எதிலுமே அதீத நேர்மையோ, ஒழுக்கமோ, அறமோ தேவையில்லை என்கின்ற மனநிலைக்கு மக்கள் வந்து கொண்டு இருக்கிறார்களோ? கலியுகம் என்கின்ற வார்த்தை இந்தக் கருத்தியலுக்கு ஒத்து வருமா என்று தெரியவில்லை. இருப்பினும் அப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது. இப்பொழுது மக்களின் எதிர்பார்ப்பு என்பது ‘குறைந்தபட்சம்’ எனச் சுருங்கிவிட்டது. ‘லஞ்சம் குடுக்காம எப்டிங்க வேலை நடக்கும்?’, ‘லஞ்சம் குடுத்தா உடனே நடந்திரும்’, ‘ஹெல்மெட்டெல்லாம் போட்டுக்கிட்டு எதுக்கு சார்? எல்லா நாளுமா மாட்றோம்! மாட்றப்ப ஒரு 200 குடுத்தா போதும்’, ‘கொள்ளையடிக்காத அரசியல்வாதி எங்க சார் இருக்காங்க? கொள்ளையடிச்சாலும் மக்களுக்கு ஏதாவது செய்வாங்க சார்’ என்பதான குறைந்தபட்ச நேர்மை, ‘எதுல சார் கலப்படம் இல்லாம இருக்கு?’ என்பதான குறைந்தபட்ச அறம், ‘அனைவரையும், குறிப்பாகப் பெரியவர்களை எள்ளி நகையாடும் எடுத்தெறியும் போக்கு’ என்பதான குறைந்தபட்ச ஒழுக்கம் என இப்படி எல்லாமே குறைந்தபட்சம் தான். இப்படி எல்லாமே குறைந்தபட்சமாக இருந்தாலும் பணம், புகழ், மட்டற்ற மகிழ்ச்சி இதெல்லாம் அதீதமாக வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். இல்லை இப்படிச் சொல்லலாம். இந்தக் குறைந்தபட்சங்களை வைத்துக் கொண்டே அதீத மகிழ்ச்சியோடு அவர்களை இருக்கும்படி சமூகம் அவர்களைக் கட்டமைத்து வருகிறது.
இந்தக் குறைந்தபட்ச வரிசையில் இப்பொழுது கிரியேட்டிவிட்டி அதாவது கற்பனைத் திறன் என்கின்ற வஸ்துவும் புதிதாக இணைந்திருக்கிறது போலும். ‘ரொம்பவெல்லாம் யோசிக்க வேணாம் சார். ஃபர்ஸ்ட் ஹாஃப்-ல ஒரு ட்விஸ்ட், செகண்ட் ஹாஃப்ல ஒரு ட்விஸ்ட் போதும் சார்’ என்கின்ற மனநிலைக்கு வந்து விட்டார்கள். புதுப் பொண்டாட்டி சமைக்க ஆரம்பிக்கும் போது முதல் மாதம் சாப்பாடு படு கண்றாவியாக இருக்கும், இரண்டாம் மாதம் சாப்பாடு கேவலமாக இருக்கும், மூன்றாம் மாதம் நாக்குக்கு பழகிவிட்டதால் சுமாராகத் தெரியும். ஆனால் நம்மையும் மீறி அனிச்சை செயலாக நம் வாய் சூப்பர் என்று முணுமுணுக்கும். வரவர திரைப்படங்களுக்கான விமர்சனங்களும் இந்த வரிசையில் தான் எழுதப்படுகிறதோ என்று தோன்றுகிறது.
அமைதிப்படையில் சத்யராஜ் சொல்லுவது போல், “ஓ இன்னொரு பிரச்சனை வந்தா, பழைய பிரச்சனைய மறந்திருவாங்களா?“ என்பதை மனதில் நிறுத்திக் கொண்டு பழைய படங்களின் ஞாபகம் வராத அளவிற்கு பின்னணியில் இசையை இரையவிட்டு, இழுத்துப் போட்டு மடியில் வைத்துத் தாலாட்டி அனுப்புவோம். திரையரங்கை விட்டு வெளியில் வந்ததும் பழைய படங்கள் நினைவுக்கு வந்தால் என்ன, வராவிட்டால் என்ன? படம் ஓடினால் போதும் என்கின்ற சிந்தனை தான் மேலோங்கி இருந்திருக்கும் போல் தெரிகிறது. மக்களின், குறைந்தபட்சத்தின் மீதான ஈர்ப்பை, இயக்குநர்கள் எப்படியோ மோப்பம் பிடித்துவிட்டார்கள்.
