
யாக்கை பிலிம்ஸ் பேனரில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பில், வான் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் இணை தயாரிப்பில், நடிகர்கள் ராதாரவி, சரண்ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வருணன் – காட் ஆப் வாட்டர்’ ஆகும். ‘நீரின்றி அமையாது உலகு’ எனும் டேக் லைனுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் வரும் 14 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரை அரங்குகளில் வெளியாகிறது. திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
பாடலாசிரியர் ஹைடு கார்த்தி, ”இந்தத் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நானும் நடித்திருக்கிறேன். இசையமைப்பாளர் போபோ சசியின் ஆதரவால் மூன்று பாடல்களை எழுதி இருக்கிறேன். இதில் கேங்க்ஸ்டர் பற்றிய ‘கோளாறு’ எனும் பாடலை நானே எழுதிப் பாடியிருக்கிறேன். இந்தத் திரைப்படத்தில் ஐந்து நிமிட கால அவகாசத்திற்கு ஒரே ஷாட்டில் ஒரு காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. இது ரசிகர்களை நிச்சயம் கவரும்” என்றார்.
ஸ்ரீதர் மாஸ்டர், ”இந்தப் படத்தினை விளம்பரப்படுத்தும் ‘ஆவ்சம் பீலு’ பாடல் காட்சியில் நடிகர் ஜெயப்பிரகாஷின் வாரிசான துஷ்யந்த் பிரகாஷ் அற்புதமாக நடனமாடி இருந்தார். இந்தப் பாடலுக்கான புரமோவைத் தமிழகம் முழுவதும் தயாரிப்பாளர் விளம்பரப்படுத்தி இருந்தார். ஒரு பாடலுக்கான ப்ரோமோவையே விளம்பரப்படுத்துவதற்கு கடின உழைப்பைக் கொடுத்திருக்கும் தயாரிப்பாளர், இப்படத்தினை அனைத்து மக்களிடத்திலும் கொண்டு சேர்ப்பதற்காகத் தொடர்ந்து உழைத்து வருகிறார். இந்தப் படத்தினை இயக்குநர் ஜெயவேல்முருகன் அற்புதமாக இயக்கியிருக்கிறார். திரையில் தோன்றும் போது ராதா ரவி போன்ற மூத்த நடிகர்களின் உச்சரிப்பு எங்களைப் போன்ற ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. இந்தத் திரைப்படத்தில் இடம்பெறும் அனைத்துப் பாடல்களும் நன்றாக இருக்கின்றன. தற்போது ஒவ்வொருவருடைய வீட்டிலும் தண்ணீர் கேன் இல்லாமல் இருப்பதில்லை. அந்த தண்ணீர் கேனை வீட்டிற்கு எடுத்து வரும் நபர்களுக்கும் ஒரு பின்னணி உண்டு. இதுபோல் அனைத்து தரப்பினரையும், ரசிகர்களையும் தொடர்பு கொள்ளும் தண்ணீர் கேனைப் பற்றிய படம் என்பதால் நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.
தயாரிப்பாளர் அன்புச்செழியன், ”வருணன் படத்தைப் பார்த்து விட்டேன். அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இன்றைய தேதியில் அனைவரது வீட்டிலும் வாட்டர் கேன் இருக்கும். அந்தத் தண்ணீர் கேனை வைத்து இயக்குநர் ஜெயவேல் முருகன் அற்புதமான படத்தை இயக்கியிருக்கிறார். ஜெயவேல் முருகன் எப்போதும் என் அலுவலகத்தில் இருப்பவர். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வெளியீட்டிற்கு அவருக்கு உதவ வேண்டும் என நினைத்தேன். இது ஒரு சின்ன படம். ரிலீஸ் செய்வது கடினம் என்பது தெரியும். அவருடைய உழைப்பு மற்றும் அவருடைய குழுவின் உழைப்பு வீணாகக் கூடாது என்பதற்காகவும், இந்த இளைஞர்களின் கனவு நனவாக வேண்டும் என்பதற்காகவும், வரும் வெள்ளிக்கிழமை இந்தத் திரைப்படம் வெளியாகிறது” என்றார்.