32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

ஆன்டி இண்டியன் விமர்சனம்

Dinesh R சேலம் Published: 10/12/2021 2 நிமிட வாசிப்பு Updated: 18/07/2022 சினிமா
எழுத்து அளவு:

இந்துத்துவர்களைத் தவிர்த்து ஏனையோர் தேசவிரோதிகள் எனப் பொருள்பட ஹெச்.ராஜா மொழிந்த ‘ஆன்டி இண்டியன்’ என்ற கோபச் சொல்லையே தலைப்பாக்கி அசத்தியுள்ளார் ப்ளூசட்டை மாறன். அது கவன ஈர்ப்பிற்காக மட்டுமல்லாமல் கதையோடு ஒன்றி வருவது மேலும் சிறப்பு.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் ஆகப்பெரும் பலம் என்று மார் தட்டிச் சொல்லும் அரசியல் வாதிகள், வேற்றுமைகளை வளர்த்தெடுப்பதில் எவ்வளவு கவனமாக இருக்கிறார்கள் என்பதையும், மதம் மனிதனைப் பண்படுத்தும் வேலையைத் தான் செய்யச் சொல்கின்றன, ஆனால் மதத்தை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்கள் தான் அதை வைத்து மனிதர்களைப் புண்படுத்துகிறார்கள் என்பதையும் ஆன்டி இண்டியன் சமரசமின்றி எடுத்துரைக்கிறது.

இடைத்தேர்தல் நடைபெற உள்ள மயிலாப்பூர் தொதியில் சுவர் ஆர்டிஸ்ட் பாட்ஷா என்பவர் கொலையுண்டு இறந்துவிடுகிறார். அவர் பிறப்பால் ஒரு முஸ்லிம் என்றாலும் அவரது அம்மா இந்து. அதே சமயம் சுனாமி நேரத்தில் கிறிஸ்தவராக மாற்றப்பட்டவர். இப்படி இறந்து போன பாட்ஷாவிற்குப் பின்னால் இத்தனை மாணிக்க கதைகள் இருப்பதால் பாட்ஷாவை யார் அடக்கம் பண்ணுவது என்ற பிரச்சனை வருகிறது. இந்தப் பிரச்சனை வைத்தே தேர்தல் கணக்குப் போடுகிறார்கள் அரசியல்வாதிகள். மரித்துப் போன பாட்ஷாவின் உடலை எந்த மதம் ரட்சித்தது என்பதே ஆன்டி இண்டியன்.

மிகப்பெரிய காயங்களை விட நகச்சுத்தி தரும் வலி பெரியது. படத்தில் நகச்சுத்தி போல விர் விர் எனத் துடிக்கும் கேள்விகளையும் விசயங்களையும் அசால்டாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் ப்ளூசட்டை மாறன். ஒரு நல்ல கதை அதன் விறுவிறுப்பான திரைக்கதையைத் தானே அமைத்துக் கொள்ளும் என்பது போல இந்தக் கதை இயக்குநருக்கு நிறைய கிரியேட்டிவிட்டி மற்றும் நேச்சுராலிட்டி விசயங்களை வாரி வழங்கி இருக்கிறது. ராதாரவி, ஆடுகளம் நரேன், முத்துராமன் என தெரிந்த முகங்களை விட தெரியாத முகங்கள் படத்தில் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார்கள். அனைவர் முகத்திலும் அப்படியொரு இயல்பான நடிப்பு.

படத்தின் மேக்கிங்கில் சில பல குறைபாடுகள் இருந்தாலும், படத்தின் மையக்கரு உண்மைக்கு நெருக்கமாக இருப்பதால் படம் முடியும் போது, “அட இது நம்ம படம்” என தோளில் தட்டிக் கொள்ளத் தோன்றுகிறது. இந்தப் படத்தின் அழகே அதன் எளிமை தான். ஒவ்வொரு காட்சியும் கதையின் போக்கை அவ்வளவு இயல்பாக சுவாரசியப்படுத்துகிறது.

– ஜெகன் கவிராஜ்

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.