Shadow

அடியே விமர்சனம்

பள்ளிக்காலத்தில் தன்னோடு பயிலும் நாயகியிடம் காதலைச் சொல்ல எத்தனிக்கும் நாயகனின் வாழ்க்கை எதிர்பாராத விதமாக திசை மாறிப் போகிறது. பல ஆண்டுகள் கழித்து விரக்தியின் உச்சத்தில் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ள துணியும் தருணத்தில் நாயகி இன்னும் தன் நினைவுகளோடு இருப்பது தெரிய வர, தான் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் இருப்பதாக நினைக்கும் நாயகன், நாயகியைச் சந்தித்து தன் காதலை சொல்ல முனைகிறான். அதற்கு இடையில் நடக்கும் குழப்பங்களை மீறி நாயகனின் காதல் வெற்றி பெற்றதா என்கின்ற கேள்விக்கான விடை தான் திரைப்படத்தின் கதை.

கதையாகப் பார்க்கும் போது, வெகு சாதாரணமான, காதலும், காதல் கைகூடுமா என்கின்ற கேள்வியையும் தவிர்த்து ஒன்றுமே இல்லாத கதையாகத் தோற்றமளிக்கும் ‘அடியே’, அதன் திரைக்கதையினால் வித்தியாசப்படுகிறது. ‘டைம் டிராவல்’ கதைகள் நமக்கு சற்றே பரிச்சயமான கதைகள் தான். அந்த டைம் டிராவல் கதைக்குள் “மல்டி வெர்ஸ்” அதாவது பல்வேறுபட்ட உலகங்கள் ஒரே நேரத்தில் இயங்கிக் கொண்டு இருக்கலாம், அதில் நாமெல்லாம் வேறு வேறு நபர்களாகவோ, அல்லது அதே நபர்களாகவோ, இந்த உலகத்தில் உள்ள அதே சூழ்நிலையிலோ அல்லது வேறுவிதமான சூழ்நிலையிலோ வாழ்ந்து கொண்டு இருக்கலாம் என்பதான மாய கற்பனைவாத மிகையதார்த்த புனைவை உள்ளடக்கி இருப்பது தான் ‘அடியே’ திரைக்கதையின் சிறப்பு.

இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், ‘இன்று நேற்று நாளை’ திரைப்படத்தில் டைம் டிராவல் செய்து நாயகனும் நாயகியும் காலத்தில் பின்னோக்கிப் பயணம் செய்து, நாயகி குழந்தையாகப் பிறந்த மருத்துவமனைக்குச் சென்று பார்ப்பார்கள் அல்லவா? அங்கு நாயகியின் அம்மா அப்பா அனைவருமே இருப்பார்கள். அதே கதை தான். ஆனால் இங்கு இவர்கள் சொல்லும் கூடுதல் தகவல் என்னவென்றால், ‘இன்று நேற்று நாளை’யில் நாயகன் நாயகியின் பின்னோக்கிய பயணம், அவர்கள் வாழும் அதே உலகத்திற்குள் நடந்தது. ஆனால் ‘அடியே’ திரைப்படத்தில் நாயகனின் பின்னோக்கிய பயணம் அவனை ‘மல்டிவெர்ஸ்’ உலகமாகிய அல்டர்னேட் ரியாலிட்டிக்குள் இட்டுச் செல்கிறது.

