Search

கண்ணகி விமர்சனம்

பெண்ணுக்கு தாலி தான் பாதுகாப்பு என்று சொல்லிச் சொல்லி வளர்க்கப்படும் ஒரு பெண்ணுக்கு அந்த தாலி அவள் எதிர்பார்த்த பாதுகாப்பைக் கொடுக்கவில்லை என்றால் அவளது வாழ்க்கை என்னவாகும் என்கின்ற கேள்விக்கு விடை தேடும் முயற்சியே “கண்ணகி” திரைப்படத்தின் மையக்கரு.

கலை (அம்மு அபிராமி)-க்கு எப்படியாவது ஒரு பெரிய இடத்தில் கல்யாணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று பெரும் சிரத்தையுடன் முயற்சி செய்கிறது கலையின் குடும்பம்.  குழந்தை பிறக்கத் தகுதியில்லை என்பதைக் காரணம் காட்டி வலுக்கட்டாயமாக விவாகரத்து கேட்டு நிற்கும் நேத்ராவின் கணவன் குடும்பம், திருமணமே செட் ஆகாது என்கின்ற எண்ணத்துடன்  லிவிங் டுகெதரில் இருக்கும் நதி கதாபாத்திரம்,  வயிற்றில் கலைக்க முடியாத சூழலில் இருக்கும் நான்கு மாத கருவைக் கலைக்க, தன் காதலனுடன் சேர்ந்து பெரும் போராட்டம் நடத்தும் கீதா கதாபாத்திரம் இந்த நான்கு கதாபாத்திரங்களின் வாயிலாகப் பெண்ணுக்கு வாழ்க்கையில் எது பாதுகாப்பையும் நிம்மதியையும் தரும் என்கின்ற கேள்வியோடு திரைக்கதை பயணிக்கிறது.

கலை கதாபாத்திரத்தில் அம்மு அபிராமி, “ஏ! மாப்ள கார்த்தி மாதிரி இருக்காருடி” என்று வெட்கப்படுவதும், தன் தந்தையிடம் “எத்தனைப் பேரைப்பா என் புருஷன்னு நெனைச்சி முன்னாடி வந்து நின்னு ஏமாற்றது..” என்று எதிரெதிர் முனை உணர்வுகளை  இயல்பாகக் கடத்துகிறார். அதிலும் குறிப்பாக தன் மாமனுடன் சேர்ந்து சரக்கடித்துக் கொண்டிருக்கும் அப்பாவைச் செல்லமாக மிரட்டுவதும், தன் தாயிடம் “பிறந்ததுல இருந்தே அழுகுறனா? என்னத்துக்கு என்ன பெத்துத் தொலைஞ்ச? நானா கேட்டேன்!” என்று தன் தாயிடம் வெடிப்பதுமாக மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.

நேத்ரா கதாபாத்திரத்தில் வித்யா பிரதீப், விவாகரத்துப் பெற விரும்பும் தன் கணவனிடம் இருந்து விவாகரத்துப் பெற விரும்பாத பெண்ணாக அறிமுகமாகி,  வெறுப்பின் உச்சத்திற்குத் தள்ளப்படும் போது, தானே முன் வந்து விவாகரத்து கொடுக்கும் கதாபாத்திரம்.  கணிசமான இடங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார்.  கீதா கதாபாத்திரத்தில் வரும் கீர்த்தி பாண்டியனுக்கு வசனங்கள் பெரும்பாலும் இல்லை.  பெரும்பாலான காட்சிகளில் வயிற்றைத் தள்ளிக் கொண்டு எங்கோ வெறித்த பார்வையுடன் நிற்கும் கீர்த்தி பாண்டியனின் கதை க்ளைமாக்ஸ் காட்சியில் நிறைவைத் தரும் போது வசீகரம் மிக்கதாக மாறுகிறது.  கீர்த்தி பாண்டியனின் கதைக்களம் வரும் போதெல்லாம் ஏன் இவர்கள் பேசிக் கொள்வதோ, சண்டை போட்டுக் கொள்வதோ, எதுவுமே இல்லையே என்று யோசிக்க வைத்து க்ளைமாக்ஸ் காட்சியில் அதற்கான அனைத்துப் பதில்களையும் தந்து முடிக்கிறார்கள். கீர்த்தி பாண்டியன் நிலைகுத்தி நிற்கும் விழிகள் வழியே ஆயிரம் சோகங்களைச் சொல்ல முடியாத வலிகளையும் கடத்துகிறார்.  ஆரம்பத்தில் அவர் மீது நமக்கிருக்கும் கோபம் கதை முடிவை நோக்கிச் செல்லச் செல்லக் கொட்டும் மழையில் கரைந்து காணாமல் போகிறது.

