
தமிழ் சினிமாவில் 25 சிறந்த படங்களைத் தேர்வு செய்தால் அதில் வசந்தபாலனின் படம் ஒன்று நிச்சயம் இடம்பெறும். அப்படியொரு படைப்பாளி வசந்தபாலன். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு வசந்தபாலன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதால் ஜெயில் மீது எல்லாருக்கும் இயல்பாய் ஒரு பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. அதுவும் தனது இப்படம் ‘நில உரிமை’யைப் பற்றிப் பேசுகிறது என மிகவும் அழுத்தமாகப் பதிந்த வண்ணம் இருந்தார். ஆனால் படம் அதை நோக்கிப் பயணிக்கிறதா என்பது கேள்விக்குறியே!
வடசென்னை காவேரி நகரில் திருட்டு வேலைகள் செய்கிறார் நாயகன் ஜீவி. அவரது நண்பர் ராமு போதைப்பொருள் விற்கிறார். இவ்விருவர்களின் எந்தச் செயல்களையும் ரசிக்காத எதிர் அணி ஒன்று இவர்களிடம் உரசிக் கொண்டே இருக்கிறது. இரு டீமையும் தனக்குள் வைத்து தன் பாக்கெட்டையும் வேலையையும் காப்பாற்றிக் கொள்கிறார் அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் ரவிமரியா. ஒரு கட்டத்தில் ராமுவைக் கொலை செய்கிறது எதிர் அணி. ஜீவியின் இன்னொரு நண்பருக்கும் பிரச்சனை வருகிறது. மேலும் ராமுவின் கொலைக்குப் பின்னால் ஒரு மர்மம் இருக்கிறது. மர்மங்களை அவிழ்த்து சூழ்ச்சிகளை ஜீவி முறியடித்தாரா என்பதே மீதமுள்ள கதை.
நகரோடிகளின் நிலவுரிமையைப் பற்றி படத்தில் வெகுசில பதிவுகள் இருந்தாலும், படம் பயணிப்பதென்னவோ ஒரு க்ரைம் திரில்லர் போலதான். நாயகன் ஜீவி வடசென்னை இளைஞராக நன்றாக நடித்திருக்கிறார். அவரது பாடல்களை விட பின்னணி இசை ஒரு மாற்றுக் குறைவாய் உள்ளது. அதே போல் அவரது நடிப்பு கலகல காட்சிகளை விட, எமோஷ்னல் காட்சிகளில் கொஞ்சமே கொஞ்சம் குறைகிறது. இருந்தாலும் அந்தச் சின்ன குறையை திருத்தும் அளவிற்கு க்ளைமேக்ஸில் அசத்தி விடுகிறார். வில்லன் வேடத்திற்கு ரவிமரியா கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். இருப்பினும் சில காட்சிகளில் ரவிமரியா உறுத்தவே செய்கிறார். ஜீவியின் நண்பர்களாக வரும் பசங்க பாண்டி, ராமு இருவரும் நல்ல தேர்வு.
படத்தை நிஜத்திற்கு அருகில் கொண்டு சேர்ப்பதில் ஒளிப்பதிவாளர் பங்கு அதிகம். குறிப்பாக இடைவேளை நேரத்தில் வரும் ஒரு கொலை சீக்வென்ஸில் ஒளிப்பதிவு உலகத்தரம்.
மையக்கதையே நிலம் நீங்கி வாழும் மக்களின் வாழ்வியல் மற்றும் உளவியல் பிரச்சனைகளும் தான் என்பதாக வசந்தபாலனின் குரல் சொல்கிறது. ஆனால் காட்சிகளில் அவை சரியாகப் பதிவு செய்யப்படவில்லை. நகரோடிகளை அதிகார மட்டம் அறத்திற்கு எதிராக மட்டுமே பயன்படுத்துகிறது என்பதை மேலோட்டமாகச் சொல்லி இருக்கும் ஜெயில், இன்னும் சற்றே மெனக்கெட்டிருந்தாலும் கூட வெயிலாகச் சுட்டெரித்து பார்வையாளர்களைச் சிறைப்படுத்தியிருக்கும்.