
இது நான் எழுதும் விமர்சனமல்ல ஒரு ரசிகனாக நான் உணர்ந்ததை உங்களிடம் சொல்கிறேன் அவ்வளவுதான்.
திரைக்கதை எழுதுவது எப்படி என்ற புத்தகத்தில் திரு.சுஜாதா அவர்கள் இப்படி சொல்லியிருப்பார் எல்லோரிடமும் ஒரு நல்ல கதை இருக்கும் அதை எப்படி சொல்கிறோம் என்பதில்தான் பிரச்சினையே, அதாவது வெற்றியா தோல்வியா என்று. அந்த வகையில் பார்த்தால் இந்த படம் பல நல்ல கதைகளை கொண்டுள்ளது நல்லவிதமாகவும் சொல்லியுள்ளது.
ஒரு சிறந்த படம் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உண்டான எல்லா தகுதி தராதரங்களுடன் வெளிவந்து வெற்றிப் பெற்றுள்ள படம் அங்காடித் தெரு. அதாவது ஓர் ஓவியம் எப்படி தனக்குள் அனைத்தையும் வைத்துக்கொண்டு பார்க்கும் பலரின் மனதில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறதோ, உணர்வுகளை சுண்டி எழுப்புகிறதோ அதேபோலான ஒரு படைப்புத்தான் அங்காடித் தெரு. பிரச்சாரமில்லாமல் பல உன்னத கருத்துக்களை மக்கள் மனதில் தூவுகின்றது. எந்த ஒரு சிறந்த படைப்பும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கானஎடுத்துக்காட்டு உதாரணமாக அமைந்துள்ளது.
இதை ஒரு நவீன திரைக்கதை என்று சொல்வதில் நான் மிகவும் என்னளவில் திருப்தியடைகிறேன்.
விபத்திற்குள்ளாகும் அந்த வண்டியில் எழுதியுள்ள பெயரும், விபத்தில் அகால மரணமடைந்த தந்தையின் மகன் நாயகன் பணிபுரியும் பல்பொருள் அங்காடியின் பெயரும் ஒன்று. நாயகியை தண்டிக்கும் பொழுதெல்லாம் என்ன நடக்கிறது என்பதை ஒரு புடவை கட்டிய பொம்மையை காட்டுவதன் மூலமும், பிற்பாடு ஒரே வசனத்தில் “நான் இந்த ஒரு ஆம்பளகிட்டயாவது மன ரோஷத்தோட இருக்கிறனே” என சொல்வதன் மூலமாகவும், குழந்தையை காண்பிக்காமலே ஒரு பேரதிர்வை ஏற்படுத்தும் ஜெயமோகனின் வசனம் மூலமும் ஒரு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இறந்த தந்தையின் போட்டோவை வைத்து படைக்கும் பொழுது சக்தி மசாலா மஞ்சள் பாக்கெட் இருப்பது, என படத்தின் ஒவ்வொரு காட்சியைப் பற்றியும் விரிவாகப் பேச நிறைய உள்ளது.
ஒரு படத்தை நாம் பார்க்கும்பொழுது, நம்மையுமறியாமல் கதையினுள் நம்மை அதுவாகவே இழுத்துக்கொள்ள வேண்டும். அந்த காட்சியில் நாமிருப்போம், அந்தகதாபாத்திரமாக நாம் மாறியிருப்போம், கதை சொல்லியாக இருந்தால் அந்த கதை மாந்தராக நாம் பயணிப்போம். அதைத்தான் இந்தப்படம் செய்கிறது.
அடிக்கடி ஒரு சில குறியீடுகள்(அண்ணாச்சி, சினேகா விளம்பரமும் பாடலும், கடையின் பெயர்தாங்கிய பை நேரடியாகவே காண்பிப்பது) மூலம் ஒரு குறிப்பிட்ட கடையை சுட்டிக்காட்டுவதுபோல நான் உணர்கிறேன்.
பல கிளைகதைகள்/சிறுகதைகள்:
- பொது கழிப்பிடத்தை சுத்தம் செய்து தனது வாழ்க்கையை மாற்றியமைத்துக் கொள்ளும் ஒருமனிதன்.
- கண்தெரியாத ஒருவர் அங்கு வியாபாரம் செய்து வாழ்க்கையை நடத்துவது.
- விலைமாதரும் அவரின் கணவர் வளர்சிகுன்றி இருக்கும் அவரும்.
- கடையினுள் மற்றொரு காதல் ஜோடி.
- நாயகியின் தங்கை வீட்டுவேலை செய்வது, வேலை பார்க்கும் வீட்டுகாரர்கள் ஒரு மோசமான அறையில் அவளை அடைத்து வைத்திருப்பது, பிறகு அஸ்ஸாம் செல்வது.
என பல்வேறு விதமான மக்களின் வாழ்க்கையை நமக்கு கட்டுகிறார் இயக்குநர்.
நடிகர்கள் நன்றாக நடித்திருக்கிறார்கள் எனச் சொன்னால் அதுதவறு. நடிகர்கள் அந்தந்த பாத்திரமாகவே மாறி வாழ்ந்திருக்கிறார்கள் என சொல்வதுதான் சரி. இது அவர்களின் திறமையோ அல்லது இயக்குநர் உழைப்போ எனக்குத் தெரியவில்லை.
