சித்தார்த்தின் சினிமா மீதான காதல் தான் அவரை ஏடாகி எண்டர்டெயின்மென்ட் எனும் சொந்த தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கச் செய்தது. முதல் தயாரிப்பான ஜில் ஜங் ஜக் படத்திலேயே, முற்றிலும் மாறுபட்ட ஒரு கதைக்களத்தைத் தொட்டுச் சோதனை முயற்சி செய்தார். அத்தகைய தைரியமான முயற்சி தான், நவம்பர் 3 வெளியாகவுள்ள “அவள்” திரைப்படமும்! இப்பட இயக்குநர் மிலிண்ட் ராவுடன் சேர்ந்து இப்படத்தில் எழுத்தாளராகவும் சித்தார்த் பணியாற்றியுள்ளார். ‘வயாகாம் மோஷன் பிக்சர்ஸ்’ நிறுவனத்தோடு இணைந்து இப்படத்தை சித்தார்த் தயாரித்துள்ளார்.
விக்ரம் வேதா போன்ற பல வெற்றி படங்களை ரிலீஸ் செய்து தனக்கெனப் பெரும் பெயரையும் மதிப்பையும் சம்பாதித்திருக்கும் ‘ட்ரைடென்ட் ஆர்ட்ஸ்’ ரவீந்திரன் அவர்கள் ‘அவள்’ படத்தைத் தமிழகமெங்கும் வெளியிடவுள்ளார்.
‘அவள்’ குறித்து சித்தார்த் பேசுகையில், ”திகில் படங்களின் தீவிர ரசிகனான எனக்கு இந்திய சினிமாவில் நம்மை உண்மையிலே பயமுறுத்தும் பேய் படங்கள் நிறைய வரவில்லை என்ற வருத்தம் என்றுமே இருந்தது. இதனாலேயே நானும் மிலிண்ட் ராவும் ‘அவள்’ படத்தை எடுக்க முடிவெடுத்தோம். நானும் மிலிண்ட் ராவும் நீண்ட கால நண்பர்கள். நானும் மிலிண்ட் ராவும், மணி ரத்னம் சாருக்கு உதவி இயக்குநர்களாக ஒரே சமயத்தில் சேர்ந்தோம். நிஜ வாழ்க்கை சம்பவத்தை மையமாக வைத்து பின்னப்பட்ட கதை தான் ‘அவள்’.
இக்கதைக்காக, பொதுவாக திகில் படங்கள் மற்றும் திகில் படங்களைப் பற்றிய மக்களின் மனநிலையைப் பற்றி நிறைய ஆராய்ச்சிகளை நாங்கள் மேற்கொண்டோம். கடந்த சில காலமாகவே திகில் படங்கள் பற்றிய கண்ணோட்டம் மக்களிடையே மாறியுள்ளது. இதனை மாற்றி ‘தி காஞ்சுரிங்’ , ‘பாராநார்மல் ஆக்டிவிட்டி’ , ‘ டி ஈவில் டெட்’ போன்ற படங்களுக்கு இணையான திகில் படத்தைத் தர நானும் மிலிண்ட் ராவும் நினைத்தோம். இந்த எண்ணத்தில் பிறந்த படம் தான் ‘அவள்’. இது ஒரு பயத்தில் உறையவைக்கும் தீவிரமான திகில் படம். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தப் படத்தில் அதுல் குல்கர்னியுடன் நடித்துள்ளேன். அவரது அர்ப்பணிப்பும், இப்படத்திற்கான அவரது சிந்தனைகளும் பெரும் பலமாக இருந்தது. ஆண்ட்ரியா இப்படத்திற்குத் தூணாக இருந்தார். ‘அவள்’ தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு திகில் விருந்தாக நிச்சயம் இருக்கும்.
திரையரங்கிற்குச் சென்று அவளைப் பார்த்தால் கண்டிப்பாகப் பயப்படுவீங்க” என்றார் மிகுந்த நம்பிக்கையுடன்.