Shadow

இலக்கியத்தில் கிருஷ்ணன் நம்பியின் இடம்!

Krishnan-Nambi-in-Literature

ஜூன் 16 ஆம் நாள் மறைந்த எழுத்தாளர் கிருஷ்ணன் நம்பியின் நினைவு தினம். 1976 இல் மறைந்த இவரது நினைவுகளைக் கடந்த சில வருடங்களாக இதுதமிழ் தளத்தில் பகிர்ந்து வருகிறேன். சொல்வதற்கு ஏராளமாக இருந்தாலும், என்னுள் இருக்கும் சில மனக்குறைகளை இக்கட்டுரையின் வாயிலாக இப்பொழுது பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகிறேன்.

ஒருமுறை எழுத்தாளர் திலீப் குமாருடன் பேசிக் கொண்டிருந்த பொழுது, தமிழ் எழுத்துலகில் மிகவும் குறைந்த மதிப்பீடுகளுக்கு உள்ளானவர் கிருஷ்ணன் நம்பி என வருந்திச் சொன்னார்.

மதிப்பீடு செய்த சில எழுத்தாளர்களும் நம்பியைச் சரியாக மதிப்பீடு செய்தார்கள் எனச் சொல்லமுடியாது. அந்த எழுத்தாளர்கள் வரிசையில் வண்ணநிலவன், அசோகமித்திரன் போன்றவர்களைச் சொல்லலாம்.

சுந்தர ராமசாமி, நம்பியின் மிக அணுக்க நண்பராக இருந்தும் கூட, நம்பியின் சிறுகதைகள் பற்றிய அவரது விமர்சனங்கள் ஏமாற்றத்தையே அளிக்கிறது. இந்த மூவரில், அசோகமித்திரனும் சுந்தர ராமசாமியும் நம்பியுடன் நெருங்கிப் பழகியவர்கள். வண்ணநிலவன் அப்படியல்ல.

ஆனால், நம்பியை நேரில் அறியாமல் எழுத்தின் வாயிலாகவே அறிந்து வைத்திருக்கும் பல்வேறு எழுத்தாளர்களையும் நம்மால் அடையாளம் காட்டமுடியும்.

‘ஸ்நேகா’ பதிப்பகத்தார் நம்பியின் 19 சிறுகதைகளை உள்ளடக்கி, கிருஷ்ணன் நம்பி கதைகள் என ஒரு புத்தகத்தை 1995 இல் வெளியிட்டார்கள். இப்புத்தகத்தின் விமர்சனம், ‘இந்தியா டுடே’ தமிழ்ப் பதிப்பில் வெளிவந்தது. விமர்சனம் செய்திருந்தவர் எழுத்தாளர் வண்ணநிலவன்.

கதைகளை அலசிவிட்டு, முடிவில், “நம்பிக்குக் கிடைத்திருக்கும் இலக்கிய அந்தஸ்திற்கு ஏற்ற கதைகளாக இவைகள் இல்லை” என முடித்திருப்பார்.

இலக்கிய அந்தஸ்தை அவரவரின் படைப்புகள்தான் தரமுடியுமே தவிர, தனி நபரல்ல என்பது ஒரு புறமிருக்க, நம்பியின் இலக்கிய அந்தஸ்த்தைக் கேள்விக்குள்ளாக்கிய வண்ணநிலவனின் அந்தஸ்த்தையும் கேள்விக்குள்ளாக்க முடியாதா?

ஒருமுறை அசோகமித்திரனைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். அப்பொழுது, அவர் எனக்கு ஒரு தகவல் சொன்னார். சில வருடங்களுக்கு முன்பு, ஃபிரான்ஸிலிருந்து ஓர் இலக்கிய அமைப்பு, இந்திய மொழிகளில் இருந்து மொழிக்கு இரு கதைகள் எனத் தேர்வு செய்து, அதை அவர்களது ஃப்ரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்து வெளியிட இருப்பதாகவும், அதற்குத் தமிழிலிருந்து இரு சிறுகதைகளைப் பரிந்துரை செய்யும்படி தன்னைக் கேட்டுக் கொண்டதாகவும், அதன்படி வண்ணநிலவனின் ‘எஸ்தர்’ சிறுகதையையும் நம்பியின் ‘மருமகள் வாக்கு’ சிறுகதையையும் பரிந்துரை செய்ததாகத் தெரிவித்தார். ஆக, வண்ணநிலவனின் இலக்கிய அந்தஸ்திற்கு அதிகமாக இல்லாவிட்டாலும், அவருக்கு இணையாகவே நம்பியின் இலக்கிய அந்தஸ்த்தை இதன் வாயிலாகத் தீர்மானித்துக் கொள்ளலாம்ம்.

