Shadow

KISC | Be Fast – பக்கவாதத்திற்கான ஒருங்கிணைந்த மையம்

சென்னை ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவனை, பக்கவாதம் மற்றும் பெருமூளையின் இரத்த நாளங்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண, நவீன ஒருங்கிணைந்த பக்கவாதம் மையத்தைத் (KISC – Kauvery Integrated Stroke Centre) தொடங்கியுள்ளது.

பக்கவாதம், அல்லது மூளை தாக்குதல், என்பது உடல் இயக்கமின்மைக்கும், மரணத்திற்குமான பொதுவான காரணங்களில் ஒன்றாகும். சராசரியாக நான்கு பேரில் ஒருவர் என்ற சதவிகிதத்தில், ஏதோ ஒரு கட்டத்தில் இந்நோயால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று உலக பக்கவாதம் அமைப்பு கூறுகிறது. ஒவ்வொரு 40 நொடிகளுக்கும் ஒருவர் மூளை தாக்குதலால் பாதிக்கப்படுகின்றனர். பக்கவாதத் தாக்குதலுக்கு ஆட்பட்டு, அதன் பின்விளைவுகளால் 10 கோடியே 10 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வருடத்திற்கு 1 கோடியே 22 லட்சம் பேர் புதிதாகப் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 14 கோடியே 30 லட்சம் பேர் பக்கவாதத்தினால் உயிரை இழக்கின்றனர்.

நரம்பியல் குழு வழிகாட்டியும், ‘தி இன்ஸ்டியூட் ஆஃப் ப்ரெயின் & ஸ்பெயின்’ இயக்குநருமான மருத்துவர் கிரிஷ் ஸ்ரீதர், “ஸ்ட்ரோக் என்றால் ஹார்ட் அட்டாக் இல்லை. ப்ரெயின் அட்டாக். முன்பு இது அரிதாக வரக்கூடிய ஒன்றாக இருந்து. ஆனால் இப்போது ஹார்ட் அட்டாக் போல் இதுவும் பரவலாகிவிட்டது. மூளைக்குச் செல்லும் இரத்த நாளங்களில் தடை ஏற்படும் பொழுதோ (Acute Ischaemic Stroke), அல்லது மூளையில் இரத்தப்போக்கு ஏற்படும் பொழுதோ (Haemorrhagic Stroke) பக்கவாதம் ஏற்படலாம். இந்த இரண்டு நிகழ்வுகளிலுமே, அறிகுறிகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருக்கும். தற்போதுள்ள நவீன வசதிகளின் மூலமாக, பக்கவாதத்தைக் குறைக்கவோ அல்லது பழையநிலைக்கு மாற்றியமைக்கவோ முடியும் என்பதால், நோயாளி விரைவில் பக்கவாதம் மையத்தை அடைவது மிகவும் அவசியம். அதனால் உயிர்கள் காப்பாற்றப்படலாம் மற்றும் இயலாமை (disability) குறைக்கப்படலாம். ஆனால், இதில் மிக முக்கியமானது நோயாளிகள் சரியான நேரத்திற்குப் பக்கவாதத்திற்கான சிறப்பு மையத்தை அடைய வேண்டும். ஏனெனில், தாமதிக்கப்படும் ஒவ்வொரு நொடிக்கும் 30,000 மூளை செல்களும், தாமதிக்கப்படும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 2 மில்லியன் மூளை செல்களும் இறக்கின்றன” என்றார்.

மேலும், “ ‘தி இன்ஸ்டியூட் ஆஃப் ப்ரெயின் & ஸ்பெயின்’ மையம் தொடங்கப்பட்டு ஒரு வருடமே ஆகிறது. நோயாளிகளுக்கு இங்க்கே சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், WSO ஏஞ்சல்ஸ் விருதுகள் மதிப்புமிக்க தங்க அந்தஸ்த்தினை இம்மையத்திற்கு வழங்கியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த ஓராண்டில் 150 பேருக்கு ஸ்ட்ரோக்கிற்கான சிகிச்சையை வெற்றிகரமாக வழங்கியுள்ளோம்” என்று கூறியவர், தங்களிடம் சிகிச்சை பெற்று பக்கவாதத்தில் இருந்து மீண்டவர்களை மேடைக்கு அழைத்து, தங்களை நம்பியதற்கு நன்றி நவின்று கெளரவித்தார் மருத்துவர் கிரிஷ் ஸ்ரீதர்.

