Shadow

பொய்கையாழ்வார் – அனேகனான ஏகனான ஓர் பரம்பொருள்

ஒரு சாட்சியாக, பூமி, கடல், சூரியன் என அனைத்துமாக இருப்பது அவனே!

முன்னொரு காலத்தில் ஒருநாள், திவ்விய பிரபந்த விளைநிலம் என்று சொல்லப்படும் திருக்கோவலூருக்குப் பன்னிரு ஆழ்வார்களில் முதலாழ்வாராகத் திகழும் பொய்கையாழ்வார் சென்றார். இரவு நேரமாகிவிட்டதால் ஓர் இல்லத்தின் முன்னிருந்த சிறிய திண்ணையில் படுத்துக்கொண்டார்.

சற்று நேரத்தில், பூதத்தாழ்வாரும் அங்கே வந்து சேர்ந்தார். ஒருவர் படுத்திருப்பதை அறிந்ததும், “எனக்கு இடமுண்டோ?” என்று கேட்டார். ‘இவ்விடத்தில் ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம் வாருங்கள்’ என்று பொய்கையாழ்வார் எழுந்து அமர்ந்து கொண்டார். சிறிது நேரம் கழித்து பேயாழ்வார் அங்கே வந்து, ‘எனக்கு இடமுண்டோ?’ என்று கேட்க ‘இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம், நீரும் வாரும்’ என்று சொல்ல மூவரும் நின்று கொண்டு ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து உரையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது, அந்த ஆழ்வார்கள் கோஷ்டியில் தானும் சேர எண்ணி, திருமால், பெருமழையையும் காரிருளையும் தோற்றுவித்து, தாமும் அவர்களுடனே நின்று நெருக்கடியை உண்டாக்கினார். நான்காவதாக வந்திருப்பது யார் என்று அறிய வெளிச்சமில்லை. அதனால் பாசுரத்தாலேயே விளக்கை ஏற்றி, அகக்கண்ணால் கண்ட போது நாராயணரே வந்து தங்களோடு நிற்பதைக் கண்டு உடல் சிலிர்த்துப் போனார்கள். உள்ளம் உருகினார்கள்.

இருளை அகற்ற, “வையமே தகளியாய்…” என்று பொய்கையாழ்வார் பாடிய பாடல் ஆன்ம இருள் அகற்றும் வெளிச்சத்தைத் தரும் விளக்காக திகழ்கிறது.

முதலாழ்வார்கள் மூன்று பேராவர். அந்த மூன்று பேர்களில் முதலில் வைத்துப் போற்றப்படுபவர் பொய்கையாழ்வார். காஞ்சிபுரத்தில் உள்ள “திருவெஃகா” என்ற இடத்தில் இருந்த ஒரு குளத்தில், ஒரு தாமரை மலரின் மேல் பொய்கையாழ்வர் அவதரித்தார் என்கிறது வைணவ மரபு. பொய்கையில் அவதரித்ததால் பொற்கையாழ்வார். அவரது வாழ்க்கை பற்றிய அதிக குறிப்புகள் காணப்படவில்லை.

ஆழ்வார்களைத் திருமாலுடைய அங்கங்களாக வைணவப் பெரியவர்கள் உருவகப்படுத்துவது வழக்கம். இவரைத் திருமால் ஏந்திய சங்கான பாஞ்சசன்யமாகக் கருதுகின்றனர்.

“வையம் தகளியா” எனத் தொடங்கி இயற்றியருளிய 100 வெண்பாக்களைக் கொண்டது ‘முதல் திருவந்தாதி’ என்று பெயர் பெற்றது. அந்தாதித் தொடையில் இயற்றப்பட்ட மிகப் பழைய பிரபந்தங்களுள் இதுவும் ஒன்றாகும்.

இறைவன் ஒருவனே (ஏகன்). அவனே அனைத்துமாக இருக்கிறான் (அனேகன்). பொய்கையாழ்வார், காண்கின்ற எல்லாம் தானாய் விளங்கும் இறைவனுக்குச் சின்னஞ்சிறு அகல்விளக்கு ஏற்ற விரும்பவில்லை. இறைவன் தகுதிக்கு ஏற்பப் பெரிய விளக்கேற்ற விரும்பினார். எனவே இம்மண்ணுலகத்தையே தகளியாகக் கொண்டார்; அதனை வளைத்துக் கிடக்கும் பெரிய கடல்நீரையே நெய்யாக வார்த்தார். அக்கடற்பரப்பின் ஒரு விளிம்பிலே தோன்றுவதுபோல் காட்சியளிக்கும் சூரியனையே அதிலேற்றும் சுடராக்கி ஞான விளக்கேற்றி வழிபட்டார்.

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர்ஆழி நீங்குகவே என்று

வையம் தகளி ஆ – பூமி அகலாகவும்
வார் கடலே நெய் ஆக – அந்தப் பூமியைச் சுற்றியிருக்கிற கடலே நெய்யாகவும்
வெய்ய கதிரோன் விளக்கு ஆக – வெப்பத்தை கதிராய் வீசும் சூரியன் விளக்காகவும்
செய்ய சுடர் ஆழியன் அடிக்கே – செஞ்சுடர்ச் சக்கரத்தை கையில் வைத்திருக்கும் எம்பெருமானது திருவடிகளில்.
சொல் மாலை – இப்பாமாலையகிற பூ மாலையை
சூட்டினேன் – சாத்தினேன்;

தகளி என்பது மிக அழகான தமிழ்ச்சொல். அகல் விளக்கில் எண்ணெயை ஊற்றும் குழைவான பகுதியைத் தகளி என்பார்கள். சாப்பிடும் தட்டு அல்லது கோப்பையில் இருக்கும் குழைவுப் பகுதி தகளி. ஒரு பொருளின் அங்கங்களுக்கு கூட தனித்தமிழ் சொற்கள் இருந்திருக்கின்றன.

மனதுக்குள் அதிகாலைக் கடற்கரைக்குச் செல்லுங்கள். சூரிய உதயத்தை நினைத்துக்கொள்ளுங்கள். விரிந்து பரந்த நிலப்பரப்பை அகல் விளக்கின் விளிம்பாகவும், கடல் நீரை அந்த அகல் விளக்கின் எண்ணெயாகவும் உருவகித்தால், சூரியன் மெல்ல கடலின் மறு முனையில் மேலெழும்புவது விளக்கின் சுடர் போல இருக்கிறதாம். அவ்வளவு பெரிய விளக்கை ஏற்றி திருமாலை வழிபடுகிறார் பொய்கையாழ்வார். இதில் அடியவராகிய நமக்கு எந்த வேலையும் இல்லை. சூரிய உதயம் தினமும் நிகழ்வது. ஆனால் ஒரு சாட்சியாக, பூமி, கடல், சூரியன் என அனைத்துமாக இருப்பது அந்தத் திருமாலே என்று உணர்வதே ஞானம்.

இந்தப் புரிதலை அடுத்தடுத்த நிலைக்குக் கொண்டு செல்கிறார்கள், பூதத்தாழ்வாரும் பேயாழ்வாரும். அடுத்தப் பதிவில் அதைக் காண்போம்.

ஜானகிராமன் நா