நதியாக வரும் ஷாலினி சோயா ஆர்ப்பாட்டத்துடன் அடாவடித்தனமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்; கீதாவைப் போல் ஆரம்பத்தில் ஆங்காங்கே நம் கோபத்தையும் வெறுப்பையும் சம்பாதித்து புரியமுடியாத புதிராக இருக்கும் நதி, அதன் ரிஷிமூலம் தெரியும் போது புண்ணிய தீர்த்தமாக மாறுகிறது. “ஒரே ஒரு ரீசன் சொல்லு….” என்று கேட்கும் போதும், அடிபட்ட காலுக்குக் கட்டுப் போட்டுக் கொண்டு டெஸ்கின் மீது காலைத் தூக்கி வைத்து மீண்டும் அமரும் போதும், ‘அம்மா ங்கொம்மான்னுக்கிட்டு, ஏண்டா ஒருத்தனும் ஒங்கப்பா மாதிரி பாத்துப்போம்னு சொல்ல மாட்டேங்குறீங்க..’ என்று வெடிக்கும் போது ஷாலினியின் நடிப்பு ஷார்ப்.

இவர்களைத் தவிர்த்து கலையின் அம்மா கதாபாத்திரத்தில் வரும் மெளனிகாவும், அப்பா சங்கர் அய்யாவாக வரும் மயில்சாமியும் தங்கள் அனுபவமிக்க நடிப்பால் அசரடிக்கிறார்கள். அதிலும் மெளனிகா தன் மகளுக்குத் திருமணம்  முடிக்க முயலும் ஒரு சராசரி அம்மா கதாபாத்திரத்தை அப்படியே நம் கண் முன் நிறுத்துகிறார். அவர் தன் கணவனாக வரும் மயில்சாமியை எடுத்தெறிந்து பேசும் ஒவ்வொரு இடத்திலும் நம் வசைகளை வஞ்சனையின்றி வாங்கிக் கட்டிக் கொள்ளும் அளவிற்கு அந்தக் கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். மயில்சாமி தன் மகள் கலையுடன் உரையாடும் ஒவ்வொரு காட்சியிலும், ‘இப்படி ஒரு அப்பா தான் வேண்டும்’ என்னும் பல்வேறு மகள்களின் கனவிற்கு உயிர் தருகிறார்.

ஆண் கதாபாத்திரத்தில் வக்கீல் சசியாக வரும் வெற்றியின் கதாபாத்திரம் ஓரளவிற்கு யூகிக்கக்கூடிய தன்மையுடன் தான் இருக்கிறது. அபியாக நடித்திருக்கும் அதேஷ் சுதாகருக்கு காதலிப்பதும், லிவ்விங்கில் இருப்பதையும் தவிர்த்து பெரிய பணிகள் இல்லை. இருப்பினும் மண்டியிட்டு தன் காதலை வெளிப்படுத்தி அது புறக்கணிக்கப்பட்ட வலியை உடலில் சுமக்கும் போது கவனிக்க வைக்கிறார். யஷ்வந்த் கிஷோராகவே நடித்திருக்கும் இயக்குநர் அதிகம் பேசாத கீதா கதாபாத்திரத்திற்கு ஜோடியாக வந்தாலும், அழுத்தமான முக பாவங்கள் மூலம் கீதா- யஷ்வந்த் கதையை அழுத்தமான பல கேள்விகள் கொண்ட கதையாக மாற்றுகிறார். அந்தக் கேள்விகளுக்கான விடை நமக்கு கிடைக்கும் போது நம் கண்களும் பனிக்கின்றன.

