32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

லோகா: 10 நாட்களில் 100 கோடி வசூல்

Dinesh R சேலம் Published: 05/09/2025 3 நிமிட வாசிப்பு Updated: 09/09/2025 அயல் சினிமா
எழுத்து அளவு:

துல்கர் சல்மானின் வேஃபேரர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளிவந்த லோகா: சாப்டர் 1 – சந்திரா உலகம் முழுவதும் பார்வையாளர்களின் உற்சாக வரவேற்பைப் பெற்று, 10 நாட்களில் 100 கோடி வசூலைக் குவித்து பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது. இப்படம் ஒரு புதிய சூப்பர் ஹீரோ உலகை அறிமுகப்படுத்தி, மலையாள சினிமாவை உலகளவில் கொண்டு சென்றுள்ளது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

வேஃபேரர் ஃபிலிம்ஸ் பேனரில் ஏழாவது படைப்பாக உலகத் தரத்துக்கு இணையாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மலையாளப் படம், கேரளாவின் எல்லைகளைத் தாண்டி அனைத்துப் பக்கங்களிலிருந்தும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழுவினர் அனைத்து மாநிலங்களிலும் ஊடக நண்பர்களையும், ரசிகர்களையும் சந்தித்து, நன்றி தெரிவித்து வருகின்றனர். சென்னையிலும் பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்களைச் சந்தித்து அவர்களோடு கலந்துரையாடி தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வினில் பேசிய டப்பிங் பார்வையாளர் RB பாலா, “வழக்கமாக மற்ற மொழி படங்களை வாய்ஸ் டப்பிங் செய்யும் போது சவாலாக இருக்கும். நான் 30 வருடங்களாக இந்தத் துறையில் இருக்கிறேன். இயக்குநர் டோமினிக் வித்தியாசமானவர், முதலில் செய்து தந்த டப்பிங்கை வேண்டாம் என்று சொல்லி விட்டார். அவர் இன்னும் கொஞ்சம் பேஸ் வேணும், மணிரத்னம் ஸ்டைல் வேணும் என்றார். முழுமையாக ரீ-டப்பிங் செய்து தந்தேன். அவருக்குப் பிடித்திருந்தது. துல்கருடன் முன்னரே வேலை செய்துள்ளேன், ஒரு முறை தான் டயாலாக் கேட்பார், ஒரு டேக்கில் முடித்து விடுவார். என்னை அசரவைத்த நடிகர். இந்தப்படத்தில் ஆச்சரியப்பட வைத்தது, கேமராமேன் தான், ஹாலிவுட் தரத்துக்குச் செய்துள்ளார். கல்யாணியுடன் மரைக்காயர் படத்தில் வேலை பார்த்துள்ளேன். இந்தப் படத்தில் மிரட்டியுள்ளார். நஸ்லென் சின்னச் சின்ன டயாலாக்குகளிலும் கச்சிதமாகச் செய்வார். அவர் கண்ணைக் காட்டினாலே அத்தனை உணர்வுகள் இருக்கும். எனக்கு சமீபத்தில் அதிக திருப்தி தந்த படம் இது” என்றார்.

நாயகன் நஸ்லென், “நன்றி. எனக்கு என்ன சொல்ல வேண்டும் என்றே தெரியவில்லை. அந்தளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் லைஃபில் என்னென்னவோ நடக்கிறது. நான் நினைத்துப் பார்க்காததெல்லாம் நடக்கிறது. காலையில் சூர்யா சார், ஜோதிகா மேடம் ஃபோன் செய்து பாராட்டினார்கள். பலரும் பாராட்டி வருகிறார்கள். எல்லோருக்கும் நன்றி. எங்கள் படத்தைப் பார்த்துப் பாராட்டிய அனைவருக்கும் நன்றி” என்றார்.

கல்யாணி பிரியதர்ஷன், “லோகாவிற்கு இந்தளவு பாராட்டு, வரவேற்பு கிடைக்கும் என நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. நீங்கள் ஆதரவு தந்தததால் தான், இந்த அளவு வெற்றி கிடைத்துள்ளது. அப்பாவிடம், ‘ஆக்சன் பண்ணப்போகிறேன்’ என்றவுடன், ‘நீயா ஆக்சன் பண்ணபோறே? கால் கையெல்லாம் ஒழுங்காக பார்த்துக் கொள்’ என்றார். படம் 100 கோடி வசூலித்துள்ளது” என்றார்.

நடிகர் தயாரிப்பாளர் துல்கர் சல்மான், “நான் இந்தப்படத்தில் நடிக்கவில்லை, ஒரு டீச்சராகப் பசங்களைக் கூட்டி வந்துள்ளேன். நான் எந்த மொழியில் படம் செய்தாலும், இங்கு படம் பிரஸ்க்கு போட்டால், படம் நன்றாக இருந்தால், பிரஸ் உடனே பாராட்டுவார்கள் கொண்டாடுவார்கள். அவர்களுக்கு நன்றி. நாங்கள் இதை கேரளா அளவில் சின்னதாகத் தான் ஆரம்பித்தோம். இப்போது எல்லா இடத்திலும் பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது. இதில் உழைத்த எல்லோரும் அவர்கள் படம் போல உழைத்தார்கள். இந்த வெற்றி அவர்களுக்கானது தான். கல்யாணியைத்தவிர இந்தப் படத்திற்கு வேறு யாருமே செட் ஆகமாட்டார்கள் என்ற அளவிற்கு அவர் பொருத்தமாக இருந்தார். கதை சொன்ன மறுநாளே அவர் ட்ரெய்னிங் எடுக்க ஆரம்பித்துவிட்டார். நாங்கள் நினைத்ததை விட சிறப்பாகச் செய்துள்ளார். நேரடித் தமிழ்படம் போல இப்படத்தை டப்பிங் செய்து தந்த பாலா சாருக்கு நன்றி. இந்த அளவு வரவேற்பு நாங்களே எதிர்பார்க்கவில்லை. இப்படத்தை ஐந்து பாகமாக எடுக்கத் திட்டமிட்டுள்ளோம். நான் எத்தனையோ படங்கள் நடித்துள்ளேன். இந்த அளவு கிரேஸ் பார்க்கவில்லை. அதற்கான மரியாதை உடன் அடுத்தடுத்த பாகங்களை எடுப்போம். லோகா மாதிரி இன்னும் அடுத்தடுத்துப் படங்கள் தருவோம். என் பேனரில் நான் மட்டுமே நடிக்க வேண்டும் என எப்போதும் நினைத்ததில்லை. எனக்கு சினிமா அவ்வளவு பிடிக்கும், என் பேனரில் மற்றவர்கள் நடிக்கும் படங்களும் தயாரித்து வருகிறோம்” என்றார்.

ஆகஸ்ட் 28 ஆம் தேதி உலகமெங்கும் வெளியான இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.