அதென்ன ‘மல்டிவெர்ஸ்’ அல்லது அல்டர்னேட் ரியாலிட்டி? ‘12 பி’ திரைப்படத்தில், ஷாம் பேருந்தைப் பிடித்துவிட்டால் அவன் காதலியும் வாழ்க்கையும் வேறு, அவன் பேருந்தைத் தவறவிட்டால் அவன் வாழ்க்கையும் காதலியும் வேறு. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு உலகங்கள். பேருந்தைப் பிடித்துவிடும் உலகம் ஒன்று. பேருந்தைத் தவறவிடும் உலகம் வேறொன்று. இந்த இரண்டு உலகங்களும் சேர்ந்தது மல்டி வெர்ஸ். இதற்குள் இன்னும் பல உலகங்கள் இருக்கும். உதாரணத்திற்கு ஒரு மனிதனின் ஒரு நாள் வாழ்க்கையை எடுத்துக் கொள்ளுங்கள். வழக்கமாக அவன் டீ குடிக்கும் கடைக்குச் செல்கிறான்,. அந்தக் கடை திறந்திருந்தால் ஒரு வாழ்க்கை, அது மூடி இருந்து வேறு கடைக்கு அவன் டீ குடிக்கச் சென்றால் ஒரு வாழ்க்கை, அவன் டீயே குடிக்காமல் வீட்டிற்கு மீண்டும் திரும்பி வந்தால் ஒரு வாழ்க்கை. இப்படி மனிதனின் ஒரு நாள் வாழ்வில் செயல்படுத்தப்படும் ஒவ்வொரு செயலும் நடந்தால் ஒரு வாழ்க்கை, நடக்காவிட்டால் ஒரு வாழ்க்கை. இப்படி வேறு வேறு விதமான வாழ்க்கைகள் வேறு வேறு உலகங்களுக்குள் நடந்து கொண்டு இருக்கின்றது என்பதான கற்பனை. இத்தனை உலகங்களை உள்ளடக்கியது தான் MULTIVERSE. ஆனால் இதில் ஒரு வாழ்க்கை மட்டும் தான் உண்மையானது. மற்ற எல்லாமே கானல் நீர் போன்ற மாயையான கற்பனையான வாழ்க்கைகள். அந்த உண்மையான ஒற்றை வாழ்க்கை தவிர்த்து மற்ற எல்லா வாழ்க்கைகளும் அல்டர்நேட் ரியாலிட்டி என்று சொல்லப்படும் வாழ்க்கைகள். இதுதான் ”அடியே” திரைப்படத்தின் மொத்த கான்செப்ட்டும்.

இப்படி மேற்பத்தியில் மேற்கோள் காட்டிய அத்தனை அறிவியல் ரீதியிலான புனைவுகளையும் உள்ளடக்கியது தான் ‘அடியே’. ஆனால் முடிந்தவரை இந்தக் கருத்தாக்கத்தை எந்தவிதக் குழப்பமும் இல்லாமல் திரைப்படத்தில் மிகச் சிறப்பாக கையாண்டிருக்கிறார் இயக்குநர். அவரது சிறப்பான உழைப்புக்கும் சுவாரசியமான திரைக்கதை உத்திக்கும் ஒரு வாழ்த்துக்கள். அந்த அல்டர்னேட் ரியாலிட்டி வாழ்க்கைக்குள் போவதற்காகப் படத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் திரைக்கதை உத்திகள் சிறப்பாக கையாளப்பட்டு இருக்கின்றது. ஒரு கட்டம் வரைக்கும் இத்திரைப்படம் டைம் டிராவல் வகைமைக்குட்பட்ட படம் தானா என்பதையும் சஸ்பென்ஸாக வைத்திருப்பதும் சிறப்பு.

முதன்முறையாக அல்டர்நேட் ரியாலிட்டிக்குள் செல்லும் நாயகனுக்கு அங்கு ஏற்படும் மட்டற்ற மகிழ்ச்சியும், அங்கிருந்து ரியாலிட்டி, அதாவது உண்மையான வாழ்க்கைக்குள் திரும்பி வரும் நாயகனுக்கு ஏற்படும் அதிர்ச்சியும் திரைக்கதையில் உள்ள முக்கியமான திருப்பங்கள். அவை பார்வையாளர்களை நிமிர்ந்து உட்காரச் செய்கின்றன. இப்படி முதல்பாதி எந்தவிதக் குழப்பமும் இல்லாமல் மிக அற்புதமாகவும் விறுவிறுப்பாகவும் நகர்கிறது. இரண்டாம் பாதியின் ஆரம்ப நிமிடங்கள் கூட தனக்கு என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்ள இயலாத ஹீரோ, அதை மீண்டும் நிகழ்த்திப் பார்த்து ஆய்வு செய்து பார்க்கும் நிமிடங்கள் கூட ஓகே தான்.

