
பத்திரிகையாளனியான கவிதாவின் தயாரிப்பில், பெண்கள் பிரச்னைகளை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம் ராபர் ஆகும். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், தயாரிப்பாளர் தாணு, நடிகர்கள் தியாகராஜன், பாக்யராஜ், அம்பிகா, ரம்பா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக க் கலந்து கோண்டனர்.
கதாசிரியரும் இயக்குநருமான ஆனந்த கிருஷ்ணன், “மெட்ரோ படத்திற்குப் பிறகு 2 வருடம் எதுவும் அமையவில்லை. ஒரு விஷயம் நடக்கும் நடக்கும் என்று எதிர்பார்த்து ஏமாற்றம் தான் மிஞ்சும். எங்களுக்காவது என்ன நடக்கிறது என்பது தெரியும். ஆனால், உடன் இருப்பவர்களுக்கு எதுவும் தெரியாது. ஆனாலும், அந்த 2 வருடமும் என்னை விட்டுப் போகாமல் ‘கோடியில் ஒருவன்’ படம் வரைக்கும் என்னுடனே பயணித்த பாண்டிக்கு நன்றி. இந்தப் படத்தின் மூலம் அவர் இயக்குநராகியிருக்கிறார். இது தான் என்னுடைய சிறந்த தருணமாகக் கருதுகிறேன்.
என்னிடம் பலரும் பெரிய நடிகர்களை வைத்து ஏன் படம் எடுப்பதில்லை என்று கேட்டார்கள். பத்திரிகையை நம்பி தான் நான் படம் எடுக்கிறேன். அவர்கள் வெற்றி படமாக ஆக்கி விடுவார்கள். ஆகையால், என் இஷ்டத்துக்கு படம் எடுப்பேன். பத்திரிகையாளர்கள் சரியாக மக்களிடம் கொண்டு சேர்ப்பார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. இனிமேலும் அப்படி தான் எடுப்பேன். எனக்குக் கொடுத்த ஆதரவைப் பாண்டிக்கும் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் என். எஸ். உதயகுமார் என்னுடைய எல்லாப் படத்திலும் பணியாற்றி வருகிறார். அவரின் குழு கொரில்லா படை மாதிரி தான் பணியாற்றுவார்கள்.
என்னுடைய வீடு ஓஎம்ஆரில் தான் இருக்கிறது. பல வருடங்களுக்கு முன்பு வழிபறி அதிகமாக இருக்கும். அதனைத் தடுக்கக் காவல்துறையினர் கண்காணிப்பு கேமரா பொருத்தினார்கள். ஆனால், எங்கெங்குக் கேமரா வேலை செய்யவில்லையோ, எங்கெங்கெல்லாம் கேமராவில் பதிவாகதோ அதைத் தெரிந்து கொண்டு ஒரு குழுவினர் கொள்ளையடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களைக் கண்டுபிடித்து காவல்துறையினர் கைது செய்தார்கள். அவர்கள் பின்பற்றிய வழிமுறைகள், அவர்களுக்குப் பின்னாடி இயங்கும் குழு என்று எல்லா விஷயத்தின் தீவிரத்தை ஏற்கனவே மெட்ரோவில் சொல்லி விட்டோம். அது ஒரு திருடனைப் பற்றிய கதை. அவன் முகத்தை மூடிக் கொண்டு வருவான். திருடிக் கொண்டு போய் விடுவான். ஆனால், ராபர் என்பவன் நின்று பயத்தைக் காட்டித் துன்பறுத்தி நகையைத் திருடிச் செல்வான். இது தான் திருடனுக்கும் ராபருக்கும் உள்ள வேறுபாடு என்று மெட்ரோவில் சொல்லி இருப்போம். மெட்ரோ திருடனுடைய கதை, இது ராபருடைய கதை. என்னுடைய நீண்ட கால நண்பர் ஜோகன் இப்படத்திற்குத் தீவிரமாகப் பின்னணி இசையமைத்திருக்கிறார்.
அதேபோல் நீண்ட கால தோழி கவிதா என்னுடன் இணைந்து இப்படத்தை தயாரித்திருப்பது பெரிய பலம். ஜேபி சாரைப் பாண்டி சந்தித்து கதை சொல்லும் போது எல்லாமே எதிர்மறையான பாத்திரமாகவே இருக்கும். ஆனால், 2 முதியவர்கள் இருப்பார்கள். அவர்கள் தான் இப்படத்தில் நேர்மறையான பாத்திரத்தில் இருப்பார்கள், அவர்கள் தான் நாயகர்கள். பொதுவாக இளம் வயது நடிகர் தான் நேர்மறையான நாயகனாக நடிப்பார். ஆனால் இந்தப் படத்தில் முதியோர் தான் நாயகன். இதை அவருடன் இணைந்து சவாலாகச் செய்திருக்கிறார் பாண்டி. இந்தப் படத்தில் நடித்த டேனியிடம், இப்படத்தில் நாயகன் கேவலமான பாத்திரம் அவனுக்கு ஒரு வில்லன் இருப்பான். அவன் இவனை விட கேவலமான பாத்திரம் என்று கூறினேன். டேனி எனக்கு இதுதான் வேண்டும் என்று பங்கெடுத்து சிறப்பாக நடித்தார்.
