Shadow

லவ்வர் விமர்சனம்

80 மற்றும் 90களின் காலகட்ட காதல்களில் தொண்ணூறு சதவீதத்திற்கும் மேலான காதல்கள் சொல்லாமலே முடிந்து போயிருக்கும்.  ஆனால் இன்றைய 21ம் நூற்றாண்டுத் தலைமுறையின் காதல்கள், பார்த்த மறுகணத்தில் காதலைச் சொல்லியும், காதலியுடன் கை கோர்த்து சுற்றியும், ஒன்றாக பழகியும், படுக்கையை பகிர்ந்தும் கூட தொண்ணூறு சதவீதத்திற்கும் அதிகமான காதல்கள் கல்யாணத்தில் கைகூடாமல் கலைந்துவிடுகிறது.  படுக்கையை பகிர்வதையே உச்சகட்ட லட்சியமாகக் கொண்டு இயங்கியிருக்கும் காதல்கள் அதில் சில பல இருக்கலாம். ஆனால் அவைகளையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் உண்மையாகவே காதலை வாழ்க்கைத் துணைக்கான தேடலாகப் பார்த்தோ, இல்லை காதலியையோ காதலனையோ உருகி உருகி உண்மையாக காதலிப்போர் கூட இறுதியில் சேராமல் பிரிந்துவிடுகிறார்கள்.  அதன் பின்னணியில் உள்ள சமூகவியலையும் உளவியலையும் ஒரு சேர பேசும் படம் தான் “லவ்வர்”.

கல்லூரி காலத்தில் இருந்து காதலித்து வரும் காதலியை அருண் குறுக்குவிசாரணை செய்யும் காட்சியில் இருந்து படம் துவங்குகிறது. அந்த தொனியில் நாயகியின் நடவடிக்கைகளால் தான் நாயகன் அப்படி நடந்து கொள்கிறான் என்கின்ற பிம்பம் கிடைத்தாலும் கூட, அடுத்தடுத்த காட்சிகளில் நம் மனமாகிய பெண்டுலம் நாயகியின் பக்கம் சாயத் துவங்குகின்றது.  அருண் என்கின்ற நாயக பிம்பத்தின் அன்றாடம் மதுவும், புகையும் போதையும் அதனோடு சேர்ந்த புலம்பலுமாக கழிகிறது. காதலி என்பவள் என்னுடைய பொருள், அவளை நான் எப்படி வேண்டுமானாலும் கையாளுவேன், அவள் அதற்குப் பணிந்து போக வேண்டும் என்கின்ற  ஆண்மைத் திமிர் கலந்த, மனைவியை ரோட்டில் இழுத்துப் போட்டு அடிக்கும் குடிகார ஆசாமியை நாயகன் கதாபாத்திரம் நினைவுபடுத்துகிறது.

சரியான வேலைக்குச் செல்லாமல், ஏற்கனவே தொழில் செய்யப் போகிறேன் என்று பதினைந்து லட்சம் பணத்தை அழித்துவிட்டு, மீண்டும் தொழில் செய்யப் போகிறேன் என்று கஞ்சாக் குடி நட்பு வட்டத்துடன் புகைத்து, குடித்து அலையும் நாயகனுக்கு அது  முழு நேர வேலை வேலை என்றால், நாயகியை காதலிப்பதும், சந்தேகிப்பதும், சண்டை போடுவதும் பகுதி நேர வேலை. ஒழுங்கீனமான அப்பனை கண்டிக்க, தண்டிக்க துடிக்கும் நாயகனுக்கு தான் எந்த விதத்தில் தன் அப்பனைவிட உசத்தி என்பதோ, தனக்காக இந்த ஓயாத வயதிலும் ஓடி ஓடி உழைக்கும் தன் தாயின் மாறாத அன்போ, உழைப்போ கண்ணுக்கு தெரிவதே இல்லை.

அக்கதாபாத்திரத்தில் நாயகன் மணிகண்டன் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தின் எந்த ப்ரேமில்  அவரைப் பார்த்தாலும் எரிச்சல் மேல் எழும்புகிறது. ஆடியன்ஸ்-யிடம் வெறுப்பை சம்பாதிக்கும் கதாபாத்திரம் என்பதை அறிந்திருந்தும் அது குறித்துக் கவலைப்படாமல் துணிந்து நடித்திருக்கிறார்.  பெண்களின் உடல் குறித்தான, உடைகள் குறித்தான, அவர்களுக்கு ஆண்களுடன் இருக்கும் நட்பு குறித்தான வசனங்களிலும் காட்சிகளிலும்  என்றைக்குமான ஆண்களின் வாரிசாக தன்னை வார்த்தெடுத்து திரையில் பிரதிபலித்திருக்கிறார் மணிகண்டன். வாழ்த்துக்கள்.

திவ்யாவாக நடித்திருக்கும் கெளரிப்ரியா தன் மிகச்சிறப்பான நடிப்பின் மூலம் மணிகண்டனுடன் போட்டி போட்டு நடித்திருக்கிறார். முடிவு எடுக்க முடியாமல் குழம்பும் இடத்திலும், காதல், அன்பு, பயம், பொறுப்பு, வெறுப்பு, கழிவிரக்கம், கோபம் என ஒட்டு மொத்த உணர்வுகளையும் தன் கதாபாத்திரத்தில் உள்ளடக்கி காட்சிகளுக்குத் தேவையான இடங்களில் அள்ளித் தெளித்திருக்கிறார்.  மணிகண்டனின் தாயிடம் என்னால முடியலம்மா… என்று சொல்லி அழும் இடத்தில் நம் கண்களை பனிய வைக்கிறார்.

