரின் இழப்பை மறக்காத சகாக்களால், பணியில் வில்லியம் காட்டும் அலட்சியமும், அசட்டுத் துணிச்சலும் அவர்களுக்கு எரிச்சலை மூட்டுகிறது. வெடிகுண்டை வைத்தவர்களை கண்டுபிடிக்கத் துடிக்கும் வில்லியமிடம், அது நமது வேலையில்லை என சகாக்கள் தடுத்தும் அவர்களை தன் கீழ்ப் படிய செய்கிறார் வில்லியம். யார் ஆபத்தானவர்கள், யார் அப்பாவிகள் என பிரித்தறிய இயலாமல் ஒரு வித பதட்டத்துடனே அங்கு அனைத்தும் நிகழ்வது வீரர்களுக்கு மேலும் திகிலை வளர்க்கிறது. அங்கு காயம் படும் சகாக்களில் ஒருவன் வில்லியமை சபித்தவாறே செல்கிறான். குழுவில் மீதமிருக்கும் மற்றொருவனுக்கு வாழும் ஆசை வந்து விடுகிறது. ஆனால் ஒப்பந்தம் முடிந்த பிறகும் வில்லியம் மீண்டும் வேறு நிறுவனத்துடன் அதே பணியில் சேருகிறான்.
சான்பார்ன் மற்றும் எல்ட்ரிட்ஜ் என்ற இரு சகாக்களின் வேலை, குழுத் தலைவர் வெடிகுண்டுகளை அகற்றும் பொழுது அவருக்கு துப்பாக்கியின் துணைக் கொண்டு தலைவருக்கு பாதுகாப்பளிக்கனும். இத்தகைய ஒருக்கிணைப்பான வேலையை வில்லியம் அவர்களுடனான தொடர்பை துண்டித்துக் கொண்டு தன்னிச்சையாக செய்வதால் அவர்களுக்குள் மன்ஸ்தாபம் எழுகிறது. வில்லியம் கொடுக்கும் தொல்லைகள் பொறுக்க முடியாமல் அவனை கொன்று விடலாமா என யோசிக்கும் அளவுக்கு செல்கின்றனர். எதிர்பாராத வகையில் பாலைவனத்தின் மத்தியில் இவர்கள் குழு ஆபத்தில் சிக்கும் பொழுது, இவர்களுக்குள் இருக்கும் புரிதலின்மை சற்று குறைகிறது. எல்ட்ரிட்ஜின் நண்பரான கலோனல் காம்ப்ரிட்ஜ் இவர்கள் கண் முன்பே வெடித்து சிதறுகிறார். எல்ட்ரிட்ஜுடன் நெருக்கமாக இருந்து வெடித்து சிதறும் இரண்டாவது நபர். அதிலிருந்து எல்ட்ரிட்ஜ் மீளும் முன்னே வில்லியம்மின் ஆவேசமான முடிவுகளால் எல்ட்ரிட்ஜின் காலில் குண்டு பாய்கிறது. தொடரும் காட்சிகளில் அப்பாவி ஒருவனின் உடம்பில் குண்டுகளை கட்டி அனுப்பி விடுகின்றனர். வக்கில்லாதவன் தன் மனைவியினை வீட்டிலடைத்து பல பூட்டுக்கள் கொண்டு பூட்டுவது போல, அந்த அப்பாவி மீது பல பூட்டுக்களால் பிணைக்கப்பட்ட இரும்பு கம்பிகளின் அடியில் பத்திரமாக வெடிகுண்டுகளை வைத்து விடுவார்கள். எதையும் முரட்டுத்தனத்துடன் கையாளும் வில்லியம் நேர குறைவால் அவனைக் காப்பாற்ற முடியாமல் போகிறது. இந்த நிகழ்ச்சி சான்பார்னைப் பெரிதும் பாதிக்கிறது. வில்லியமுக்கு தெரிந்த சிறுவன் ஒருவனை கொன்று அவன் வயிற்றில் வெடிகுண்டுகளை வைத்து விடுகின்றனர். அவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் தோல்வி அடைந்தாலும், வில்லியமை அந்நிகழ்ச்சி பாதிக்கிறது. அந்த பையன் உண்மையில் சாகவில்லை என்ற உண்மை கூட வில்லியமிற்கு மகிழ்ச்சி அளித்தது போல் தெரியவில்லை. ஆக அந்த வறண்ட பாலைவனம் குழுவிலிருக்கும் மூவரையும் மன உளைச்சலுக்கு உள்ளாக்குகிறது.
படத்தில் ஆங்காங்கே சிறு நகைச்சுவைகளும் ரசிக்க வைக்கிறது. நிறைய வெடிகுண்டுகளை பார்த்ததும் பாதுகாப்பு உடையை கழற்றும் வில்லியம், ‘சாகும் பொழுது இறுக்கமற்று நிம்மதியாக சாக விரும்புகிறேன்’ என்று சொல்கிறார். இரவு வெகு நேரம் கழித்து தங்கும் முகாமிற்கு திரும்பும் வில்லியம் வாயிற் காவலர்களிடம், வேசி வீட்டிலிருந்து வருவதாக சொல்கிறான். உடனே வாயிற் காவலன், ‘நீ ஒழுங்கா உள்ள போகனும்னா.. அந்த முகவரிய சொல்லிடு’ என்று மிரட்டுகிறான். மேம்போக்காக இது நகைச்சுவையாக இருந்தாலும், எங்கோ பிறந்து எவர் கட்டளைகளுக்கோ உட்பட்டு பாலைவனத்தில் தவிக்கும் அவர்களின் ஏக்கங்களின் நியாயம் புரியும்.
