Shadow

கருப்பன் விமர்சனம்

Karuppan movie review

மாடு அணையும் முரட்டு வீரனான கருப்பனுக்குத் தன் தங்கை அன்புச்செல்வியைத் திருமணம் செய்து வைக்கிறார் மாயி. கண் பார்வையற்ற கருப்பனின் தாயை அன்புச்செல்வி பிரியமாகப் பார்த்துக் கொள்வதால், படிப்பறிவுள்ள தன் பணக்கார மனைவி மீது ஓவர் காதலுடன் இருக்கிறார் படிக்காத ஏழை கருப்பன். அன்புச்செல்வியை ஒருதலையாகக் காதலிக்கும் கதிர் அவர்களைப் பிரித்து விடுகிறான். கருப்பன் மீண்டும் தன் மனைவியுடன் எப்படிச் சேர்ந்தார் என்பதே படத்தின் கதை.

வீரம், காதல், வஞ்சம், பிரிவு, துக்கம், சுபம் என கதை ஓட்டம் மிக எளிமையாகவும் பரீச்சயமாகவும் இருக்கிறது. அதனை மீறி சுவாரசியப்படுத்துவது படத்தின் கதைமாந்தர்கள் தான். சிங்கம்புலியைக் கூட ரசிக்கும்படி திரையில் உலவ விட்டுள்ளதே இயக்குநர் பன்னீர் செல்வத்தின் வெற்றி. குடித்து விட்டு எம்.ஜி.ஆர். பாடல்களுக்கு சிங்கம்புலியுடன் ஆட்டம் போடும் காட்சி சூப்பர். அது அப்படியே நீண்டு, ‘ஆலுமா டோலுமா’ பாடலுக்கு வம்பிழுப்பவர்களை அடித்துத் துவம்சம் செய்வதும் அருமையாக உள்ளது. பெரிய மீசையோடு கிராமாத்தானாக வரும் விஜய் சேதுபதி ரசிகர்களைக் கவர்வது உறுதி. காட்சிகளை உயிர்ப்புடன் நகர்த்த சக்திவேலின் ஒளிப்பதிவு உதவியுள்ளது.

பாபி சிம்ஹாவிற்கு இறைவி படத்தில் கிடைத்த அதே கதாபாத்திரம். கிட்டத்தட்ட கதையும் அவ்வாறே பயணிக்கிறது. ஆனால், இப்படம் சுபம் என்பதுதான் வித்தியாசம். இறைவி போல் குழப்பமான காதாபாத்திரம் இல்லாததால், வில்லத்தனத்தை முழு வீச்சில் காட்டக் கிடைத்த பொன்னான வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தியுள்ளார். 

விஜய் சேதுபதி மாடு அணையும் காட்சிகளை இமானின் பின்னணி இசையோடு பார்க்க அசத்தலாய் உள்ளது. விஜய் சேதுபதியின் ரொமான்ஸ் திகட்டுமளவு தூக்கலாய் உள்ளது. அவர் பேசும் ஆங்கிலம் ரசிக்க வைக்கிறது. அவருக்கு ஈடு கொடுத்து செமயாக நடித்துள்ளார் தான்யா. படத்தின் அத்தனை கதாப்பாத்திரங்களுமே மிக இயல்பான குணாதிசயத்தோடு இருப்பது சிறப்பு. மாயியாக நடித்துள்ள பசுபதி, வில்லன் கதிராக வரும் பாபி சிம்ஹா, அவருக்குத் துணை புரிய ஒத்தோதும் தவசி என கதாபாத்திர தேர்விலேயே இயக்குநர் பன்னீர் செல்வம் வாகை சூடி விடுகிறார்.

ரத்தம் பார்த்தே அரத பழசாய் படம் முடிந்தாலும், கருப்பன் நிறைவையும் கொண்டாட்டமான மனநிலையையும் தரத் தவறவில்லை.