Shadow

இன்ஃபர்நோ விமர்சனம்

Inferno vimarsanam

‘டாவின்சி கோட்’ நாவல் மூலம் பெரும் புகழ் ஈட்டியவர் எழுத்தாளர் டான் ப்ரெளன். அதைப் படமாக இயக்குநர் ரோன் ஹாவர்ட் எடுத்த பொழுது, அப்படத்தை இந்தியாவில் வெளியிட கிறிஸ்துவ அமைப்புகள் 2006இல் தடை கோரியது. படத்தின் மீதான இந்தியர்களின் எதிர்பார்ப்பை அது ஒன்றே எகிறச் செய்து, தடை நீக்கப்பட்டதும் ‘அப்படி என்னத்தான் படத்தில் இருக்கு?’ எனத் திரையரங்கை நோக்கித் தள்ளியது. அந்த எதிர்பார்ப்பின் நீட்சி, படமாக்கப்பட்டுள்ள எழுத்தாளரின் மூன்றாவது நாவலான இன்ஃபர்நோ வரையிலுமே தொடர்வது குறிப்பிடத்தக்கது.

குறியீட்டியலில் (Symbology) பேராசிரியரான ராபர்ட் லேங்டன் புதிரை விடுவிப்பதோடு, இம்முறை உலகையே காக்கும் பெரும் பொறுப்போடு களமிறங்கியுள்ளார்.

எத்தகைய குறியீட்டையும் கட்டுடைக்கக் கூடிய லேங்டன், ‘ப்ரெளனா இருக்குமே! அதில் ஹார்ட்டின் போட்டுத் தருவாங்களே! காலையில் எழுந்ததும் மக்கள் எல்லாம் குடிப்பாங்களே!’ என காஃபி என்ற சொல்லையே மறந்தவராக அறிமுகமாகிறார். அவருக்குத் தோன்றும் மனப்பிரமைகள், 13 ஆம் நூற்றாண்டு இத்தாலியக் கவிஞர் தாந்தே சித்தரித்த நரகத்தின் படிநிலைகளை ஒத்து அமைகிறது. ரத்த வெள்ளம், கழுத்துத் திருப்பப்பட்ட மனிதர்கள், தடிப்பேறிய முகங்கள், கருப்பு அங்கி அணிந்த பெண் என காட்சிகள் அவரை அலைக்கழிக்கிறது. ‘இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இருக்க வேண்டிய நான் ஏன் இத்தாலியின் ஃப்ளாரென்ஸில் இருக்கிறேன்?’ என்ற குழப்பத்தில் தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிவடைந்து, ‘இன்ஃபர்நோ’ வைரஸைக் கண்டடைகிறார் லேங்டன்.

இன்ஃபர்நோ என்றால் இத்தாலிய மொழியில் நரகம் எனப் பொருள். மக்கள் தொகைப் பெருக்கத்தால், இன்னும் சில ஆண்டுகளில் பூமி நரகமாகிவிடும் எனப் பயப்படுகிறார் பணக்கார விஞ்ஞானியான பெர்ட்ராண்ட் ஜோப்ரிஸ்ட். பூமி மீதும், மனிதக் குலத்தின் மீதுமுள்ள அதீத காதலால், ஒரு தற்காலிக நரகத்தை உருவாக்கி மக்கள் தொகையைக் குறைத்து, அடுத்து வரும் தலைமுறைக்கு பூமியைச் சொர்க்கமாக விட்டுச் செல்ல வேண்டுமென்பது தான் அவரது பேராசையும் லட்சியமும். அந்தப் புனித லட்சியத்தை அடைய தன்னையே பலியிட்டுக் கொள்ளும் கொள்கைவாதி ஜோப்ரிஸ்ட். ஜோப்ரிஸ்ட்டாக பென் ஃபோஸ்டர் நடித்துள்ளார். அவரது காதலி சியான்னா ஃப்ரூக்ஸாக ஃபெலிசிட்டி ஜோன்ஸ் அழகாய்த் தோன்றியுள்ளார். நாவலில், வெளியாகிவிடும் வைரஸினால் ஏற்படும் விளைவுகளைத் தடுக்க ஒத்துழைப்பதாக சியான்னா முடிவில் சொல்வார். படத்திலோ உல்டாவாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அதே போல், நாவல் படி வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் மலடாவதாகத்தான் டான் ப்ரெளன் எழுதியிருப்பார். ஆனால், படத்திலோ இன்ஃபர்நோ என்பது  வலியை ஏற்படுத்தவல்ல மரண வைரஸ்.

ராபர்ட் லேங்டனாக டாம் ஹான்க்ஸ் வழக்கம் போல் கலக்கியுள்ளார். நாவலில் இல்லாத அழகான சுவாரசியமாய், லேங்டனுக்கு ஒரு சின்னஞ்சிறு காதல் அத்தியாயத்தையும் வைத்துள்ளனர் திரைக்கதை அமைத்துள்ள ப்ரையன் க்ரேஸரும், ரோன் ஹாவர்ட்டும். உலக சுகாதார அமைப்பின் தலைவர் எலிசபெத் சின்ஸ்கி மீது தான் லேங்டனுக்கு ‘க்ரஷ்’. அந்த ‘க்ரஷ்’ டாம் ஹேன்க்ஸின் சோர்வான கண்களில் தெரிவதை விட, எலிசபெத்தாக நடித்திருக்கும் டேனிஷ் நடிகை சிட்ஸே பேபட் நட்ஸன் கண்களில் பளிச்செனத் தெரிகிறது. ஒரு ரகசிய பாதுகாப்புக் கூட்டமைப்பின் தலைவர் சிம்ஸாக இர்ஃபான் கான் தோன்றியுள்ளார். மிகக் கெத்தாகத் திரையில் அறிமுகமாகும் அவர், கன கச்சிதமாய்த் தானேற்ற பாத்திரத்திற்குப் பொருந்தியுள்ளார்.

டாவின்சி கோட் அளவுக்கு சுவாரசியமான புதிர் முடிச்சுகள் இல்லையெனினும், படம் சிறிது நகைச்சுவையோடும் கொஞ்சம் திருப்பங்களோடும் ஈர்க்கவே செய்கிறது. பலாசோ அருங்காட்சியகத்தில், தாந்தோவின் மரண முகமூடியைத் திருடியது யாரென கேமிரா ஃபூட்டேஜில் பார்க்கும் காட்சி நல்லதொரு நகைச்சுவை. ஃபாரடே பாயின்ட்டர், நரகத்தின் வரைப்படம், ஃப்ளாரென்ஸிலுள்ள பலாசோ வாக்கியோ (Palazzo Vecchio) அருங்காட்சியகம், தாந்தோவின் மரண முகமூடி என படம் சில சுவாரசியங்களைக் கொண்டிருந்தாலும், டான் ப்ரெளன் சீரிஸ் படங்களில் இது ஒரு மாற்றுக் குறைவுதான்.

பி.கு.: இன்ஃபெர்னோ என்று எழுதுவதே சரியாக இருக்கும். ஆனால், இன்ஃபர்நோ என்ற தலைப்பில்தான் மொழிமாற்றம் செய்து வெளியிட்டுள்ளனர். ஆக, தலைப்பிலும் அப்படியே உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.