இப்படத்தில் அனைவருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியாக இருக்கிறது. குறிப்பாக, கலை இயக்குநர் சரவணன், சண்டை இயக்குநர் மகேஷ் அவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டும். ஒரு பெண்ணின் துப்பட்டாவைப் பிடித்து இழுக்க வேண்டும். அவள் வளைவாகச் சென்று விழ வேண்டும் என்று கூறினேன். மிகவும் குறுகிய நேரத்தில் அவர்களுடைய குழுவை வைத்து சரியான திட்டத்துடன் சிறப்பாகச் செய்து கொடுத்தார்கள். அந்தக் குறிப்பிட்ட பாத்திரத்தில் நடித்த பெண்ணும் சிறப்பாகப் பணியாற்றினார். சுமார் 50 அடி உயரத்தில் அங்கும் இங்கும் பறந்து கொண்டே இருக்க வேண்டும். அவரால் இன்று வர முடியவில்லை, அவருக்கு நன்றி. இப்படத்தின் பாடலாசிரியர் அருண் பாரதி அவரும் என்னுடைய நண்பர். இப்படத்தின் பாடல்கள் எழுதியதற்காக நன்றி. படத்தொகுப்பாளர் ஸ்ரீகாந்த் அண்ணா என்னுடைய எல்லாப் படத்திலும் பணியாற்றி வருகிறார். அடுத்து இயக்கிக் கொண்டிருக்கும் ‘நான் வயலன்ஸ்’ படத்திலும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். ஒரு அண்ணனாக என்னை வழி நடத்துவார். எனக்கும் எடிட்டிங் தெரியும் என்பதால் அவருக்கு உதவியாளனாகப் பணிபுரிய அனுமதித்ததற்கு நன்றி. நாயகன் சத்யாவை மெட்ரோவில் பார்த்துவிட்டு இந்தக் குறிப்பிட்ட கதாபாத்திரத்திற்கு இந்த முகம் சரியாக இருக்கிறது என்று பாராட்டி எழுதினீர்கள். ஆனால், அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அவரைப் பார்க்கும் போதெல்லாம், ‘இவர் நீண்ட காலம் சினிமாவில் இருப்பாரா? அல்லது சினிமாவை விட்டு விலகிவிடுவாரா?’ என்று நினைத்திருக்கிறேன். ஆனால், சத்யா பிடிவாதமாக சினிமா தான் என் வாழ்க்கை என்று உறுதியாக இருந்தார். அதற்காக அவர் வாய்ப்பு தேடிப் பலரையும் சந்தித்து, ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைத்து விடாதா, ஒரு நல்ல பாத்திரத்தில் நடித்து விட மாட்டோமா என்ற தேடுதல் மற்றும் அர்ப்பணிப்போடு இருந்ததால்தான் இந்தப் பட வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருக்கிறது. அந்தத் தேடுதல் எப்போதும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்தப் படத்தில் அவர் வெற்றி பெற்றால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். எப்போதும் பாதிக்கப்பட்டவரைக் குற்றம் சாட்டுவதை முதலில் நிறுத்துங்கள். பாதிப்பு ஏற்படுத்துபவர்களைத் திருத்த வேண்டும் அல்லது களை எடுக்க வேண்டும். இதுதான் தீர்வு. வீட்டில் நடந்தாலும் சரி வெளியே நடந்தாலும் சரி. பெண்கள் மீதான இதுபோன்ற கொடூரமான ஆதிக்கத்தை சொல்லும் படம் தான் ராபர்”
இயக்குநர் பாண்டி, “ஒருவருக்குப் படம் கிடைப்பது மிக கடினமான ஒரு விஷயம். ஆனால் அது ஆனந்த் சாரால் மிக எளிமையாகக் கிடைத்தது. நான் அவரிடம் என் வேலையை மட்டுமே பார்த்தேன். அப்போது ஒருநாள், ‘படம் பண்றியா?’ எனக் கேட்டார். நான் கதை எழுதிக்கொண்டிருக்கிறேன் என்றேன். அவர் அப்போது, ‘என்னுடைய கதையை இயக்கு’ என்று தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என அனைவரையும் தேர்வு செய்து கொடுத்துவிட்டார்.
நான் சென்னை வந்த புதிதில், இசையமைப்பாளர் ஜோகன் சிவனேஷ் அறையில் தான் தங்கி வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தேன். அவர் தான் எனக்கு ஆனந்த் சாரையும் அறிமுகம் செய்து வைத்தார். ஒளிப்பதிவாளர் உதயகுமார் சார், அவருக்கு நான் துணை ஒளிப்பதிவளராக வேலை செய்தேன். அவர் என் படத்திற்கு ஒளிப்பதிவளராக வந்ததும் சிறிய தயக்கம் இருந்தது. ஆனால் நான் அவரிடம் வேலை செய்ததை விட அதிகமான வேலையை அவர் எனக்காகச் செய்துள்ளார். ஒரு படத்தைச் சொன்ன தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றால் அதற்கு ஒளிப்பதிவாளர் ஈடு கொடுக்க வேண்டும். அந்த வகையில் அவர் எனக்குக் கிடைத்த வரமாகத்தான் பார்க்கிறேன்” என்றார்.