எல்லோரும், ‘ஆகா! ஓஹோ!’ என்று புகழும் ஜெயிலர் படத்தின் இடைவேளை காட்சி கூட விவேகம் படத்தில் வரும் காட்சியை சற்றே பட்டி டிங்கரிங் செய்த காட்சி தான். அங்குத் தனியாக நாயகி வில்லன்களுக்கு நடுவில் மாட்டிக் கொள்வார். பின்னர் நாயகியின் வழிகாட்டுதலில் வெளியில் இருந்தபடியே நாயகன் ரெளடிகளை சுட்டுக் கொல்வார். ஜெயிலரில் நாயகனும் வில்லன்களுக்கு நடுவில் வீட்டிற்குள் மாட்டிக் கொள்வார். நாயகன் வழிகாட்ட நாயகனின் கையாட்கள் வெளியில் இருந்தபடியே வில்லன்களைச் சுட்டுக் கொல்வார்கள். இது விவேகம் படத்தின் பொழுதே, புதிய காட்சி என்று சொல்ல முடியாது. கத்தி படத்தை நினைவு கூருங்கள். ஒட்டு மொத்த ரெளடிகளும் விடுதிக்குள் இறங்க, நாயகனின் நண்பன் வழிகாட்ட நாயகன் அனைத்து ரெளடிகளையும் துவம்சம் செய்வார். இந்தக் காட்சி தான் மைய ஆதாரக் காட்சி.
இப்பொழுதெல்லாம் நம் இயக்குநர்கள் கதையை மட்டுமல்ல காட்சிகளையும் உல்டா செய்யத் துவங்கிவிட்டார்கள். விக்ரம் போல் ஒரு கதை வேண்டும் என்று கேட்டவருக்கு, விக்ரமையே ஜெயிலராகக் கொடுத்து, படமும் வெளியாகி, விக்ரம் வாரி குவித்ததைப் போல் வசூலையும் வாரிக் குவித்தாகிவிட்டது. ஆனால், குறைந்தபட்ச கற்பனையோடு வந்த படங்கள் வரிசையில் விக்ரம், ஜெயிலர் மட்டும் இல்லை. பீஸ்ட், அண்ணாத்தயும் உள்ளன. ஆக, நம் மக்கள் எதை எப்போது கொண்டாடுவார்கள், எதை எப்போது தூக்கி எறிவார்கள் என்றே தெரியாது.
மேலும் இந்த ப்ளாக் க்யூமர் வகையறா என்பது, இந்த காமெடி நிகழ்ச்சிகளில் ஏதோவொன்றைப் பேசிக் கொண்டு, ரெக்கார்டர்ட் வாய்ஸில் அவர்களே சிரிப்பையும் போட்டுக் கொள்வார்கள் அல்லவா! அந்த வகைமைக்குள் வரும் என்று நினைக்கிறேன். வில்லன் வர்மனின் மூலம் கடத்தப்படும் சிலைகள் எந்த ரூட்டில் எங்குச் செல்கிறது என்று தெரியாது. இதற்கு என்ன ஐடியா செய்கிறார் நாயகன், காமெடியனை கையில் ஒரு சிலையுடன் நிற்க வைத்து, வண்டியில் இருந்து விழுந்துவிட்டது என்று சொல்லச் சொல்கிறார். இங்கு நாம் சிரிக்க வேண்டும். இதை நம்பி அவர்களும் வண்டியை நிறுத்தி செக் செய்கிறார்கள். இங்கும் நாம் கண்டிப்பாக சிரிக்க வேண்டும். கண்டிப்பாக இதெல்லாம் எப்படிச் சாத்தியம் என்று யோசிக்கக் கூடாது.
