

நாயகி “DIE GAME” என்கின்ற விளையாட்டை விளையாட இமெயில் வழியே ஒரு அழைப்பு வருகிறது. அவரும் அந்த விளையாட்டை விளையாடத் துவங்குகிறார். அதில் மூன்று பேரின் புகைப்படம் இருக்கிறது. அவர்களில் யார் இறக்கப் போகிறார்கள் என்பதை நாயகி சரியாக கணித்துவிட்டால் அவளுக்கு பெரிய பரிசுத் தொகை கிடைக்கும் என்று விதிமுறைகள் கூற, பணத்தேவையில் இருக்கும் நாயகி அந்த விளையாட்டை விளையாடத் துவங்குகிறாள். அந்த விளையாட்டு விபரீதமாகி நாயகியின் வாழ்க்கையை எப்படி புரட்டிப் போட்டது என்பதே “இமெயில்” திரைப்படம்.
கேட்பதற்கு சுவாரஸ்யமாகத் தோன்றக் கூடிய நல்ல லைன் தான். ஆனால் அந்த லைனை, கதையாக மாற்றி, அதற்கு திரைக்கதை எழுதிய விதத்தில் தான் படக்குழுவினர் கோட்டை விட்டிருக்கின்றனர்.
ஆரம்பத்தில் வரும் காதல் எபிசோடுகளும், மனோபாலா வரும் எபிசோடுகளும் நம் பொறுமையை அதிகமாக சோதிக்கின்றன. ஹீரோயின் விபரீதமான அந்த விளையாட்டை விளையாடத் துவங்கும் புள்ளியில் இருந்து தான் கதையே துவங்குகிறது. அப்படி துவங்கும் கதையும் சரசரவென வேகம் எடுக்காமல் பாடாவதி காதல், கல்யாணம், காமெடி, சண்டை என்று செயற்கையான சினிமாத்தனத்தின் சாயங்கள் அத்தனையையும் அள்ளிப் பூசிக் கொண்டு பார்வையாளர்களாகிய நம்மை வெறுப்பேற்றுகின்றன.
படத்திற்கு திரைக்கதை முதல் பலவீனம் என்றால், இரண்டாம் பலவீனம் நடிகர் நடிகைகள் தேர்வு. ஒரு கதாபாத்திரம் கூட உணர்வுபூர்வமாக நடிக்கவில்லை. அதிலும் குறிப்பாக வில்லன் கோஷ்டி படு வேஸ்டாக இருக்கின்றனர். அவர்களைக் காட்டும் போதே இவர்கள் தான் வில்லனா என்று சிரிக்க வேண்டியதிருக்கிறது. அதிலும் மினிஸ்டராக காட்டப்படும் லேடியைப் பார்த்தவுடனே படம் மீதான அபிப்பிராயம் மாறிவிடுகிறது.
ராகினி திரிவேதி மட்டும் சண்டைக்காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார். அவருக்கென்று பிரத்யேகமாக அமைக்கப்பட்ட சண்டைக்காட்சிகள் மட்டும் தான் படத்தின் ஒரே ஆறுதல். நாயகனாக வரும் அசோக் பரவாயில்லை ரகம். ஸ்மார்டாக இருக்கிறார். சில இடங்களில் நடிப்புப் பேசப்படும் அளவிற்கு இருக்கிறது. குறிப்பாக அந்த க்ளைமாக்ஸ் காட்சியில்.
ஆதவ் பாலாஜி, பில்லி முரளி, ஆர்த்தி ஸ்ரீ, லொள்ளு சபா மனோகர், மனோபாலா மற்றும் பலர் படத்தில் இருக்கின்றனர். யாரும் பெயருக்குக் கூட நடிக்கவில்லை.
ட்விஸ்ட் என்று நினைத்துக் கொண்டு படத்தின் திரைக்கதையில் பல விசயங்களை செய்திருக்க, அவை எல்லாம் ஏதோ சின்னக் குழந்தைகள் ஒளிந்து விளையாடும் விளையாட்டு போல முதிர்ச்சியற்று இருக்கிறது.
எம்.செல்வம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கவாஸ்கர் அவினாஷ் இசையமைக்க, ஜூபின் பின்னணி இசை அமைத்திருக்கிறார்.
இயக்குநர் எஸ்.ஆர்.ராஜன் இமெயில் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகி இருக்கிறார். சிறப்பான ஒன் லைனைப் பிடித்தவர், அதை என்கேஜிங் ஆன கதையாகவும் திரைக்கதையாகவும் மாற்றுவதில் தவறியிருக்கிறார். ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் பிரச்சனைகளை மையக்கதையாக தேர்வு செய்த இயக்குநர், அதை வலி மிகுந்த கதையாகவும் காட்சியாகவும் மாற்ற முனையாமல், ஒரு அடிதடி படமாக இரண்டாம் பாதியில் மாற்றி இருக்கிறார்.
ராகினி திரிவேதி போடும் ஸ்டண்ட் காட்சிகள் பார்ப்பதற்கு நன்றாக இருந்தாலும் நம்பகத்தன்மை இன்றி இருக்கிறது. அதுவுமின்றி படத்தின் எந்தவொரு கதாபாத்திரத்துடனும் பார்வையாளர்களாகிய நமக்கு ஒரு கனெக்டிவிட்டி கிடைப்பதே இல்லை. நாயகி ஒருவர் இறக்கப் போகிறார் என்று தெரிந்தும் அதனை எந்தவொரு குற்றவுணர்ச்சியும் இன்றி தேர்வு செய்கிறார் எனும் போதே, அக்கதாபாத்திரம் ஆடியன்ஸிடம் இருந்து விலகிவிடுகிறது. அதற்குப் பின்னர் அவருக்கு ஏற்படும் பிரச்சனைகள் பார்வையாளர்களிடம் எந்தவொரு பதைபதைப்பையும் ஏற்படுத்தாமல் கடந்துவிடுகின்றன.
இன்னும் கதாபாத்திர வடிவமைப்பிலும், காட்சிகளிலும், திரைக்கதையிலும் பிரத்யேக கவனம் செலுத்தி இருந்தால், “இமெயில்” திரைப்படம் கண்டிப்பாக பேசப்பட்டு இருக்கும்.