ஓர் எழுத்தாளர் (திரு.பா.ராகவன்) சொன்னதை இங்கு நான் சொல்லியே ஆகவேண்டும். “ஆணியடித்த மாதிரி சில இடங்களில் நெஞ்சில் இறங்கும் ஜெயமோகனின் வசனங்கள். ஒரு நல்ல எழுத்தாளன் உடனிருந்தால் ஒரு திரைப்படம் பெறக்கூடிய இன்னொரு பரிமாணம் எத்தகையது என்பதைத் துல்லியமாகக் காட்டுகிறது” என ஒரு எழுத்தாளரே மற்றொரு எழுத்தாளரின் வசனம் பற்றி கூறியுள்ளார்.
உரையாடல்கள் ஜெயமோகன் எனப் போடும்பொழுது நானும் எனது நண்பரும் சக பதிவருமான தினேஷும் மட்டுமே கைதட்டினோம். பிறகு படம் போகப் போக நாங்கள் இரண்டொருமுறை கைதட்டிவிட்டு வசனத்தை ரசிப்பதில் நாட்டம் கொண்டோம். பிறகு எங்களைத் தவிர மற்றவர்களெல்லாம் தொடர்ந்து கரவொலி எழுப்பிக் கொண்டே இருந்தனர். இரட்டை இலக்கங்களில் சொல்லலாம் அத்தனை தடவை வசனத்திற்கு.
பொதுவாகவே ஒரு முன்னணி கதாநாயகன் பெண்களை மட்டம்தட்டி பேசும்பொழுதோ, காதலைப் பற்றிக் கண்டபடி உளறும்பொழுதோ, குஞ்சு குளுவான்கள் விசிலடிக்கும், அனிச்சையாய் கைதட்டும். ஆனால் ஓர் அறிமுக நாயகன் சாதரணமாக நம்முடன் வசிக்கும் இயல்பான தோற்றம்கொண்ட ஒரு மனிதன் பேசும் வசனத்திற்கு இவ்வளவு கர ஒலி சாத்தியமென்றால் அது வசனகர்த்தாவைத்தான் போய்ச்சேரும். திரு. ஜெயமோகன் அவர்களுக்கு …. தொடர்க, வாழ்த்துகள், நன்றி …….
ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங் என தொழில்நுட்ப ரீதியாக ஏதேனும் குறையிருப்பதற்கு வாய்ப்பு இருந்தாலும் அதை திரைக்கதை தன் தோளில் சுமந்து அந்த பாரத்தையும் மக்கள் தாங்காமல் பார்த்துக் கொண்டுவிட்டது.
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை என்ற பாடல் அருமை. அந்தப் பாடலில் ஒருவரி வரும் “அவள் பொம்மைகள் அனைத்து உறங்கவில்லை, நான் பொம்மையைப் போலே பிறக்கவில்லை” என்று இந்த வரியும் படத்தின் கதையை சொல்வதாகவே நான் உணர்கிறேன். அந்த அடித்தட்டு மக்களின் ஏக்கமும் வலியும் உணர்வையும் இந்தவரி போகிறப் போக்கில் பதிவு செய்துவிட்டுப் போகிறது.
மற்றபடி இந்த படத்திலும் காதல், எதிர்ப்பு , போராட்டம் இருக்கிறது என்பதனால் இந்த படத்தை மற்ற படங்களுடன் ஒப்பிடுவது சரியான முறையில்லை. இந்த படம் வாழ்கையின் எதார்த்தங்களை, போராட்டங்களை பதிவு செய்கிறது அதனால் எல்லா மனிதனும் காதல் செய்திருப்பார்கள்/செய்வார்கள். நான் காதலிக்கவே இல்லை எனயாராவது சொன்னால் நீங்கள் மனிதன் இல்லை என நான் சொல்வேன்.
அங்காடித் தெரு உழைப்பை அளவில்லாமல் வாரிக்கொட்டியுள்ள ஒரு புதுமையான திரைப்படச் சந்தை.
படத்தின் எல்லா ஏற்றங்களுக்கும் பெருமைகளுக்கும், போற்றுதலுக்கும் என என்னென்ன சிறந்த வார்த்தைகள் உள்ளதோ அத்தனை வார்த்தைகளையும் ஒன்றாகச் சேர்த்து இயக்குநர் திரு.வசந்த பாலன் அவர்களுக்குச் சமர்ப்பிக்கலாம்.
இனிமேலாவது மக்கள் மீது பழியைப் போட்டு தப்பித்துக் கொள்ளும் தமிழ்ப்பட இயக்குநர்கள் “பிள்ளைக்கறி கேட்பதால்தான் நாங்கள் கொடுக்கிறோம்” என சப்பைகட்டுக் கட்டுவதை நிறுத்திக் கொள்ளலாம்.
மொத்தத்தில் என் போன்ற திரைப்பட ரசிகர்களுக்கு அங்காடித் தெரு நல்ல அல்ல சிறந்த படம்.
என்னுடைய குறுகியப் பார்வையில் பட்டதை சொல்லியுள்ளேன். விசாலமான பார்வை கொண்டவர்கள் வேறு விதமாகக்கூட பார்க்கலாம்.
– சே.ராஜப்ரியன்