‘திருடுவதற்கு நான் என்ன அக்யூஸ்டா? நான் போலீஸ்டா’ என்று சொல்கிறார் நாயகன். ஆனால் அவருக்கு உதவுபவர்கள் எல்லோருமே அக்யூஸ்டுகள். இதில் சிவ்ராஜ்குமார் மட்டும் தப்பித்துக் கொள்கிறார். திருந்தி வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் என்று ஒரு வசனம் வைத்து அவரைக் காப்பாற்றி விடுகிறார்கள். ஆனால் மோகன்லாலுக்கும், ஜாக்கி ஷெராஃபுக்கும் வைத்திருக்கும் காட்சி தான் காலை வாருகிறது. “என் கன்டெய்னர் மேலயே கைய வைச்சிருக்கான். நான் சும்மா விடுவேனா?“ என்று கேட்டு தலையைச் சிதைக்கிறார். ஒரு வேளை கன்டெய்னரில் அநாதை ஆசிரமத்திற்கு அன்னதானம் கொண்டு சென்றிருப்பார் என்று நினைக்கிறேன். எவனோ பசித்தவன் கை வைத்துவிட்டான் போல பாவம். அப்புறம் அத்தனை துப்பாக்கிகளை ரஜினிக்கு கொடுக்கிறார் என்றால் எங்கிருந்து வாங்கி இருப்பார், என்ன தொழில் செய்கிறார்? ஜாக்கி என்னடாவென்றால் வெடிகுண்டு தயாரித்துப் பரிசோதிக்கிறார். ஒரு வேளை குவாரிக்கு குண்டு வைப்பவரோ?
படம் குறித்து எத்தனையோ விளம்பரம் செய்தவர்கள், ‘இப்படத்திற்குள் ஒளிந்திருக்கும் ஒன்பது படங்களைக் கண்டுபிடியுங்கள் பார்ப்போம்’ என்றும் விளம்பரப்படுத்தி இருக்கலாம். அத்தனை படங்களின் துணுக்குகள் உள்ளே ஒளிந்திருக்கிறது.
இப்படி எதிர்மறையான கருத்துக்களையே கூறிக் கொண்டிருந்தாலும், பேரனுடன் விளையாடும் தாத்தா ரஜினி, ஓப்பனிங் பாடல்களோ, டூயட்டோ காதலோ இல்லாத ரஜினி, கடைசி வரை சண்டையே போடாத ஒரு ரஜினி, ஆனாலும் பில்டப்களில் குறை வைக்காத ரஜினியின் காட்சிகள், மகன் தன் நேர்மையால் தான் பலியானான் என்பது தெரியும் போது கண்கலங்கும் சூப்பர் ஸ்டாரின் க்ளாஸிக்கான நடிப்பு, யோகிபாபுவின் பாராதியார் பாட்டும் ஓரிரு டைமிங் காமெடிகள் என ரசிப்பதற்கான இடங்கள் இருந்தாலும், குறைபட்டுக் கொள்வதற்கான இடங்களே அதிகம். அதில் முக்கியமானது கதையும் திரைக்கதையும். எளிதில் யூகிக்கும்படியான காட்சிகள், நேர்கோட்டில் செல்லும் கதை, மகனைக் காப்பாற்ற கொள்ளையடிக்க முடிவெடுக்கும் சுவாரசியமற்ற திருப்பங்கள் ஆகியவை பெரும் பலவீனங்கள்.
ஒரு பெரிய ஹீரோவை வைத்துக் கொண்டு கமர்ஷியல் திரைப்படம் எடுத்து வெற்றி பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் அருகிவிட்டன. உண்மையிலேயே இனி வரும் காலங்களில் பெரிய ஹீரோக்களை வைத்துக் கொண்டு அவர்களுக்கு ஒரு படத்தை எடுத்து ஹிட் கொடுப்பது என்பது அசாத்தியமான காரியம் தான். அதிலும் எந்தப் படத்தின் காட்சிகளோடும் ஒப்புமை இல்லாத காட்சித் தொகுப்புகளை உருவாக்குதல் என்பது அரிதினும் அரிதாகவே நடக்கும் என்று தோன்றுகிறது. ஏனென்றால் ஒரு நாயகனின் படம் என்றதுமே, அது நாயகன் வில்லனுக்கான மோதல் என்ற சுவாரசியமற்ற ஒற்றை முடிச்சுக்குள் விழுந்துவிடுகிறது. இதில் நாயகன் ஆரம்பத்தில் தோற்க வேண்டும், பின்னர் படிப்படியாக ஜெயித்து இறுதியில் வில்லனைச் சங்கறுக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. இதில் நாயகனுக்கு ஒரு பில்டப் சீன், வில்லனுக்கு ஒரு பில்டப் சீன், இருவரும் மோதிக் கொள்ளும் முதல் புள்ளியில் தீப்பொறி பறக்க ஒரு சீன், இது எதிலுமே முந்தைய திரைப்படங்கள் நினைவுக்கு வரக்கூடாது என்பது மிகப் பெரிய சவால் தான்.