2001இல், நம்பியின் இருபத்தைந்தாம் நினைவு தினத்தையொட்டி, நாகர்கோவிலில் ‘தமிழாலயம்’ சார்பாக ஓர் இலக்கியக் கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. அச்சமயம் நம்பியைப் பற்றிய புத்தகம் ஒன்றும் வெளியானது. அப்புத்தகத்தில் நம்பியின் சம கால எழுத்தாளர்கள் பலரின் பதிவுகள் இடம்பெற்றிருந்தன. எனது வேண்டுகோளின்படி அசோகமித்திரனும் ஒரு கட்டுரை எழுதிக் கொடுத்திருந்தார். நன்றாகவே வந்து கொண்டிருந்த அக்கட்டுரையின் இறுதிப் பகுதியில், “இலக்கிய வரலாறும் மனித வரலாறு போலப் தயை தாட்சண்யமற்ற ஒரு துறை. கிருஷ்ணன் நம்பிக்குப் பெரிய இடம் வரலாற்றில் இருக்கும் என்று என்னால் எண்ண முடியவில்லை.ஆனால், நான் அவரை மறக்க இயலாது” என முடித்திருப்பார்.

சுந்தர ராமசாமியின் கதை வேறு மாதிரி; பழத்தில் ஊசி ஏற்றுவது போல! சான்றாக, சுந்தர ராமசாமி கிருஷ்ணன் நம்பி பற்றி எழுதும்போது, “அவனுக்கு உள்ளூற ஒரு வருத்தம் இருந்தது. அதாவது க.நா.சு. என்னைப் பற்றிச் சொல்லியிருக்கிறார், ஜெயகாந்தனைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். ஆனால், ஆரம்பக்காலத்தில் அவனைப் பற்றி ஒன்றுமே சொன்னதே இல்லை. இது சம்பந்தமாக நம்பிக்கு வருத்தமும் ஏமாற்றமும் இருந்தன” என்கிறார். இதை ஒரு கட்டுரையில் அல்ல பல்வேறு கட்டுரைகளில் தொடர்ந்து திரும்பத் திரும்பச் சொல்லி, க.நா.சு. சொல்லாததால் நம்பி ஒரு முக்கியமான எழுத்தாளர் அல்ல என வாசகர்களுக்குச் சூசகமாக உணர்த்த முற்படுவார்.

ஆனால், உண்மையில் அது அப்படியல்ல. பத்திரிகை எதுவென எனக்கு நினைவில்லை. அக்கட்டுரையை நான் படித்திருக்கிறேன். சுந்தர ராமசாமியும் நிச்சயம் படித்திருப்பார். தமிழ்ச் சிறுகதை பற்றி க.நா.சு. எழுதிய கட்டுரை அது. அதில் 1950 – 60 களில் தோன்றி வெற்றியடைந்த எழுத்தாளர்களாக ஜெயகாந்தனையும் சுந்தர ராமசாமியையும் குறிப்பிட்ட அவர், அடுத்த வரியில் 1960 – 70 காலகட்டத்தில் தோன்றி ஓரளவு வெற்றியடைந்த எழுத்தாளர்களாக கி.ராஜநாராயணனையும் கிருஷ்ணன் நம்பியையும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆக, நம்பியின் இலக்கியப் பணியையும் ஸ்தானத்தையும் இந்த மூவர் மட்டுமே தீர்மானித்து விட முடியாது. நம்பியை நேரில் அறிந்த வேறு சில எழுத்தாளர்களும், அவரை அறியாத எழுத்தாளர்கள் பலரும் என்ன சொல்ல வருகிறார்கள் எனப் பார்ப்போம். இவற்றையெல்லாம் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும்.