முதலில் 1000 நிமிடங்கள் பின்னோக்கி செல்லும் போது அல்டர்நேட் ரியாலிட்டிக்குள் அவள் மனைவி. மீண்டும் 9999 நிமிடங்கள் பின்னோக்கி செல்லும் போது அவர்களுக்குள் முதல்முதல் அறிமுகம் ஏற்பட்ட நிமிடங்களில் நாயகன் இருக்கிறான். எனவே மேற்கொண்டு அவர்களுக்குள் என்ன நடக்க வேண்டும் என்பது இயல்பாக நடக்காது. அதை நாயகன் தான் அவன் விரும்புகின்ற பாதையில் திசை திருப்ப வேண்டும். இதனால் நாயகியுடனான நிகழ்வுகளை அவன் மறுஉருவாக்கம் செய்ய முயல்கிறான். இது எல்லாமே ஓகே தான். ஆனால் அதை அவன் ஏன் மறு உருவாக்கம் செய்ய முயல்கிறான்.

ஏனென்றால் எப்படியும் குறிப்பிட்ட நிமிடங்கள் கழித்து அவன் ரியாலிட்டி உலகிற்குள் போய்விடுவான். ஆக, ஹீரோ ரியாலிட்டி உலகத்திற்குள் ஹீரோயினை அடைவதற்கான காரியங்களில் ஈடுபடாமல் அல்டர்நேட் ரியாலிட்டிக்குள் நாயகியை அடைவதற்கான காரியங்களிலேயே கவனம் செலுத்துவது ஏன் என்ற கேள்விக்கு படத்தில் பதில் இல்லை. அல்லது அந்த உண்மை நாயகனுக்குப் புரியவில்லை என்பதற்கான தெளிவான விளக்கங்களும் திரைக்கதையில் இல்லை. ஒரு கட்டத்தில் இதுதான் க்ளைமாக்ஸ் என்று பார்வையாளர்களுக்குத் தெரிந்த பிறகும் கூட கதை நெடுக நீள்வதால் அயர்ச்சி தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.

மேலும் இறுதியில் மொத்த தொகுப்பாகக் கதையைப் பார்க்கும் பொழுது, அவன் அல்டர்நேட் ரியாலிட்டிக்குள் பயணித்ததால் அவனது ரியலான வாழ்க்கைக்குள் எந்த மாற்றமும் பிரச்சனைகளும் ஏற்படவேயில்லை. வெங்கட்பிரபு கதாபாத்திரம் சொல்வது போல், ஏதோ ஓலா பிடித்து ட்ரிப் செல்வது போல் மட்டுமே நாயகன் அல்டர்னேட் ரியாலிட்டிக்குள் பயணித்துத் திரும்பி வருகிறான். படத்தின் மையக்கதையான நாயகன் நாயகியிடம் பள்ளி காலத்தில் காதலை சொல்ல முனைய, பெரும் துயரத்தால் அவன் வாழ்க்கை திசைமாற, தூரமாக நாயகியை விட்டு விலகிப் போகிறான். மீண்டும் காதலி தன் மீது ஈர்ப்புடன் இருக்கிறாள் என்று அறிந்து காதலைச் சொல்ல வரும் போது பல்வேறு தடங்கல்கள். அதை மீறி அவன் காதலைச் சொல்கிறான். இந்தக் கதைக்குள் அல்டர்நேட் ரியாலிட்டி எந்தப் புள்ளியையும் நகர்த்தவில்லை என்பதால் இரண்டும் ஒட்டாமல் தனித்தனிக் கதையாகத் தோற்றம் அளிக்கிறது.