ஷான் ரகுமானின் இசை படத்திற்கு ஒருவித துல்லியத்தன்மையையும், ஒரு விதமான புதிர் தன்மையையும் ஒருங்கே கொடுக்கிறது.  ராம்ஜியின் ஒளிப்பதிவு ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொருவிதமான அனுபவத்தைக் கொடுத்து கதையோடு நம்மை ஒன்ற வைக்கிறது.  சரத்தின் படத்தொகுப்பு, கதையின் புதிர்தன்மை கெடாதவாறு ஒருங்கிணைந்து வெவ்வேறு காலகட்ட கதைகளைக் குழப்பமின்றிச் சொல்வதற்கு உதவி இருக்கிறது. E 5 எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்கை மூன் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக எம்.கணேஷ் மற்றும் ஜே.தனுஷ் இப்படத்தைத் தயாரித்து இருக்கிறார்கள்.  யஷ்வந்த் கிஷோர் எழுதி இயக்கியதோடு மட்டுமின்றி ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார்.

கதையாகப் பார்த்தால் ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பு ஆணுடனான திருமணம் என்று கருதி திருமண பந்தத்திற்குள் வரும் ஒரு பெண் அந்தப் பாதுகாப்பும் அரவணைப்பும் மறுக்கப்படும் போது எதை நோக்கிப் போகிறாள்,  அவளின் வாழ்க்கை என்னவாகிறது என்பதை நான்கு கதைகளின் வாயிலாகப்  பேசி இருக்கிறது. இருப்பினும் அப்பெண் தனக்கான மீட்பை மீண்டும் ஒரு திருமணம் மூலமோ அல்லது ஒரு ஆண் துணை மூலமோ பெற்றுக் கொள்கிறாள் என்கின்ற ஒருவித நகை முரணுடன் கதை முடியும் போது, ஒட்டுமொத்தமாக இக்கதை சொல்ல வருவது தனக்கான ஆண் துணையைத் தேர்வு செய்வதில் பெண் அதீத கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதாகத் தான் நிலைபெறுகிறது.

கீதா யஷ்வந்த் கதையும், நதி – அபி கதையும் க்ளைமாக்ஸில் முடிவடையும் போது அந்தக் கதைகளுக்கான நியாயத்தையும் முழுமையையும் கொண்டு முடிவடைந்தாலும் கூட, திரைக்கதை போகின்ற போக்கில் அக்கதைகள் மீது பெரிய ஈர்ப்பு ஏற்படாததும், அக்கதைகளின் புதிர் தன்மையால் பெரும் குழப்பமும் எரிச்சலுமே அக்கதைமாந்தர்கள் மேல் ஏற்படுவதும் கதைக்கு பலவீனமாக முடிந்துவிடுகிறது.  கதை எதைப் பற்றியது என்பதும், இந்த நான்கு பெண்களுக்குமான தொடர்பு என்ன என்பதற்குமான சின்னச் சின்ன குறியீடுகள் சந்தேகத் தொனியில் ஆங்காங்கே திரைக்கதையில் இடம் பெற்று இருப்பது இயக்குநரின் புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது.

தனது முதல் படத்திலேயே காத்திரமான கதைக்களத்தை எடுத்துக் கொண்ட இயக்குநர், பெண் கதாபாத்திரங்களை வலுவாக அமைத்திருப்பது கதைக்குப் பெரும் பலம் சேர்க்கிறது. இருப்பினும் புதிர்தன்மை கொண்ட திரைக்கதையும், கதைமாந்தர்களின் மாய பிம்பங்களும், அயர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஒருங்கே கொடுக்க, கதை சொல்ல வந்த புள்ளியின் மையம் இன்னும் ஆழமாகச் சொல்லப்படாததும் திரைக்கதையின் பலவீனமாக மாறுகிறது.

இருப்பினும் யஷ்வந்த் கிஷோரின் “கண்ணகி” என்னும் இந்த சீரிய முயற்சி பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியது என்பதோடு, தமிழ் சினிமாவில் முக்கியமான, பேசப்படாத, அல்லது பேசத் துணியாத கருப்பொருளையும் கொண்டு இருப்பது தனிச்சிறப்பு. அந்த தனிச்சிறப்பிற்காகவும் வலிமையான பெண் கதாபாத்திரங்களுக்காகவும், மாற்றுச் சிந்தனையுடன் கூடிய திரைக்கதைக்காகவும் “கண்ணகி” போற்றுதலுக்குரியவளாகிறாள்.

– இன்பராஜா ராஜலிங்கம்