Shadow

தடகள விளையாட்டுலகின் கதை – பிரித்வி ஆதித்யா

Director-prithvi-Adithyaகதைத் தேர்வில் அதீத கவனத்துடன் இருக்கும் ஆதி, தற்போது அறிமுக இயக்குநர் பிரித்வி ஆதித்யா இயக்கும் தடகள விளையாட்டு அடிப்படையிலான படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

“நான் ஸ்கிரிப்ட்டை, கதாபாத்திரத்தை எழுதி முடித்த உடனே அந்தக் கதாபாத்திரத்தில் ஆதி சாரை தான் நினைத்து கற்பனை செய்து பார்த்தேன். தடகள வீரருக்குத் தேவையான கட்டுமஸ்தான உடலை அவர் கொண்டிருப்பது தான் முதன்மையான காரணம். ஸ்கிரிப்ட் முடிந்ததும், நான் அவரைச் சந்தித்து ஸ்கிரிப்டை விவரிக்க முடிவு செய்தேன். அவரது அடுத்தடுத்த படங்கள் பெரிய அளவில் இருந்தன. இது நடக்குமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. இறுதியாக, இந்தப் படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றுவது என்னை மேலும் உற்சாகப்படுத்தி இருக்கிறது. மிகச் சிறப்பான படத்தைக் கொடுக்க முயற்சி செய்வேன். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. பிரவீன்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். அவர் முதன் முதலில் ஒளிப்பதிவு செய்த ஜீவி திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அவர் செய்த ‘மண்ணின் மைந்தர்கள்’ சிறப்பு நிகழ்ச்சி மிகவும் பிரபலம்.

தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக விளையாட்டு அடிப்படையிலான திரைப்படங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் இந்தப் படம் அதில் இருந்து விதிவிலக்கானது. இது ‘தடகள’ விளையாட்டு உலகில் நடக்கும் கதை, தனது கனவுகளை நிறைவேற்ற கதாநாயகன் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிப் பேசும் ஒரு படம்” என்றார் இயக்குநர்.

பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஐபி கார்த்திகேயன். பிஎம்எம் ஃபிலிம்ஸ் மற்றும் கட்ஸ் & குளோரி ஸ்டுடியோஸ் ஜி மனோஜ், ஜி ஸ்ரீஹர்ஷா ஆகியோருடன் இணைந்து தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகிறது.