Shadow

இந்தியன் 2 விமர்சனம்

இந்தியன் தாத்தா முதல் பாகத்தில் தன் காலடியில் வளர்ந்த களையை தான் வெட்டி எறிந்ததைப் போல் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டில் உள்ள களையை வெட்டி எறிய வேண்டாம்; குறைந்தபட்சம் வெளிச்சத்திற்காவது கொண்டு வாருங்கள் என்று சொல்வதும், அதைத் தொடர்ந்த விளைவுகளும் தான் இந்தியன் 2 திரைப்படத்தின் கதை.

நீண்ட நெடுங்காலமாக தயாரிப்பில் இருந்து வந்த படம். படப்பிடிப்பு துவங்கியதில் இருந்தே 360 டிகிரியில் சுற்றி சுற்றி பிரச்சனைகள் சூழ்ந்த படம். ரோபாட் 2, ஐ போன்ற படங்களின் சுமாரான வெற்றிக்குப் பிறகு இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குநரான ஷங்கர் தன்னை மீண்டும் நிருபிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அனைத்தையும் கொண்ட படம். பொதுவெளியில் மிகப்பெரிய விவாதத்தையும், லஞ்சம் ஊழல் குறித்தான பிரச்சனைகளை திரை வழியே தெருக்கோடியில் வாழும் கடைக்குடிக்கும் கொண்டு போய் சேர்த்த மாபெரும் வெற்றிப்படமான இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம், உலக நாயகன் கமல்ஹாசனும் விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த படம் என்று இந்தியன் 2 திரைப்படத்திற்கான அடைமொழிகள் அநேகம். இவ்வளவு எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வெளியாகியிருக்கும் இந்தியன் 2 அந்த எதிர்பார்ப்புகளை எந்தளவிற்கு நிறைவேற்றியிருக்கிறது என்று பார்ப்போம்.

சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், ஜெகன் மற்றும் ரிஷிகாந்த் இவர்கள் நால்வரும் நண்பர்கள். Parking Dog என்ற பெயரில் ஒரு யூடியூப் சேனல் துவங்கி அதில் சமூகத்தில் நடக்கும் ஊழல்கள், லஞ்சம் தொடர்பான பிரச்சனைகள், பொதுப் பிரச்சனைகள் போன்றவற்றை வீடியோவாக மாற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வாங்கித் தரவும் போராடுகிறார்கள். அவர்கள் என்னதான் போராடினாலும் தவறு செய்தவர்கள் சட்டத்தில் இருந்து எளிதாக தப்பிச் செல்கிறார்கள். இதைப் பார்த்து பொறுமும் இந்த நண்பர்கள் கூட்டம் இது போன்ற குற்றவாளிகளுக்கு இந்தியன் தாத்தா தான் சரி, என்று முடிவு செய்து சமூக வலைதளம் வாயிலாக இந்தியன் தாத்தாவை மீண்டும் வரவைப்பதற்கான முயற்சியில் இறங்குகிறார்கள். இந்தியன் தாத்தா வருவதும், தான் என்ன செய்யப் போகிறேன் என்று சொல்வதோடு நீங்கள் அனைவரும் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதும், அதைத் தொடர்ந்து நடக்கும் பின்விளைவுகளும் தான் படத்தின் திரைக்கதை.

இந்தியன் தாத்தாவாக பல்வேறுவிதமான கெட்டப்புகளில் வந்து கெத்து காட்டுகிறார் உலகநாயகன் கமல்ஹாசன். இந்தியனில் தமிழ்நாட்டை மையப்படுத்தி எடுத்த களையெடுப்பு இந்தியன் 2 திரைப்படத்தில் ஒட்டு மொத்த இந்தியாவையும் மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருக்கிறது. கமல்ஹாசனுக்கு சித்தார்த் கூட்டணியை நேரிடையாக சந்திக்கும் காட்சியைத் தவிர்த்து நடிப்புக்கு சவால்விடுவது போன்ற கணமான காட்சிகள் குறைவுதான். நெடுமுடிவேணு மற்றும அவரின் மகன் பாபி சிம்ஹா விரித்த வலையில் சிக்கித் தப்பிக்கும் போது பூனை போன்ற மாடுலேஷனில் கத்தும் இடம் வசீகரிக்கிறது.

அது போல வகை வகையான வர்மங்களை கயவர்களிடம் கைவரிசை காட்டி அதுகுறித்து விளக்கும் காட்சிகள் ரசனையாகிறது. இந்தியன் 1ல் அந்த சுதந்திரப் போராட்ட வீர்ரின் உடல்மொழியிலும் உள்ளமொழியிலும் இருந்த உறுதியும், புத்திசாலித்தனமும், நேர்மையும், பிடிவாதமும் இத்தனை ஆண்டுகள் ஓடியும் ஒரு துளியும் குறையவில்லை என்பதை தன் அற்புதமான நடிப்பால் அளித்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் கமல்ஹாசன்.

கமலுக்கு அடுத்ததாக  சித்தார்த்-க்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அவரின் அம்மாவிற்கும் அவருக்குமான பிணைப்புக்கான காட்சிகளும் தன் வீட்டில் ஒரு அசம்பாவிதம் நடக்கும் போது அதை எதிர்கொள்ள இயலாமல் தடுமாறி தடம் மாறும் இடத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி நடித்து இருக்கிறார்.

நாயகியாக முன்னிருத்தப்படும் ரகுல் ப்ரித் சிங்கை விட ப்ரியா பவானி சங்கருக்குத் தான் கனமான கதாபாத்திரம். கிட்டத்தட்ட இருவருக்குமே, இல்லை இல்லை நண்பர்கள் நால்வரோடு ப்ரீத் சிங்கை உள்ளடக்கி ஐவருக்குமே ஒரே மாதிரியான கதாபாத்திரம் தான். குடும்பத்திற்குள் நடக்கும் தவறுகளை தெரிந்து கொண்டு உள்ளம் வெதும்பும் கதாபாத்திரம் தான்.

நண்டு ஜெகனின் கவுண்டர்கள் ஆங்காங்கே ஒர்க்-அவுட் ஆகிறது. ரிஷிகாந்த்-தின் நடிப்பு நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது. இந்தியன் 1ல் நெடுமுடி வேணு ஆற்றிய பணியை இப்படத்தில் பாபி சிம்ஹா ஆற்றியிருக்கிறார். இருப்பினும் நெடுமுடிவேணுவிடம் இருந்த மிடுக்கும் தோரணையும் மிஷ்ஷிங்,.அவருக்கு உதவியாளாக AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் உலா வரும் விவேக் அவருடைய பாணியிலான காமெடிகளை அரங்கேற்றம் செய்கிறார். ஜாகீர் ஹுசைனும், குல்சன் குரோவரும் சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்.

எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, இமான் அண்ணாச்சி, தம்பி ராமையா, ரேணுகா, டெல்லிகணேஷ், மனோபாலா, காளிதாஸ் ஜெயராம், வினோத் சாஹர், மாரிமுத்து போன்றோரும் படத்தில் இருக்கிறார்கள்.  இவர்களில் தம்பி ராமையா, ரேணுகா, இமான் அண்ணாச்சி போன்றோருக்கு கொஞ்சம் போல் நடிப்பதற்கு வாய்ப்பு. மற்றவர்களுக்கு சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

ரவிவர்மனின் ஒளிப்பதிவு ஓவியம் போன்ற அழகுடன் தீட்டப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக கமல்ஹாசன் வரும் அந்த அறிமுக பாடலின் போது ஒளிப்பதிவு ஆச்சரியமூட்டுகிறது. முத்துராஜின் கலை இயக்கம் பிரமிப்பூட்டுகிறது. ஜாகீர் ஹுசைனின் தங்க மாளிகை செட்டைப் பார்க்கும் போது நம்மை அறியாமல் நம் கண்கள் அகல விரிவது உண்மை. அனல் அரசு, பீட்டர் ஹெய்ன் மற்றும் ஸ்டண்ட் சில்வா போன்றோர் சண்டைப் பயிற்சி இயக்குநர்களாக பணியாற்றியிருக்கிறார்கள். ஒவ்வொருவரின் கைவண்ணத்திலும் ஒவ்வொரு சண்டை அரங்கேறி இருக்கிறது. இருப்பினும் அந்நியன், ஐ, இந்தியன் போன்ற ஷங்கரின் முந்தைய படங்களில் இருந்த அளவிற்கு இப்படம் ஆக்‌ஷன் பேக்கேஜ் ஆக இல்லை என்பதும் உண்மை.

ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங் இன்னும் சற்று துல்லியமாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. படம் மூன்று மணி நேரம் என்பது ஒரு பெரும் குறை. பாடல்களாக வசீகரிக்கும் அனிருத், பின்னணி இசையில் ரகுமான் கொடுத்த மேஜிக்கையும் இந்தியன் என்கின்ற பிராண்டையும் தூக்கி நிறுத்த தவறியிருக்கிறார். ஷங்கரின் படங்கள் என்றாலே வசனங்கள் பேசப்படும். இப்படத்திற்கு ஜெயமோகன், லஷ்மி சரவணக்குமார் மற்றும் கபிலன் வைரமுத்து போன்றோர் வசனம் எழுதியிருக்கின்றனர். ஆனால் ஷங்கர் – சுஜாதா காம்போ தான் தி பெஸ்ட் என்பது மீண்டும் நிருபணமாகியிருக்கிறது.

இந்தியன் என்ற ப்ராண்டிங் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை தக்க வைத்திருப்பது படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ். அது போக கமல்ஹாசனின் தோற்றமும் நடிப்பும், பிற கலைஞர்களின் இருப்பும், இயக்குநர் ஷங்கரின் தொழில்நுட்பம் சார்ந்த அறிவும் படத்தின் பக்கபலமாக மாறி இருக்கிறது.

ஒட்டு மொத்த சமூகமும் ஊழல், குற்றங்கள், பிழைகளின் பின்னால் ஒளிந்து கொண்டு பிறரை குற்றவாளியாக்கி கைநீட்ட முயலும் குறைபாடுள்ளது என்பதில் உண்மை இருந்தாலும், அந்தக் கூட்டமே மிகுதி என்பதாக கொண்டாலும் கூட, மீதியுள்ள சிறுபான்மை கூட்டத்தை க்ளைமாக்ஸ் காட்சியில் மருந்திற்குக் கூடக் காட்டாமல் இருந்ததை ஏற்க முடியவில்லை.

கதை, திரைக்கதை மற்றும் கதாபாத்திர வடிவமைப்பின் குறைபாடுகளை சற்று களைந்து மேம்படுத்தி இருந்தால் இந்தியன் 2 இன்னும் சிறப்பான படைப்பாக மாறி இருக்கும்.

மொத்தத்தில் இந்தியன் 2 – இந்தியன் தாத்தாவின் மறு தரிசனம்.