ஒருவழியாக எண்ணற்ற இடைஞ்சல்களைக் கடந்து படம் வெளியாகிவிட்டது. அந்தப் படம் வெளியாக எவ்வளவு சிக்கல்களை எதிர்கொண்டதோ அதே அளவு சிக்கல்கள் படத்தின் மேக்கிங்கிலும் உள்ளது.
ஒரு ஹாலிவுட் படம் போல் ரம்மியமாக ஓப்பன் ஆகிறது. அரண்மனைக்கு நிகரான அழகான பெரிய மாளிகை, மிக அற்புதமான புல்வெளியும் உயரமான மதில் சுவர்கள், வெள்ளைக்கார வேலைக்காரப் பெண்மணி, ரசனையான ஒளிப்பதிவு என மிக அட்டகாசமாகப் படம் தொடங்குகிறது. பின் வாய்ஸ்-ஒவரில், நயன்தாரா யார், அவர் ஏன் இங்கிலாந்து வருகிறார் என வாய்ஸ்-ஓவரில் கதை சொல்கின்றனர். பின் அதே கதையை, விஷுவலாகவும் கூறியது கூறலாகச் சொல்லத் தொடங்குகிறார்கள். அதையும் கொட்டாவி வர வைக்குமளவு அசமந்தமான காட்சிகளால் காட்டுகின்றனர்.
சுஜாதாவின் நாவலான கொலையுதிர் காலத்திலிருந்து, இரண்டு சம்பவங்கள் மெலிதாக ஒத்துப் போகிறது. மரத்தின் பின்னால் தெரியும் ஓர் உருவமும், ஒரு பெண்ணின் பெயரில் சொத்து எழுதி வைக்கப்படும் விஷயமும். மத்தபடிக்கு, ஓர் அமெச்சூர் கொலைக்காரன் துரத்த, நயன்தாரா அப்பெரிய மாளிகையின் ஒவ்வொரு அறையாகச் சுற்றிப் பார்க்கிறார். நயன்தாராவால் பேசவும் கேட்கவும் முடியாது. பேச முடிந்து, கேட்க முடிந்தவராக இருந்தாலும் அந்தக் கதையில் எந்தப் பெரிய மாற்றமும் இருக்காது.
ஆறரை அடி உயரத்தில் ஒரு கொலைக்காரன். நாய்களையும், பிரதாப் போத்தனையும் சட்டெனக் கொன்றுவிடும் அக்கொலைக்காரர், பின் வென்ணெய் வெட்டக் கூட லாயக்கற்றவராக உருமாறி விடுகிறார். இரவு முழுவதும் சுற்றிச் சுற்றி வந்து பார்வையாளர்களைக் கடியேற்றுகிறார். நயன்தாரா கண்களில் மிரட்சியோடு அங்கேயும் இங்கேயுமாக ஓட, ‘ஷ்ஷ்ப்பாஆஆ’ என பார்வையாளர்கள் சலித்துக் கொள்கின்றனர். கொலைக்காரன் பயமுறுத்துவது போல் ஏதாவது செய்ய முனைந்தாலோ, நயன்தாரா தப்பிக்க ஏதாவது செய்தாலோ, பார்வையாளர்கள் சிரிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். பாவம் அவர்களும் என்ன தான் செய்வார்கள்? இயக்குநர் சக்ரி டோலட்டியால், படத்தை த்ரில்லர் படமாகக் கொண்டு போக முடியாததைப் பார்வையாளர்கள் உணர்ந்து, காமெடிப் படமாகப் பார்க்கத் தொடங்கிவிடுகிறார்கள்.
இவ்வளவு நேரம் சீரியஸாகப் படத்தைக் கொண்டு போய்விட்டோம், க்ளைமேக்ஸில் காமெடி ட்விஸ்ட் வைக்கலாமென இயக்குநர் நினைத்து ஒரு சீன் வைக்க, அதுவரை சிரித்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள் கடுப்பாகி சீரியசான முகத்துடன் அரங்கத்தை விட்டு வெளியறுகிறார்கள். பார்வையாளர்களின் பொறுமையை உதிர்க்கும் இந்தக் கதையை, இயக்குநரோடு இன்னும் இருவர் இணைந்து எழுதியுள்ளனர். அடேங்கப்பா.!