ஜூலை 2001இல், ‘கணையாழி’, சுந்தர ராமசாமி சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டு, சுந்தர ராமசாமி பற்றிய பலரின் எழுத்தையும் வெளியிட்டிருந்தார்கள். ‘சுமைதாங்கியின் இளைப்பாறல்’ என்கிற தலைப்பில் எழுத்தாளர் ராஜேந்திர சோழன், சுந்தர ராமசாமியின் சிறுகதைகளை மதிப்பீடு செய்திருந்தார். அக்கட்டுரையின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பாராவைப் பார்ப்போம்.

“ஏற்கெனவே புதுமைப்பித்தனின் சிறுகதைகளை மட்டுமே அறிந்திருந்த நிலையில் தொ.மு.சி.யின் ‘சேற்றில் மலர்ந்த செந்தாமரை’, கிருஷ்ணன் நம்பியின் ‘காலை முதல்’, ஜெயகாந்தனின் ‘ஒரு பிடி சோறு’ வரிசையில் சுந்தர ராமசாமியில் ‘அக்கரைச் சீமையில்’ தொகுப்பும் படிக்கக் கிடைத்தது.

அப்போதைய வாசிப்பில், கிருஷ்ணன் நம்பியின் ‘காலை முதல்’ மட்டுமே அழுத்தமாக மனதில் பதிய, மற்றதெல்லாம் கதைப்பொருள் மட்டுமே நினைவில் தங்குவதாகி, காலப்போக்கில் அதுவும் மறையத் தொடங்கியிருந்தது.

ஆக, தொ.மு.சி., ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி போன்ற உயர் ஸ்தான ஜாம்பவான்களின் கதைகளுடன் நம்பியின் கதைகளையும் வாசித்தே இராஜேந்திர சோழன் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார். வரலாற்றில் இந்தப் பதிவு நடந்திருக்கிறது.

இதே அசோகமித்திரன், ‘கதை வளர்ந்த கதை’ என ஒரு கட்டுரையை ஆனந்த விகடனில் 14.11.2004 தேதியிட்ட இதழில் எழுதியிருக்கிறார். அதிலொரு இடத்தில், ‘கல்கிக்கு அடுத்த கட்டத்தில் வெகுஜன எழுத்தாளர்களாக அகிலன், சோமு, லட்சுமி, நா.பாரத்தசாரதி ஆகியோர் தோன்றிய காலத்தில்தான் சுந்தர ராமசாமி, கிருஷ்ணன் நம்பி, தொ.மு.சி.ரகுநாதன், ஜெயகாந்தன் போன்றோர் தீவிர எழுத்தாளர்களாக அடையாளம் கண்டுகொள்ளப்பட்டார்கள்’ எனவும் எழுதுகிறார்.

மேலும் தொடர்ந்து எழுதுகையில், ‘நல்ல படைப்புகளாக வா.வே.சு.ஐயர் எழுதிய ‘குளத்தங்கரை அரசமரம்’ , புதுமைப்பித்தன் எழுதிய ‘செல்லம்மாள்’, கல்கி எழுதிய ‘கேதாரியின் தாயார்’, ராஜாஜி எழுதிய ‘தேவயானி’, க.நா.சுப்பிரமணியத்தின் ‘தூக்கம்’, தொடங்கி சுந்தர ராமசாமியின் ‘பிரசாதம்’, ஜெயகாந்தனின் ‘பிணக்கு’, இந்திரா பார்த்தசாரதியின் ‘தொலைவு’, கிருஷ்ணன் நம்பியின் ‘மருமகள் வாக்கு’, வண்ணநிலவனின் ‘எஸ்தர்’, கந்தசாமியின் ‘எங்கள் ஊர்’, சுஜாதாவின் ‘முனுசாமி – 1,2,3,…’ பிரபஞ்சனின் ‘மீன்’, திலீப்குமாரின் ‘தீர்வு’, இன்னும் (குறைந்தது) ஐம்பதாவது அடுக்கிக் கொண்டே போகலாம்’ எனக் கூறுகிறார்.

