32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

கார்கி – திகில் படத்தை விஞ்சும் இறுதிக்காட்சி

Dinesh R சேலம் Published: 07/07/2022 4 நிமிட வாசிப்பு Updated: 16/07/2022 சினிமா
எழுத்து அளவு:

பிளாக்கி ஜெனி & மை லிஃப்ட் புட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பெருமையுடன் வழங்கும் திரைப்படம் “கார்கி” ஆகும். இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகை சாய் பல்லவி, இயக்குநர் கெளதம் ராமசந்திரன், நடிகை தயாரிப்பாளர் ஐஸ்வர்ய லட்சுமி, 2D ராஜசேகர், சக்தி பிலிம் பேக்டரி சக்தி வேலன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இயக்குநர் கெளதம் ராமசந்திரன், “என்னுடைய முதல் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் படம் நன்றாக இருந்தால் உடனே கூறுங்கள். இல்லையென்றால், சிறிது தாமதமாக கூறுங்கள் என்று சொல்லி இருந்தேன். ஆனால், இப்படம் நன்றாக இருக்கிறது என்று தான் கூறுவீர்கள். ஜூலை 15 ஆம் தேதி வெளியாகிறது.

சாய் பல்லவி இப்படத்திற்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். நான் திருப்தி அடைந்தாலும் அவர் இன்னும் சிறப்பாக எடுக்கலாம் என்று நடிப்பார். இப்படம் பாதியில் என்ன செய்வது என்று தெரியாமல் போராடிக் கொண்டிருக்கும் போது ஐஸ்வர்ய லட்சுமி எங்களுடன் இணைந்து ஆதரவு கொடுத்தார். 2D ராஜசேகர் சாருக்கு நன்றி. இப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அனந்த பத்மநாபன் இல்லையென்றால் இப்படம் இல்லை” என்றார்.

நடிகை சாய் பல்லவி, “-சாய் பல்லவியால் தான் இப்படம் சிறப்பாக இருக்கிறது என்று அனைவரும் கூறினார்கள். ஆனால், நான் வருவதற்கு முன்பே எல்லாமே தயாராக இருந்தது. அன்றாடம் நாம் சந்திக்கும் பிரச்சனையைப் படமாகக் கொடுத்திருக்கிறார்கள்.

பொதுவாக இயக்குநருக்கு அழுத்தம் அதிகமாக இருக்கும். ஆனால், இயக்குநர் கெளதம் எந்த வித அழுத்தமும் இல்லாமல் இயல்பாகவே இருந்தார். படத்தில் பணியாற்றியாவர்கள் என்னுடைய திறமையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று அல்லாமல் படத்திற்கு எது தேவையோ அதைச் செய்திருக்கிறார்கள்.

சூர்யா சார் படத்துடன் அசோசியேட் ஆகியுள்ளார் என எனக்கும், காளி வெங்கட்டைப் போலவே தெரியாது. ஒரு நாள் நடிகர் சூர்யாவுடன் எடுத்த புகைப்படம் அனுப்பினார்கள். சூர்யா சாரைச் சந்தித்தித்துள்ளார்கள் என்று நினைத்தேன். விராட பர்வம் பட வேலைகளில் இருக்கும்போது, ஒரு சின்ன மீட் என வரச் சொன்னார்கள். எதிர்பாராத விதமாக சூர்யா சாரையும் ஜோதிகாவையும் பார்த்ததில் எனக்குப் பேச்சே வரவில்லை. அந்த முழு நிகழ்விலும் நான் உறைந்து போய், நன்றி கூடச் சொல்லத் தோன்றாமல் அப்படியே உறைந்து போய் நின்னேன்” என்றார்.

நடிகை ஐஸ்வர்ய லட்சுமி, “3 வருடங்களாக கார்கியுடன் பயணித்து இருக்கிறேன். ஆனால், இயக்குநர் கெளதம் ராமசந்திரன் 4 வருடங்கள் போராடியிருக்கிறார். சாய் பல்லவி இல்லாமல் கார்கி இல்லை. இப்படம் எனக்கு மிகவும் உணர்வுபூர்வமான படம். அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார்கள்” என்றார்.

2டி நிறுவனத்தின் சார்பாகப் பேசிய ராஜசேகர், “கார்கியோட இணைந்தது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. சாய்பல்லவி ஆரம்பத்தில் இருந்து இறுதிக்காட்சி வரை புத்திசாலிதனமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருக்கிறார். சூர்யா இப்படத்தைப் பார்த்து விட்டு சிறிது நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்து இருந்தார். அதன் பிறகு இப்படத்தை நாமே வெளியிடுவோம் என்றார்” எனக் கூறினார்.

சக்தி பிலிம் பேக்டரி நிறுவனர் சக்திவேலன், “நாம் ஒரு தொழிலில் இருக்கிறோம். அதில் பயணித்துக் கொண்டு இருக்கும் போது பெரிதாகத் தெரியாது. ஆனால், இடையில் எதிர்பாராத மகிழ்ச்சியான தருணம் வந்தால் அதைச் சாதாரணமாக கடந்து விட முடியாது. அப்படித்தான் இப்படம் பார்த்த போது இருந்தது. படம் ஆரம்பித்ததில் இருந்து, நான் பின் தொடர்ந்தது சாய் பல்லவியின் கண்கள் தான். இப்படத்தின் இறுதிக் காட்சியில் சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது.

இப்படத்தை 2D நிறுவனம் வெளியிட வேண்டும் என்பது என்னுடைய பேராசையாக இருந்தது. ராஜசேகரும் சூர்யாவும் பார்த்து ஒப்புக் கொண்டார்கள். ஆகையால், இப்படம் தரமானதாக வெளியாக இருக்கிறது. இப்படத்தை சாதாரணமாகக் கடந்து விட முடியாது. ஒரு திகில் படத்தில் கூட இந்தளவுக்குத் தாக்கம் இருக்குமா என்று தெரியாது” என்றார்.

நடிகர் காளி வெங்கட், “முதலில் நடிகர் சூர்யாவிற்கு நன்றி. இப்படம் மக்களிடம் எப்படி சேரும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். 2டி-க்குச் சென்ற பிறகு தான் நிம்மதியாக இருந்தது. இப்படத்தின் கதையைக் கேட்கும் போது பதட்டமாக இருந்தது. ஏனென்றால், இது மற்ற படங்களைப் போல் இருக்காது. இறுதிக் காட்சியைக் கேட்கும் போது இப்படம் நிச்சயம் வெற்றியடையும் என்ற நம்பிக்கை வந்து விட்டது.

ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பில் சிறப்பாக நடித்து விட வேண்டும் என்று பயிற்சி எடுத்து வருவேன். ஆனால், ஒரே ஒரு பாவனையில் சாய் பல்லவி வென்று விடுவார்” என்றார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.