படம் போர் தேவையா, அவசியமா போன்ற கேள்விகளுக்குள் எல்லாம் போகாமல் வெளியேவே நிற்கிறது. ஒரு குழுவுக்குள், அந்தக் குழுவிலுள்ள மனிதர்களுக்குள் ஏற்படும் மாற்றங்களை வெடிகுண்டுகள் ஏற்படுத்தும் புற சேதங்களோடு இணைந்து இப்படம் சொல்கிறது. இந்த படத்தின் திரைக்கதையை எழுதியவர் வியட்னாம் போரில் ஈடுபட்டு, பிறகு சுதந்திர நிருபராய் (freelance journalist) உருமாறியிருக்கும் மார்க் போல். 2004ல் ஈராக்கில் பணி புரிந்த வெடிகுண்டு அகற்றும் குழுவுடன் அருகிலிருந்து பார்த்த அனுபவங்களைக் கொண்டு இக்கதையைப் புனைந்துள்ளார். இப்படத்தின் இயக்குனரான கேத்ரீன் பிக்லோவுடன் முன்பே தொலைக்காட்சி தொடர் ஒன்றில் இணைந்து பணியாற்றியுள்ளார். தனது முன்னாள் கனவர் ஜேம்ஸ் கேம்ரூன் பாணியில், நாயகனுக்காக குழந்தையுடன் காத்திருக்கும் அன்பு மனைவியென சிறு சென்ட்டிமென்ட் விஷயத்தை படத்தின் நடுவில் வசனத்திலும், முடியும் பொழுது காட்சிகளிலும் வைத்துள்ளார். இப்படம் கேத்ரீனுக்கு எட்டாவது படம் என்றாலும், இவரது முதல் படம் 1982ல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. ‘தி ஹர்ட் லாக்கர்’ பல புகழாரங்கள் மற்றும் விருதுகளை பெற்றுத் தந்ததுடன் அல்லாமல், சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருதைப் பெற்ற முதல் பெண் என்ற பெருமையையும் பெற்றளித்துள்ளது.
வெடிகுண்டு வெடுக்கும் பொழுது.. மணல் துகள்கள் பூ மலர்வது போல் ஒவ்வொன்றாய் மேலெழுவதை ‘ஸ்லோ-மோஷனில் காண்பிப்பதாகட்டும், பள்ளி விட்டவுடன் சிட்டென பறக்கும் பள்ளிக் குழந்தைகள் போல் காரில் ஒட்டியிருக்கும் மணல் துள்ளலுடன் தெறிப்பதாகட்டும் ஒளிப்பதிவின் துல்லியமும் கோணங்கள் வாய் பிளக்க வைக்கின்றன. அதற்கு இணையான படத்தொகுப்பும் பார்த்தால் தான் புரியும் அதன் அருமை.
மிகைப்படுத்திய காட்சிகள் என்று படத்தில் எதுவும் சொல்ல முடியாது. சாதாரணமான கதை எதார்த்தமாக நகர்கிறது. இசை சில இடத்தில் வெடிகுண்டுகள் வெற்றிக்கரமாக அகற்றப்பட வேண்டும் என்ற படபடப்பை ஏற்படுத்துகிறது. சில இடங்களில் காலடி ஓசை மட்டுமே கேட்கிறது. வெடிகுண்டுகள் வெடிக்கப் போகும் இடத்தைச் சுற்றி நிற்கும் மக்கள் எந்த சலனமும் காட்டாமல் இருப்பது ஆச்சரியத்தை தருகிறது. அந்த சூழ்நிலைகளுக்கு அவர்கள் பழகி விட்டது காரணமாக இருக்கலாம் என்று யூகிக்கும் பொழுது நமக்கு அதிர்ச்சியே மிஞ்சுகிறது.
வேலைக்கான ஒப்பந்தம் முடிந்து வீட்டிற்கு செல்லும் நாயகனான வில்லியம், தன் மகனிடம் பேசும் வசனங்கள் அர்த்தம் பொதிந்ததாய் உள்ளது. ‘உனக்கு இப்ப எல்லாம் பிடிக்கும். உங்க அம்மா, அப்பா, பைஜாமா, பெட்டிக்குள் இருக்கிற நரி பொம்மை. ஆனா நீ வளர ஆரம்பிச்சவுடன் உனக்கு இப்ப முக்கியமா இருக்கிற பலதை நீ மறந்தே போயிடுவ. என் வயசில் உனக்கு இரண்டு, மூனு விஷயம் தான் பிடிக்கும். ஆனா எனக்கு ஒண்ணே ஒண்ணு தான்…’ என்று காட்சிகள் நேராக போர்க்களத்திற்கு விரைந்து இலக்கிய அழகோடு முடிகிறது. நாயகனுக்குள் இருக்கும் போதை தரும் மிருகம் அவனை மீண்டும் போர்க்களத்திற்கே தள்ளிவிடுகிறது.
“போர் ஒரு போதை!!”
– ஜங்கன்