ஆகப் பெரிய சிறுகதை எழுத்தாளர்களின் கதைகளுடன், கிருஷ்ணன் நம்பியின் கதையைத் தேர்வு செய்யும் அசோகமித்திரன், ஏன் நம்பியின் இடத்தைப் பற்றிக் கவலைப்படவேண்டும்?

இதற்கான விடையை, ‘புதிய புத்தகம் பேசுது’ பத்திரிகையின் ஜூலை 2013 இதழில், ம.மணிமாறன் எழுதிய ‘விடுபட்ட சொற்கள்’ கட்டுரையை முழுவதுமாகப் படித்தால் சற்று அறிந்து கொள்ளமுடியும். இக்கட்டுரையில் கு.அழகிரிசாமி, கிருஷ்ணன் நம்பி போன்ற இலக்கியவாதிகள் இலக்கிய உலகில் புறக்கணிக்கப்பட்ட அவலத்தைச் சொல்லும்போது, இந்த இரு எழுத்தாளர்களின் மேதைமையையும் மிக அழகாக விவரித்துக் கூறியுள்ளார். அதில் கிருஷ்ணன் நம்பி பற்றி அவர் எழுதியிருப்பவற்றிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்ட சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

‘ஒரு படைப்பாளியின் வலிமையை ஒரு கதையிலேயே கண்டறிய முடியும். பி.எஸ்.இராமையாவின் ‘நட்சத்திர குழந்தைகள்’-க்குச் சமமான குழந்தைகளின் மன உலகை நுட்பமாகக் கட்டமைத்த கதைகளை விரல் விட்டு எண்ணி விட முடியும். நட்சத்திர குழந்தைகளுக்கு அடுத்து, நம்பியின் ‘நீலக்கடல்‘ அப்படியான அழகான கதை. சிறுகதையின் இலக்கணத்தை உடைத்த கதை இது.

அடுத்து, ‘படைப்பை மதிப்பிடும்போது, இரண்டு அளவுகோல்களை காலந்தோறும் இலக்கிய உலகம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. ஒன்று, ரசனையின் அடிப்படையிலும் மற்றொன்று விமர்சனக் கூறுகளை கொண்டும். நம்பியின் படிக்கக் கிடைக்கிற பத்தொன்பது கதைகளும் ஆச்சரியம் கொள்ளத்தக்க வகையில், இவ்விரண்டு எல்கைக்குள் உறைந்தும், சில சமயங்களில் எல்கைகளை உடைத்துக் கொண்டு வெளிப்படுகிறது. வாசித்தறிந்தால், இந்த முடிவிற்கு எலோரும் வருவர் என்பதில் துளியும் எனக்குச் சந்தேகமில்லை’ என்கிறார் மணிமாறன்.

‘இருப்பின் மீது அசாத்தியமான கேள்விகளை எழுப்புகிறவன்தானே கலைஞன்? கிருஷ்ணன் நம்பி மகா எழுத்துக் கலைஞன்.’

‘மேதைகளை அவர்களின் மேதைமையை நிரூபிக்க எவ்வளவு மெனக்கெட வேண்டியிருக்கிறது பாருங்கள்’ எனக் கூறும் மணிமாறன், கட்டுரையின் கடைசியில், ‘கண்ணுக்குத் தெரியாத நூதனமான அதிகாரக் குழுக்களால் புறக்கணிப்புக்குள்ளான மாபெரும் எழுத்துக் கலைஞர்கள் அவர்களென அவர்கள் சிறுகதைத் தொகுப்பினைக் கற்ற எவரும் அறிந்திருப்பர். காலத்திற்குத் தரப்பட்ட மாபெரும் கொடைகள் அவையாவும் என்பதை வாசித்தறியுங்கள் வாசகரே!’ என அந்த நீண்ட கட்டுரையில் எழுதியிருந்தார்.