ஒரு காட்சியில் நாயகி பேசுவது போன்ற ஒரு வசனம் வரும். “நான் விட்டுட்டுப் போன அதே இடத்துல தான இருக்கிற” என்று. ஆக்சுவலாக ரியாலிட்டி உலகை விட்டு அல்டர்நேட் ரியாலிட்டிக்குள் போய் வந்த பிறகும் ரியாலிட்டியில் கதை அதே இடத்தில் நிற்கிறது என்பதே உண்மை. மேலும், ‘இன்று நேற்று நாளை’ படத்திலும் இன்னும் சில டைம் டிராவல் படங்களிலும் அந்தக் கருவியை உடைத்துவிட்டாலோ தொலைத்துவிட்டாலோ மீண்டும் நிகழ்கால வாழ்விற்குள் வரமுடியாது என்கின்ற புனைவு இருக்கும். அதுவும் பார்வையாளர்களைக் குழப்பக்கூடும் என்று தோன்றுகிறது. அது ஒரு கற்பனை மட்டுமே. டைம் டிராவல் செய்யும் கருவி தொலைந்தாலோ உடைந்தாலோ நிகழ் உலகிற்கு வர முடியும் முடியாது என்பதில் எது உண்மை என்பது யாரும் அறியாதது. அதை சில கதை சொல்லிகளும் இயக்குநர்களும் கருவி தொலைந்துவிட்டால் திரும்ப வரமுடியாது என்று பயன்படுத்தி இருப்பார்கள். ‘அடியே’ படத்தின் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், ‘அக்கருவி உடைந்தாலும் கூட அந்த நேரம் முடியும் போது, நீ நிஜ உலகத்திற்குள் வந்துவிடுவாய்’ என்று காட்சிபடுத்தி இருக்கிறார். அவ்வளவுதான்.

இவற்றைத் தவிர்த்து புதிய களத்தைத் தேர்ந்தெடுத்த துணிச்சலிற்காகவும், ஒரு புது உலகை வித்தியாசமான ரசிக்க வைக்கும், யோசிக்க வைக்கும் காட்சித் துனுக்குகளுடன் உருவாக்கி திரையில் அதை சாத்தியப்படுத்திய அற்புதமான திறமைக்காகவும் இயக்குநருக்கு வாழ்த்துகள்.

நடிகராக ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு இது சொல்லிக் கொள்ளும்படியான படம் தான். குறிப்பாக அல்டர்நேட் ரியாலிட்டிக்குள், ‘இன்று என் பிறந்தநாள்’ என்று சொல்லி அழும் செந்தாழினியை அள்ளி அணைக்கும் முன் அவர் தனக்குள்ளாக பேசிக் கொள்ளும் உரையாடலிலும், உடைந்து கண்ணீர் சிந்தும் காட்சியிலும் ஒரு மேம்பட்ட நடிகனை நம் கண் முன் நிறுத்துகிறார். அது போக தன் வாழ்க்கையில் என்ன நடக்கிறது, எப்படி நடக்கிறது, ஏன் நடக்கிறது என்கின்ற குழப்பத்துடனும் பதட்டத்துடனும் கூடிய முக பாவனைகளை அற்புதமாக வெளிப்படுத்துகிறார். இன்னும் வருங்காலங்களில் வெளியாகும் திரைப்படங்களில் உள்ளார்ந்த ஒரு நடிகனாக ஜி.வி. ஜொலிப்பதற்கு இப்படம் உரமிட்டிருக்கிறது என்றே சொல்லலாம்.

செந்தாழினியாக நடித்திருக்கும் கெளரி கிஷனுக்கு காட்சிகளாக மிகக் குறைவான காட்சிகளே இருந்தாலும், வரும் காட்சிகள் அனைத்திலும் தூள் கிளப்புகிறார். தன் கணவனைப் புரிந்து கொள்ள முடியாமல் திகைத்துப் போய் உள்ளம் உடைந்து அழும் காட்சிகளில் தன் கைதேர்ந்த நடிப்பால் கண்கலங்க வைக்கிறார். புதுமுக நடிகராக வரும் மதுமகேஷ் ஆச்சரியமான நல்வரவு. நிஜ உலகில் பெண் பித்தனாகவும், பொய் உலகில் தன் மனைவியை நண்பனுடன் பார்த்து பரிதவித்துப் போய் கொந்தளிக்கும் கொடூரமான கணவனாகவும் பல வித்தியாசங்களை தன் நடிப்பில் கொடுக்கிறார்.

