

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்” ஆகும். இப்படம் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜி.எம்.சுந்தர், “இந்த மாதிரி மேடை ஏற எவ்வளவு கஷ்டப்பட்டுள்ளேன் என்று எனக்குத் தான் தெரியும். இந்தப்படத்தில் வாத்தியார் இருக்கிறார், அவர் பற்றி நான் சொல்லத் தேவையில்லை. வாத்தியார் பற்றி சத்யராஜ் சார் பேசிக்கொண்டே இருப்பார். அப்படி ஒரு அற்புதமானவரின் ரோலைக் கார்த்தி சார் செய்துள்ளார். அந்த பாடி லாங்குவேஜ், அந்த பாவனை எல்லாம் அப்படியே கார்த்தி சார் செய்துள்ளார். ஞானவேல் சார் உங்கள் தயாரிப்பில் இரண்டாவது படம் செய்கிறேன். நலன் “காதலும் கடந்து போகும்” படத்தில் இரண்டாவது இன்னிங்ஸ் தந்தார். அவருக்கு நன்றி. சத்யராஜ் சார் என்னை பாரதிராஜாவிடம் சிபாரிசு செய்தார் அதற்காக அவருக்கு நன்றி” என்றார்.
நடிகர் ஆனந்த்ராஜ், “சிவக்குமார் எனக்கு அண்ணன் மாதிரி தான். கார்த்தி சார் இந்தக்கதையை ஒத்துக் கொண்டதற்கு அவர் தான் காரணமாக இருப்பார். ஏனென்றால் எம்.ஜி.ஆருடன் அதிகம் பழகியது அவர் தான். நலனிடம் இந்தப் படத்தைத் தேர்தலுக்கு முன் ரிலீஸ் செய்யுங்கள் என்றேன், அதை இந்தத் தேர்தலில் செய்துள்ளார். எனக்கு ஸ்பெஷல் கேரக்டர், அதைப்பற்றிச் சொல்ல மாட்டேன், ஆனால் அவர் சொன்ன அளவுக்குச் செய்துள்ளேன் என நம்புகிறேன். சத்யராஜ் சார் எம்.ஜி.ஆர் தந்த கர்லாக்கட்டையைத் தந்து, ‘படத்தில் இதைப் பயன்படுத்தி நடித்து விட்டுத் திரும்பக் கொடுத்திவிடனும்’ என்றார். அதைத் தூக்கவே முடியவில்லை. எம்.ஜி.ஆரின் தீரம் அப்போது தான் புரிந்தது. கார்த்தி அருமையான நடிகர், அவருடன் தான் எனக்கு நிறையக் காட்சிகள். அவர் எனக்கு அண்ணன் குழந்தை போலத் தான். சூர்யா, ஜோதிகா எல்லோரும் அப்படித்தான். உங்களுக்குப் பிடித்த மாதிரி நலன் இப்படத்தை எடுத்துள்ளார். இப்படம் தமிழ் சினிமாவை திரும்பிப் பார்க்க வைக்கும்” என்றார்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், “என்னுடைய திரைப் பயணத்தில் மிக முக்கியமான அழகான தருணம் – நலன், ஶ்ரீனிவாஸ் கவினை சந்தித்தது தான். அவர் படம் வருவது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப்படம் அறிவித்த போது ஃபோன் செய்து, கெஞ்சி, நான் செய்கிறேன் என வாய்ப்பு வாங்கினேன். நிஜ வாழ்வு சூப்பர் ஹீரோ என எம்.ஜி.ஆரைச் சொல்லாம். அவர் வாழ்க்கையை அவர் ஆளுமையைத் திரையில் கொண்டு வந்திருக்கிறோம். நிறைய உழைத்து இசையைத் தந்துள்ளோம். சத்யராஜ் சார் படத்தில் நான் இருப்பது பெருமையாக இருக்கிறது. இந்தக்கதை கேட்ட போது, கமர்ஷியல் சினிமாவுக்கு ஒரு புதுத் திறப்பாக இருக்குமெனத் தோன்றியது. இசையமைத்தது மிகுந்த மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. இந்தப்படம் பெரிய வெற்றி பெறும்” என்றார்.
சக்திவேல் ஃபிலிம் பேக்டரி சக்தி வேலன், “திருப்பதி வந்தால் திருப்பம் என்பார்கள். ஆனால் எனக்கு அது கார்த்தி சார் தான். என் திரை வாழ்க்கையில் அவரது 27 படங்களில், கிட்டதட்ட 15 படங்கள் வரை செய்துள்ளேன். எனக்கு நிறையத் திருப்பம் தந்துள்ளார். கார்த்தி சார் அவர் படங்களில் சின்னச் சின்ன விசயத்திற்கும் அவ்வளவு சிரத்தை எடுத்துக் கொள்வார். அவர் எம்.ஜி.ஆரை எடுத்து நடிக்கும் போது எவ்வளவு அர்ப்பணிப்பாக உழைத்திருப்பார் எனத் தெரியும். ஞானவேலின் அப்பா தீவிர எம்.ஜி.ஆரின் ரசிகர். அவர் எடுத்திருக்கும் படம். அவருக்குச் சமீபத்தில் நிறையப் பிரச்சனை வந்தது. சூர்யா சார் கூப்பிட்டு, ‘இதைச் செய்து, உன் பிரச்சனையை தீர்த்துக்கொள்’ என்று சொல்லியிருக்கிறார். வன்மம் நிறைந்த உலகில் சூர்யா போல் ஒரு ஹீரோ இல்லை. வா வாத்தியார் படம் மூலம் ஞானவேல் சாருக்கு எல்லாம் மாறும். நலன் இரண்டு படம் செய்துள்ளார். இரண்டுமே கல்ட் படம். வா வாத்தியார் ரிலீஸான மறுநாளே கல்ட் படம் எனச் சொல்லி விடுவார்கள். வா வாத்தியார் இந்த வருடத்தில் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும்” என்றார்.
இப்படம் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.