இத்தகைய சவால்களை முழுமையாகப் பூர்த்தி செய்யும் படங்கள் தான் ஜெயிக்குமா என்று கேட்டால், அப்படியும் உறுதியாகச் சொல்ல முடியாது. ஏன் தெரியுமா? நம் மக்களின் மனநிலை. கொண்டாட்டத்திற்கு வேறு காரண காரியங்கள் இருந்தால் அதைக் கொண்டாடுவார்கள். கொண்டாட எதுவுமே இல்லாதபட்சத்தில், ‘குறைந்தபட்ச’ படத்தைக் கொண்டாடி தீர்த்துவிடுவார்கள்.
– இன்பராஜா ராஜலிங்கம்
[…] ஜெயிலரை விட பல மடங்கு ஆசுவாசுமளிக்கும் படம். ரஜினி படமாகவும் இருக்கவேண்டும், தனக்குப் புகழை ஈட்டிக் கொடுத்த ஜெய் பீம் படத்தினால் கிடைத்த பிம்பத்தையும் தக்க வைத்துக் கொள்ள முனைந்துள்ளார் இயக்குநர் த.செ.ஞானவேல். ரஜினி படமாக வந்த அளவிற்கு, சமூக நீதி பேசும் படமாக வேட்டையன் உருமாறவில்லை. காரணம், எடுத்துக் கொண்ட கருவினையே அதன் முழுப் பரிமாணத்தைப் பற்றிப் பேச முடியாமல் பூசி மெழுகப்பட்டுள்ளது. நீட் தேர்வு சரியா, தவறா எனும் கேள்விக்குள் செல்லாமல், நீட் பயிற்சி மையத்தில் நிகழும் ஊழலை மட்டுமே மையப்படுத்தி சர்வ ஜாக்கிரதையாக நழுவிக் கொள்கிறது படம். என்கவுன்ட்டர் என்பது மனிதாபிமானமற்ற செயல் எனும் கருத்தாக்கத்திற்குள்ளும் முழுமையாகச் செல்லாமல், போலி என்கவுன்ட்டர்கள் கூடாது என்று ஓரத்திலேயே நின்று ‘ஹே, ஹே’ என்று மட்டும் ஒலியெழுப்பி முடித்துக் கொண்டுள்ளார் இயக்குநர் த.செ.ஞானவேல். இருபது வருடங்களுக்கு முன்பே, மரண தண்டனை கூடாது என எடுத்துக் கொண்ட கருவை அழுத்தமாக, வெளிப்படையாக, கலாப்பூர்வமாக, சுவாரசியமாக விருமாண்டியில் சொல்லியிருப்பார் இயக்குநர் கமலஹாசன். ஆனால் இரண்டு தசாப்தத்திற்குப் பிறகும், ஈயம் பூசினது போலவும் இருக்கவேண்டும், பூசாதது போலவும் இருக்கவேண்டும் என்றுதான் படமெடுக்க முடிகிறது என்றால், கருத்தியல் ரீதியாகவும், கலாரீதியாகவும் தமிழ் சினிமா சந்திக்கும் தேக்கநிலை கவலையளிக்கிறது.’என்கவுன்ட்டர் வேணும்; அதுல போலித்தனம் வேணாம்’ எனும் இயக்குநரின் என்னத்த கண்ணையாத்தனத்தால் வேட்டையன் வைத்த குறி தவறியுள்ளது. […]