Shadow

கொலைகாரன் விமர்சனம்

kolaigaran-movie-review

நல்லதொரு த்ரில்லருக்கான நம்பிக்கையை ஏற்படுத்தும்விதமாக படத்தின் ட்ரெய்லர் அமைந்திருந்தது. அர்ஜுனும், விஜய் ஆண்டனியும் இணைந்திருக்கும் முதற்படம் என்பது எதிர்பார்ப்பைக் கூடுதலாக்கியது.

ஒரு கொலை ஒன்று நடக்கிறது. ஒருவர் கொலைக்குப் பொறுப்பேற்று காவல்துறையில் சரணடைகிறார். அவர் தான் அந்தக் கொலையைப் பண்ணினாரா, ஏன் சரணடைந்தார் என்ற காவல்துறையின் விசாரணைதான் படத்தின் கதை.

புலனாய்வு மேற்கொள்ளும் காவல்துறை அதிகாரி கார்த்திகேயனாக அர்ஜுன் நடித்துள்ளார். தான் தான் கொலையாளி என ஒருவர் சரணடைந்த பின்பும், வழக்கில் ஏதோ இடறுவதாக அதை நூல் பிடித்து முடிக்க நினைக்கும் அவரது தீவிரம் ரசிக்க வைக்கிறது. இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் என்றாலும், அர்ஜுனின் பாத்திரமே முதன்மை நாயகனாக மனதில் பதிகிறது. சமய சந்தர்ப்பங்களால் நல்லவன் ஒருவன், ஒரு கொலையைச் செய்துவிட்டாலும், அவனைச் சட்டப்படி தண்டிப்பதா அல்லது மனசாட்சிபடி விட்டுவிடுவதா என்ற குழப்பத்திற்கு, அவர் எட்டும் தீர்மானம் ரசிக்க வைக்கிறது.

நாயகியின் எதிர்வீட்டுக்காரர் பிரபாகரனாக விஜய் ஆண்டனி நடித்துள்ளார். தான் உண்டு, தன் வேலையுண்டு என்று, முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டிடாத கதாபாத்திரத்திற்கு வழக்கம்போல் கச்சிதமாகப் பொருந்துகிறார். அர்ஜுனும், விஜய் ஆண்டனியும் பேசிக் கொள்ளும் காட்சிகளின் கனத்தைக் கூட்டியிருக்கலாம். சுவாரசியமான வசனங்களின் தேவையும், அதற்கான இடமும் காட்சிகளில் இருந்தும் கூட, அதைப் பூர்த்தி செய்யாதது மிகப் பெரும் குறை.

தாரணியாக ஆஷிமா நர்வால். தமிழில் இது அவருக்கு முதற்படம். முதற்படத்திலேலே அழுத்தமாய் தன் நடிப்பை வெளிப்படுத்தும் வாய்ப்புள்ள பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு அம்மாவாக சீதா நடித்துள்ளார். இருவரும் சேர்ந்து, வீட்டுக்குள் அத்துமீறி நுழைபவரை எதிர்க்கும் காட்சிகளாக நன்றாக உள்ளது. அக்காட்சிகள், அர்ஜுனின் பார்வையில், ‘என்ன நடந்திருக்கும்?’ என்ற யூகத்தில் நடப்பது. படம் இப்படியாக, பல அடுக்குகளாய், முன்னும் பின்னுமாய் நகர்ந்து ஆட்டம் காட்டுகின்றன. திரைக்கதையின் முடிவில் எல்லாவற்றிற்குமான விடைகள் சரியாகச் சொல்லப்பட்டவிட்டாலும், படத்தின் முதற்பாதியில் பார்வையாளர்களுக்கு எந்தப் பிடியும் கிடைக்காமல் அநியாயத்திற்கு அலைகழிக்கப்படுகின்றனர்.

த்ரில்லர் படத்திற்கான மூடைச் செட் செய்வதில் சைமன் K.கிங்கின் பின்னணி இசையும், முகேஷின் ஒளிப்பதிவும் மிகப் பெரும் பங்கு வகித்துள்ளன. வியாசர்பாடியில் நடக்கும் இரவு நேரச் சண்டையில், உபயோகப்படுத்தப்பட்டுள்ள சிவப்பு கலர் டோன் லைட்டிங் இரவைப் பளிச்சிடச் செய்து ரசிக்க வைக்கிறது. அந்த இடத்தை நோக்கி விஜய் ஆண்டனி நடக்கும் பொழுது வைத்துள்ளா கேமிரா ஆங்கிளும் தனித்து மனதில் பதிகிறது. அடுத்து என்ன, அங்கு என்ன நடக்கப் போகிறது என்ற ஆவலை அக்காட்சியில் திரைக்கதை ஏற்படுத்த தவறுவதாலோ என்னவோ, முகேஷின் ஃப்ரேம் மனதில் பச்சக்கென ஒட்டிக் கொள்கிறது.

முதல் ஃப்ரேமிலேயே படத்தின் கதை தொடங்கிவிடுகிறது. படத்தின் கால அளவும் 110 நிமிடங்களே! ரிச்சர்ட் கெவினின் படத்தொகுப்பு மிகக் கச்சிதம். ஆனாலும் காட்சிகள் தெளிவில்லாமல் கட் ஆவதாலும், காட்சிகளுக்கு இடையேயான ட்ரான்சிஷன் கோர்வை இல்லாமல் ஜம்ப் ஆவதாலும், படத்தின் தொடக்கம் முதலே படத்தோடு பயணிக்க முடியவில்லை. நிறைவான க்ளைமேஸ் என்பதால் படத்தின் முதற்பாதி பாதிப்புகளை மறந்துவிட முடிகிறது. கொலையாளி யார் என்பதை மட்டும் கடைசி வரை நீட்டிக்காமல், கொல்லப்பட்டது யாரென்பதையும் கூடக் கடைசி வரை இழுத்துப் பிடித்துள்ளார் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ்.