இதில் மணிமாறன், நம்பியை எழுத்தின் வாயிலாக மாத்திரமே அறிந்தவர் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். மணிமாறன் எழுதியிருப்பதை, இடத்தைப் பற்றிப் பேசும் எழுத்தாளர்களும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இதுவும் ‘புதிய புத்தகம் பேசுது’ இதழில் வெளிவந்ததுதான். பிரபல எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், 2006 மார்ச் இதழில், இலக்கிய அப்பாவிகள் என ஒரு கட்டுரை எழுதியிருக்கார். அந்த இலக்கிய அப்பாவிகள் வரிசையில் தனுஷ்கோடி ராமசாமி, கி.ராஜநாராயணன், வண்ணநிலவன், கந்தர்வன் போன்றோரின் கூட்டத்தில் கிருஷ்ணன் நம்பிக்கும் இடமுண்டு.

தமிழ்ச்செல்வன் சொல்கிறார், ‘சத்யஜித் ரே, மிருணால் சென், கெளதம் கோஷ் போன்ற வங்க இயக்குநர்கள் மத்தியில் சந்தேகத்துக்கு இடமின்றி, ஓர் உணர்ச்சி வெள்ளமான ரித்விக் கட்டக்தான் அப்பாவி என்று நான் சொல்லத் தேவையில்லை. எந்த திட்டமிடலும் இல்லாதது போன்ற இயல்புதன்மையுடன் உணர்ச்சிகளின் இறுக்கப்பட்ட தொகுப்பாக ‘மேக தாக தாரா’வும், ‘நாகரி’க்கும், ‘கோமல் கந்தார்’-ரும் அவரிடமிருந்து வந்தன. அந்த நேரத்தில் ரித்விக்கின் ஞாபகம் பொருத்தமாக வந்து சேர்ந்தது சரிதான்.’

‘அந்தத் தலைமுறையின் இன்னொரு சிறந்த அப்பாவியாக கிருஷ்ணன் நம்பியைச் சொல்லவேண்டும். அவருடைய ‘சுதந்திர தினம்’ கதையும், ‘கணக்கு வாத்தியார்’ கதையும் குழந்தைகளின் உலகத்தை அதன் சகல நுட்பங்களோடும் படம்பிடித்த கதை எனலாம். பொப்புத்தி, ஆதிக்க கலாச்சாரம் என்று கலாச்சார தளத்தில் மக்களின் மனங்களைத் தகவமைக்கும் அரசியலைப் பற்றியெல்லாம் இன்று நாம் பேசத் தவங்கியுள்ளோம். இதையெல்லாம் விளக்கமாகப் புரிய வைப்பதற்கு கிருஷ்ணன் நம்பியின் ‘மருமகள் வாக்கு’ ஒரு கதை போதும்.’

‘படித்துறை’ என்றொரு சிறு பத்திரிகை. அதில் ஒரு இதழில், களந்தை பீர் முகமது ‘மோகினி’ என்றொரு சிறுகதை எழுதியிருந்தார். அக்கதையைப் படித்த பிரபல எழுத்தாளர் ஜெயந்தன், மறு இதழில் (ஜூலை 2004) ஆசிரியருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், மோகினி கதையைப் பற்றி ஒரு குறிப்பு. ‘களந்தை பீர் முகமது தனது கதை சொல்லும் கலையில் அடுத்த கட்டத்திற்கு வெற்றிகரமாக நகர்ந்திருக்கிறார். ஒரு நிதர்சனத்தை உடைத்துக் கொண்டு உள்ளே போய் வேறொரு அசலான நிதர்சனத்தை நிறுவியிருக்கிறார்.

இக்கதையில் அவரே மற்றொரு கட்டத்திற்கு நகர்வதற்கு ஒரு சாத்தியம் இருந்திருப்பதும் உண்மைதான். அதாவது கதைச்சொல்லியின் மொழி. இங்கே கதைசொல்லி, தனது பத்து அல்லது பன்னிரெண்டு வயது அனுபவத்தை தனது நாற்பதுக்கு மேற்பட்ட வயதில் நினைவு கொண்டு தனது நாற்பது வயது மொழியில் சொல்லியிருக்கிறார். இது நமது எழுத்தாளர்களில் மிகப் பெரும்பாலோர் செய்து வருவதுதான். அது அவ்வளவு சுலபமான கலையும் அல்ல. இந்தக் கலையில் கொடி கட்ட பறந்தவர் கிருஷ்ணன் நம்பி. சிறுவர்கள் மற்றும் மனநிலை குன்றியவர்கள் கதையை அவர்கள் பாஷையிலேயே அச்சு அசலாக எடுத்து வைத்தவர் அவர்தான்.’