மணிகண்டனின் அப்பாவாக வரும் சரவணன் சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் மனதில் நிற்கிறார். மணிகண்டனின் அம்மாவாக நடித்திருப்பவர் இயல்பான நடிப்பால் காட்சிகளுக்கு உயிர் கூட்டுகிறார். போனில் நாயகி திவ்யாவுடன் பேசும் காட்சியும், பின்பு மகனிடம் போனில் அவனைத் தேற்றுவது போல் பேசும் காட்சியிலும் அட்டகாசமாக பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார்.

மணிகண்டனின் நண்பராக கடைசி வரை வருபவரும், திவ்யாவின் தோழர்கள் மற்றும் தோழிகளாக நடித்திருப்பவர்களும் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கின்றனர்.

ஷான் ரோல்டரின் இசையில் பாடல்கள் மனதை வருடுகின்றன. பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்த்திருக்கிறது. மேலும் சில காட்சிகளில் அடுத்த என்ன நடக்குமோ என்கின்ற உணர்வையும்  அது பார்வையாளர்களுக்கு அதீதமாகக் கடத்துகிறது.

ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் ஒரு ரோடு டிராவலிங் சென்று வந்த அனுபவமே கிடைக்கிறது. படத்தின் இரண்டாம் பாதியில் இருக்கும் டிராவல் எபிசோடுகளில் ஸ்ரேயாஸின் லென்ஸுகள் அத்தனை அழகையும் அட்டகாசமாக காட்சிப்படுத்தியிருக்கின்றன.

இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் முதல்படம் இது. காதலும் காதலிகளும் எவ்வளவோ மாறி இருந்தாலும் காதலர்கள் பெரும்பாலும் இன்னும் கொஞ்சமும் ,மாறாமல் காதலிகளை கொடுமைப்படுத்திக் கொண்டே தான் இருக்கிறார்கள்.  அதை தங்கள் உரிமையென்றும்,  காதலிகளை காப்பாற்றி கட்டிக் காக்க வேண்டிய கடமை தங்களுக்கு உள்ளது என்பதான அவநம்பிக்கைகளையும் இன்னும் கொண்டிருக்கிறார்கள்.  மேலும் தன் மீதான நம்பிக்கை இல்லாத அழகான காதலியைக் கொண்டிருக்கும் ஆண்களுக்கு, உள்ளுக்குள் அவள் தன்னை விட்டுப் போய்விடுவாளோ என்கின்ற உளவியல் பயத்தால் உழன்று கொண்டு இருக்கிறார்கள் என்கின்ற கருத்தாக்கமும் கதை வழியே சொல்லப்பட்டு இருக்கிறது.

தாழ்வு மனப்பான்மையுடன் இருக்கும் ஆண்கள் காதலில் எப்போதுமே ஆபத்தானவர்கள் என்பதும், வாய்ப்புகளும் எதிர்பார்ப்புகளும் பல்கிப் பெருகும் இன்றைய வாழ்க்கைச்சூழலில் ஆண்களும் பெண்களும் தனக்குக் கிடைத்த ஒரே வாழ்க்கையை விட்டுக் கொடுத்து வாழ்வதை வெறுத்து, தன் சுயத்திற்கு தேவையான, பிடித்தமான வாழ்க்கை முறைகளையும் வாழ்வியலையும் நோக்கி நகர்வதில் முனைப்புக் காட்டி வருகிறார்கள் என்பதையும் “லவ்வர்” திரைப்படம் அழுத்தமாகப் பேசவில்லை என்றாலும் ஓரளவிற்குப் பேசி இருக்கிறது.

காதலிப்பதற்கு தேவைப்படாத ஒழுக்கமும், பொறுப்புணர்ச்சியும், பரந்துபட்ட மனமும், ஆணாதிக்க உணர்வில்லாத தன்மையும், பார்வை மாற்றமும் ஒன்றாக சேர்ந்து வாழும் வாழ்க்கைக்கும் கண்டிப்பாகத் தேவைப்படுகிறது என்பதை இன்றைய இளைஞிகள் உணர்ந்து வருகிறார்கள். ஆனால் இளைஞர்கள் தான் இன்னும் பழமைகளில் சிக்கித் தவிக்கிறார்கள், காதலியை தக்க வைத்துக் கொள்வதற்கானப் போராட்டத்தில் பதற்றம் அடைந்து போய் தோற்கிறார்கள் என்பதையும் “லவ்வர்” பேசுகிறது.

கதை என்று பார்த்தால் காதல், அதைத் தொடர்ந்த கூடல், அதற்குப் பின் மேலெழும் சந்தேகம் சில  சண்டைகள், சமரசங்கள், பல சண்டைகள்,  சமரச முயற்சிகள், எந்நேரமும் சண்டைகள், முடிவு  என்கின்ற பரிமாண பாதையில் காதலைத் தொலைப்பது தான் கதை. கிட்டத்தட்ட திரைக்கதையும் அதுவே தான் என்பதால், சண்டைகள் கூடக் கூட நம் சலிப்புணர்வும் சில இடங்களில் கூடுகிறது.

மொத்தத்தில் கல்யாணத்தில் இருக்கும் கவனத்தை விட காதலில் இன்னும் அதீத கவனம் தேவைப்படுகிறது என்பதையும், அது உண்மையாகவே காதல் தானா..? என்பதை ஆய்ந்து அறிய வேண்டிய கட்டாயமும் இன்றைய சூழலில் இருப்பதை எதிரொலிக்கிறது “லவ்வர்” திரைப்படம்.

– இன்பராஜா ராஜலிங்கம்