Bayview Projects LLP நிறுவனத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடியெடுத்து வைக்கிறார் போனி கபூர். விமர்சன ரீதியாகப் பாராட்டுகளையும், பாக்ஸ் ஆபிஸிஸ் வசூலையும் அள்ளிய “பிங்க்” எனும் ஹிந்திப் படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் இது. ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் மூலம் பாராட்டுக்களைக் குவித்த H. வினோத் இந்தப் படத்தை இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இறுதி செய்யப்பட்ட பின் விரைவில் அறிவிக்கபடுவார்கள்.
இந்தப் படம் இன்று அதிகாரப்பூர்வமாக சென்னையில் தொடங்கியது.
“ ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் அஜித்குமார் உடன் இணைந்து பணியாற்றிய போது, எங்கள் தயாரிப்பில் தமிழில் அவர் ஒரு திரைப்படம் நடிக்க வேண்டும் என ஸ்ரீதேவி விரும்பினார். கடந்த ஆண்டு வரை நல்ல கதை ஒன்றும் கிடைக்கவில்லை. ஒரு நாள் அஜித் பிங்க் படத்தை ரீமேக் செய்யும் எண்ணத்தைத் தெரிவித்தார். அஜித் அந்தப் படத்தில் நடித்தால், அதை ஒரு சிறந்த படமாக உருவாக்க முடியும் என ஸ்ரீதேவியும் உடனடியாக அந்த எண்ணத்தை ஏற்றுக்கொண்டார்.
தென்னிந்திய சினிமா துறையில், குறிப்பாகத் தமிழ் சினிமாவில் சினிமா தயாரிப்பை மேற்கொள்வதை நான் பெருமையாகக் கருதுகிறேன். அஜித் என் மனைவி ஸ்ரீதேவியுடன் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் நடித்த காலத்தில் இருந்தே நானும் அஜித்தும் ஒரு படத்தில் இணைய மிகுந்த ஈடுபாட்டுடன் காத்திருந்தோம். நாங்கள் இருவருமே எங்கள் இருவரது கேரியரிலும் சிறப்பு சேர்க்கும் ஒரு பொருத்தமான கதையைத் தேடினோம். ‘பிங்க்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கில் இணைவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இன்று படப்பிடிப்பைத் துவக்கி, 2019 ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் தேதி படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம். அதன் தொடர்ச்சியாக இன்னொரு படத்தையும் தயாரிக்கிறோம். அது 2019 ஜூலையில் துவங்கி, 2020 ஏப்ரல் 10ஆம் தேதி வெளியிடப்படும். இரண்டு படங்களும் ஜீ நிறுவனம் ஆதரவுடன் தயாராகின்றன. அவருடன் பணிபுரியும் மிகச்சிறந்த அனுபவத்தை நான் எதிர்பார்க்கிறேன்.
இயக்குநர் வினோத்தின் படைப்புகளை நான் பின்பற்றி வருகிறேன், மிகச் சிறந்த திரைப்படங்களைக் கொடுத்து வருகிறார். குறிப்பாக, அவரது முந்தைய படமான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை மிகவும் யதார்த்தமாக எடுத்திருந்தது என்னை வியப்பில் ஆழ்த்தியது. தனித்துவமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை தனது சிறந்த கதை சொல்லல் மூலம் சிறப்பாக செய்யும் அவர் தான் தமிழ் மொழியில் ‘பிங்க்’ படத்தை இயக்க சரியான நபராக இருப்பார் என நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார் தயாரிப்பாளர் போனி கபூர்.
தயாரிப்பாளர் போனி கபூர், பாலிவுட்டில் வணிக ரீதியிலான மற்றும் கதையம்சம் உள்ள திரைப்படங்களை தயாரித்து, வெற்றிகரமான தயாரிப்பாளராக 37 ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வருகிறார். மொழி எல்லைகளை கடந்து உலகளாவிய ரசிகர்களைக் கவர்ந்த அவரின் ‘மிஸ்டர் இந்தியா’ என்ற ஃபேண்டஸி திரைப்படம் இன்றும் மிக முக்கியமான படமாகக் கருதப்படுகிறது. ஆரம்ப காலத்தில் இருந்தே தமிழ் திரைப்படத்துறையின் மீதான இவரது ஆர்வம் தான் சிறந்த தமிழ் படங்களை இந்திக்கு எடுத்துச் செல்லத் தூண்டுதலாக இருந்தது. அவரது புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பு பயணம் சூப்பர் டூப்பர் ‘ஹம் பாஞ்ச்’ தொடங்கி, உணர்ச்சிபூர்வமான ‘மாம்’ படம் வரை வந்திருக்கிறது. தமிழ் பிங்க்-கின் மூலமாக, கோலிவுட்டிலும் இந்நிறுவனம் தனக்கானதொரு சிறப்பான அங்கீகாரத்தைப் பெறும் என்பது திண்ணம்.