ஆக, சிறுகதை வடிவத்தின் ஏதோ ஒரு பகுதியில் கொடி கட்டி பறந்தவருக்கு இலக்கிய உலகில் எங்கோ ஓர் இடத்திலாவது ஒரு ஸ்தானம் கிடைக்காமலா போய்விடும்.

இதுவரை எழுதியவற்றில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய அம்சம், இவர்கள் அனைவரும் நம்பியுடன் எவ்விதத் தொடர்பும் கிடையாதவர்கள் மாத்திரமல்ல; நம்பியை நேரிலேயே பார்ப்பதற்குக்கூட சந்தர்ப்பம் அமையப் பெறாதவர்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஆனால் நம்பியை அறிந்த ஆ.மாதவன் சொல்கிறார், ‘தமிழில் – கொஞ்சமாக எழுதி புகழொளி சேர்த்த மெளனி, கு.பா.ராஜகோபாலானைப் போல கிருஷ்ணன் நம்பியும் மறக்க முடியாத அழித்து எழுத முடியாத உன்னத ஸ்தானத்துக்குரியவரே!’ இப்படி எழுத எவ்வளவு பெரிய மனம் வேண்டும்!

இப்பொழுது சுஜாதாவின் பதிவைப் பார்ப்போம். தனக்குப் பிடித்த 10 சிறுகதைகள் பற்றி அவர் குறிப்பிட்ட பதிவில், நம்பியின் ‘மருமகள் வாக்கு’ கதையைக் குறிப்பிட்டுப் பதிந்துள்ளது: “மருமகள் வாக்கு – இந்தக் கதை சிரஞ்சீவி. சாவே கிடையாது. இந்த ஒரு கதையினாலேயே, நம்பி தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம் பெறுவார். உலக இலக்கிய வரலாற்றிலேயே கூட இடம் உண்டு.” இவரும் நம்பியை நேரில் அறிந்தவர் அல்ல.

“இப்போதுதான் முதல்முறையாக கிருஷ்ணன் நம்பியைப் படிக்கிறேன். குமரி மாவட்டம் என்றாலே எனக்குக் கொஞ்சம் தயக்கம் உண்டு. அந்தத் தயக்கத்துடனேதான் அவரை அணுகினேன். ‘மருமகள் வாக்கு’ என்ற ஒரே கதையில் தெரிந்துவிட்டது கிருஷ்ணன் நம்பி உலகின் மகத்தான சிறுகதை ஆசிரியர்களில் ஒருவர் என்று.” இது, தினமணியில் சாரு நிவேதிதா எழுதிய பழுப்பு நிறப் பக்கங்கள் கட்டுரையில் இடம்பெற்றிருக்கிறது.

ஆக விருப்பு வெறுப்பில்லாத தமிழ்ப் படைப்பாளிகள் பலர் நம்பிக்கு இலக்கிய உலகில் ஓர் இடத்தை அளித்தே வந்திருக்கிறார்கள். என்ன? அசோகமித்திரனைப் போலவோ, சுந்தர ராமசாமியைப் போலவோ, ஜெயகாந்தனைப் போலவோ முன் வரிசையில் இடமில்லாமல் போகலாம். மணிமாறன் அவரது கட்டுரையில் சொன்னதுபோல், கண்ணுக்குத் தெரியாத நூதனமான அதிகாரக் குழுக்களால் புறக்கணிப்புக்கு ஆளாகிப் பின்னுக்கு எங்கோ ஒரு மூலைக்குத் தள்ளப்பட்டிருக்கலாம் என்றாலும் அந்த மூலையிலும் அவருக்கு நிச்சயமாக ஒரு இடமுண்டு என்பதை மேற்கூறிய படைப்பாளிகளின் பதிப்புகள் உணர்த்தத்தான் செய்கின்றன.

– கிருஷ்ணன் வெங்கடாசலம்