படத்தின் ஒட்டுமொத்த கலகலப்பிற்கும் கியாரண்டி கொடுப்பவர் ஆர்.ஜே.விஜய் தான். இவர் ஆங்காங்கே அடிக்கும் டைமிங் காமெடிகள் சந்தேகம் இல்லாமல் அரங்கம் அதிர ஆடியன்ஸைச் சிரிக்க வைக்கிறது. அதிலும் குறிப்பாக சரக்கடித்துக் கொண்டே, ‘வேற உலகமா? இதோ இருபதே நிமிஷம் மச்சி, பாட்டில் காலியாகும் போது நானும் அங்க இருப்பேன்’ என்று எதுவும் புரியாமல் நண்பனிடம் போதையில் பேசுவதும், செந்தாழினியின் ஃபோன் நம்பரில் கடைசி மூன்று இலக்கங்களை சரியாகச் சொல்லிவிட்டு, “என் பொண்டாட்டி நம்பர் எனக்குத் தெரியாதாடா” என்று நாயகன் கேட்கும் போது, “டேய் கடைசி மூனு நம்பர் தெரிஞ்சவள்லாம் பொண்டாட்டி ஆகிருவாளாடா” என்று புலம்பம் இடங்களும் அப்ளாஸ் அள்ளுகிறது.

ஆராய்ச்சி நிறுவன தலைமை அதிகாரியாக வரும் வெங்கட் பிரபுவை விட, இயக்குநர் கெளதம் மேனனாக வரும் வெங்கட் பிரபு அதிகம் கவர்கிறார். ஆடியன்ஸுக்கு இந்த சிக்கலான கதையைப் புரிய வைக்கும் பெரிய வேலையை இயக்குநர் வெங்கட் பிரபு கதாபாத்திரத்திற்குக் கொடுத்திருக்கிறார். அதை அவர் முடிந்த அளவிற்கு சிறப்பாகவும் செய்திருக்கிறார். தலைமை அதிகாரியாக நடிக்கும் போது கம்பீரத்திற்கு பதில் உடல்மொழிகளிலும் வசன உச்சரிப்பிலும் காமெடி இழையோடுவதைத் தவிர்திருக்கலாம்.

இசை மற்றும் பாடல்களாகப் பார்க்கும் போது இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் பெரும் வெற்றி பெற்றிருக்கிறார். இந்த வருடத்தின் மிக அற்புதமான இசை ஆல்பமாக ‘அடியே’ படத்தின் ஒவ்வொரு பாடல்களும் நம்மை மயிலிறகால் தாலாட்டுகிறது. அது தவிர்த்து பின்னணி இசையும் காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது. ஒளிப்பதிவாளர் கோகுல் பினோய் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கிற்கு பக்கபலமாக இருந்து, அவரின் கற்பனைகளைக் கேமராவிற்குள் படம் பிடித்துக் கொண்டு வந்து மிரட்டி இருக்கிறார். சிஜி ஷாட்டுகள் மிக மோசமாக பல்லிளிக்கவில்லை என்பதும் படத்திற்கு மிகப் பெரிய பிளஸ்.

மொத்தத்தில் ஒரு வித்தியாசமான கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்து, அதில் விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து, தொழில்நுட்பத்தின் உதவியுடன் மிகச் சிறப்பாக கதை சொல்ல வேண்டும் என்கின்ற முயற்சியில் இயக்குநர் கண்டிப்பாக ஜெயித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். ரியாலிட்டி மற்றும் அல்டர்நேட் ரியாலிட்டி இரண்டையும் கதைக்குள் ஒன்றெனக் கலக்கும் இடத்தில் சிறிது தொய்வு ஏற்பட்டிருந்தாலும் கூட, அற்புதமான இந்த முயற்சியை வாழ்த்தி வரவேற்கலாம்.

– இன்பராஜா ராஜலிங்கம்