Search

அண்ணாதுரை விமர்சனம்

Annadurai movie-review

‘அண்ணாதுரை’ எனும் தலைப்பு வைத்ததற்கு எந்தச் சிக்கலும் எழாதது அதிசயத்திலும் அதிசயம். ஆனாலும் உண்மை. அனைவரும் எதிலோ பிசியாக இருந்து விட்டதால், இந்தப் படத்துக்கு இலவச விளம்பரம் கிடைக்காமல் போய்விட்டது.

அண்ணாதுரையும் தம்பிதுரையும் இரட்டையர்கள். விதி அவர்கள் வாழ்வைப் புரட்டிப் போட, தியாகத்தில் சிறந்தவர் யாரென்று இருவருக்குள் நடக்கும் போட்டிதான் படத்தின் கதை.

விஜய் ஆண்டனி முதன்முறையாக இரட்டையர்களாகத் தோன்றியுள்ளார். தாடி இருந்தால் அண்ணன், இல்லாவிட்டால் தம்பி. போதையில் இருந்தால் அண்ணன், தெளிவாக இருந்தால் தம்பி. விஜய் ஆண்டனிக்கு அம்மா சமைத்துக் கொடுத்தால் அவர் அண்ணாதுரை, அம்மாவிற்கு விஜய் ஆண்டனி சமைத்துக் கொடுத்தால் அவர் தம்பிதுரை. படத்தின் தலைப்பு வரும் முன், வருகின்ற விஜய் ஆண்டனியின் அறிமுகம் மிக அட்டகாசமாய் உள்ளது. ஆனால் அந்தப் பூர்வாங்க பில்டப், அதோடு முடிந்து விடுவது துரதிர்ஷ்டம். யமன் படத்திலும் அப்புள்ளியைத் தொடும் இடத்தில் சிக்கல் இருந்தது. இப்படத்திலும் அத்தகைய ட்ரான்ஸ்ஃபர்மேஷன் சட்டென்று நிகழ்கிறது.

முதற்பாதி சுவாரசியமின்றி ஏனோதானோ என்று சென்றாலும், இடைவேளை ட்விஸ்ட் மிக அற்புதமாக உள்ளது. அதன் பின்னான திரைக்கதையும் எமோஷ்னலாகச் செல்லாமல், எந்த துரைக்கு முக்கியத்துவம் தருவது என்ற குழப்பத்துடன் நகர்கிறது. நாயகனோடு எந்தப் புள்ளியிலும் பொருத்திக் கொள்ள முடியவில்லை. ‘குடிக்காரர் தான். ஆனா இறந்து விட்ட காதலியையே நினைச்சு வருத்தத்தில் குடிக்கும் நல்லவர்’ என நாயகனின் வீட்டினரைத் தவிர அனைவரும், ‘வாவ், வாட்டே குட் மேன்’ எனப் புகழாரம் சூட்டுகின்றனர். வட்டிக்குக் கடன் கொடுக்கும் சேரன்ராஜ், இரத்தம் வருமளவு காளி வெங்கட்டை அடித்தும், அனைவர் முன்னும் விஜய் ஆண்டனியைச் சட்டை பிடித்து அசிங்கப்படுத்தியும் கூட, ஆறு லட்சம் பணத்தைக் கொடுத்து விட்டு பத்திரம் வாங்காமல் வீராப்பாகச் செல்கிறார் அண்ணாதுரை. இயல்பாகக் கதையை நகர்த்தாமல், இது போல் சொதப்பலாய்க் காட்சியத் திணித்துப் பின் பகுதிக்கு “லீட்” கொடுக்கின்றனர்.

Actor-Su-Senthil-Kumaranநாயகன் அண்ணாதுரையை விட தியாகத்தில் பழுத்த கோதண்டம் எனும் பாத்திரம் படத்தில் வருகிறது. ‘லூசாப்பா நீ?’ எனக் கேட்கும் நாயகியின் காமிக்கல் தந்தையாக அறிமுகமானாலும், சக மனிதர் மீது அன்பும் நம்பிக்கையும் வைக்கும் மாமனிதராக விஸ்வரூபம் எடுக்கிறார். நெகிழ்ச்சிகரமான அந்தக் காட்சியில் சிறந்த குணசித்திர நடிகரெனத் தன்னை நிரூபித்துள்ளார் பத்திரிகையாளரான சு.செந்தில்குமரன். பிச்சைக்காரன் படத்தில், டீக்கடை மாஸ்டராக ஒரே ஒரு காட்சியில் தோன்றினாலும் அழுத்தமான ஸ்க்ரீன் பிரசென்ஸை வெளிப்படுத்தியிருப்பார். அவரது காமிக்கல் முகம் தெலுங்கு நடிகர் பிரம்மானந்தத்தை நினைவுபடுத்தும் வகையில் இருப்பது சிறப்பு. பிச்சைக்காரனுக்குப் பிறகு, ஜாக்சன் துரை, அச்சமின்றி போன்ற படங்களில் தோன்றியிருந்தாலும், இந்தப் படம் அவருக்கு மிக அழுத்தமான அறிமுகத்தை நிச்சயம் வழங்கும் என்பது திண்ணம். யதார்த்தமான இவரது கதாபாத்திரம் மட்டுமே படத்தின் ஒரே ஆறுதல்!

தொன்னூறுகளின் தூர்தர்ஷன் ஒளிபரப்பில், விளம்பரம் முடிந்து படம் தொடங்குகையில், விளம்பரத்திற்கு முன் கடைசியாக ஒளிபரப்பிய காட்சிகளின் சில நொடிகள் மீண்டும் வந்து கடியைக் கூட்டும். இப்படத்திலும், அதைப் போலவே இடைவேளை முடிந்து தொடங்குகையில், இடைவெளிக்கு முன்னான காட்சிகள் மீண்டும் ஒளிபரப்பாகிறது. படத்தொகுப்பாளராகவும் முதன்முறையாகக் களமிறங்கியுள்ளார் விஜய் ஆண்டனி. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதாய் அந்தக் காட்சியைக் கொள்ளலாம்.

இப்படத்தில் மகிமா, டயானா சம்பிகா, ஜுவல் மேரி என மூன்று கதாநாயகிகள். இதில் தம்பிதுரைக்கு நிச்சயிக்கப்பட்ட டயானா சம்பிகாவிற்கு மட்டுமே, வழக்கமான கதாநாயகியாகத் திரையிலும், பாடல் காட்சிகளிலும் தோன்றிட வாய்ப்புக் கிடைத்துள்ளது. ‘மதுரையிலும், வடச்சென்னையிலும் மட்டுந்தான் ரெளடியிசம் இருக்குமா? ஏன் எங்க திருக்கோவிலூர் மாவட்டத்தில் ரெளடியிசம் இருக்காதா?’ என திருக்கோவிலூரைச் சேர்ந்த இயக்குநர் G.சீனிவாசனின் நியாயமான ஆவேசத்தினைப் புரிந்து கொள்ள முடிந்தாலும், இதுவரையிலான தமிழ்ப்பட வில்லன்களைப் பார்த்துச் சூடு போட்டுக் கொண்ட கதையாகவே உள்ளது அவரது கதாபாத்திரச் சித்தரிப்பும், திரைக்கதையும். ‘குடி குடியைக் கெடுக்கும்’ எனச் சொல்ல முயன்று, அதில் மிகப் பரிதாபகரமாகத் தோற்றுள்ளார் இயக்குநர்.