KISC பற்றி மருத்துவர் கிரிஷ் ஸ்ரீதர் கூறுகையில், “நாம் இதில் முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியது, ‘மேம்பட்ட’ மற்றும் ‘ஒருங்கிணைந்த’ மருத்துவ வசதிகளையே! பல பக்கவாதம் மையங்கள் இருந்தாலும், மிகச் சிலவற்றிலேயே, எல்லா மருத்துவப் பிரிவுகளையும் ஒருங்கிணைக்கும் வசதியுள்ளன. காலத்தின் அவசியத்தினை உணர்ந்து, எத்தகைய தடையுமற்ற மருத்துவ வசதிகளை ஒருங்கிணைத்து, நோயாளிக்கு மிகச் சிறப்பான மருத்துவச் சேவையை அளிக்கிறோம். அவசரகால முதலுதவி அறையில் இருந்து (ER), ரேடியாலஜி முதல் நரம்பியல், நரம்பியல் ICU, நியூரோ இன்டர்வென்ஷன், நியூரோ OT மற்றும் இறுதியாக நியூரோ ரீஹாபிலிட்டேஷன் என ஓர் இலகுவான நெறிமுறை அடிப்படையிலான நிர்வாகத்தை உறுதி செய்கிறது KISC இன் பக்கவாதம் மேலாண்மை. இது, தற்போது உலக பக்கவாதம் அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. KISC இல், தொழில்நுட்பம், அனுபவம் வாய்ந்த, நிபுணத்துவம் மிக்க, மிக முக்கியமாக, பக்கவாதம் மேலாண்மையில் சிறந்த முடிவுகளை அடைவதற்கான மருத்துவக் குழு உள்ளது” என்றார்.

பக்கவாதம் வராமல் தடுக்கும் வழிமுறைகள் பற்றிக் கேள்வியெழுப்பப்பட்ட பொழுது, “எல்லாப் பிரச்சனைகளுக்கும் சொல்லப்படுவது போல், ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மூலமாகத்தான் இதைத் தவிர்க்க இயலும். நீரிழிவு நோய், இருதய பிரச்சனை போன்று ஸ்ட்ரோக் பரம்பரை நோய் இல்லை. ஆனால், பரம்பரையாக வரும் அத்தகைய நோயின் தாக்கத்தால் ஸ்ட்ரோக் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. உடற்பயிற்சி, ஆரோக்கியமான சத்துமிக்க உணவுகள், புகை, மதுவைத் தவிர்த்தல், உடற்பருமன் ஏற்படாமல் கவனமாக இருத்தல் எனப் பொதுவான வழிமுறைகளே போதும். இப்பொழுது, மொபைலில் ‘ஸ்ட்ரோக் ரிஸ்கோமீட்டர் (Stroke Riskometer)’ எனும் செயலியின் (App) மூலமாக, நீங்கள் ஸ்ட்ரோக் வருவதற்கான ரிஸ்க்கைத் தெரிந்து கொள்ளலாம்” என்றார்.

கொரோனோ தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ஸ்ட்ரோக் வருவதற்கான வாய்ப்புகள் கூடுதல் எனச் சொல்லப்படுகிறதே என்று கேட்டதற்கு, “கொரோனோவால் பாதிப்படைந்தவர்களுக்குத்தான் கூடுதல் வாய்ப்பு என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி காரணமில்லை. கொரோனோ வைரஸின் தாக்கத்தால் இருதய நோயும், ஸ்ட்ரோக்கும் வருகிறதே அன்றி தடுப்பூசி காரணம் இல்லை” என்று அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்தார் மருத்துவர் கிரிஷ் ஸ்ரீதர்.

ரேடியல் சாலையில் உள்ள காவேரி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநரான அனில் BG, “பக்கவாத நோயாளிகளுக்கு, ஒரே ஒரு நொடி தாமதம் கூட மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். பக்கவாத அறிகுறிகள் தோன்றிய 60 நிமிடங்களுக்குள், அல்லது 24 மணி நேரத்திற்குள்ளாகவாவது அவர்கள் இங்கு கொண்டு வரப்பட்டால், காவேரி ஒருங்கிணைந்த பக்கவாதம் மையத்தில் உள்ள குழுவினர், பக்கவாதத்தில் இருந்து பழையநிலைக்கு நோயாளிகளை மீட்டெடுக்கவும், சிறந்த சிகிச்சையை அளிக்கவும் சேவை செய்கிறார்கள். ஒரு மேம்பட்ட நவீன பக்கவாதம் மையமாக, சர்வதேச தரத்திலான பராமரிப்பு மற்றும் தடையற்ற, ஒருங்கிணைந்த மருத்துவ அணுகுமுறையின் மூலம் அவர்களுக்குச் சிறந்த சிகிச்சையை நாங்கள் வழங்குகிறோம்” என்றார்.

சென்னை ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனை, ஒரு முன்னணி சுகாதார நிறுவனமாகும். நரம்பியல், இருதயவியல், இரைப்பை குடல், பெண்கள் மற்றும் குழந்தை நலம், எலும்பியல், மூட்டு புணரமைப்பு, சிறுநீரகம், சிறுநீரகம் முதலிய சிறப்புப் பிரிவுகளில், மேம்பட்ட மருத்துவமும், அறுவை சிகிச்சை வசதியும் வழங்குகின்றது. பிரத்தியேக நிபுணர்கள் குழு, 50+ கிரிட்டிக்கல் கேர் படுக்கைகள், 20+ NICU படுக்கைகள், 7+ ஆபரேஷன் தியேட்டர்கள், ஒரு மேம்பட்ட கேத் லேப், 3T MRI மற்றும் 4K + 3D நரம்பியல் நுண்ணோக்கி, உறுப்பு மாற்று சிகிச்சை வசதிகள், 24/7 டயாலிசிஸ் பிரிவு போன்ற அதி நவீன வசதிகளின் மூலம் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சேவையை, உலகம் முழுவதும் உள்ள நோயாளிகளுக்கு வழங்குகின்றது.